சைக்கிள் ஓட்டி பழகிய மாணவி இரு நாட்களாக அடைத்து வைத்து கற்பழிப்பு!


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திடீர்நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது 15 வயது மகள் சத்திரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் தனது வீட்டின் அருகிலேயே சைக்கிள் ஓட்டி பழகி வந்தார்.
இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் கருப்புசாமி (வயது19). இவர் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சைக்கிள் ஓட்டி பழகி வந்த மாணவியை கருப்புசாமி தனது வீட்டிற்கு தூக்கி சென்று பலவந்தமாக கற்பழித்துள்ளார். தொடர்ந்து 2 நாட்கள் அவரை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தார். பின்னர் அவரை தூக்கி சென்று வீட்டின் அருகே விட்டு சென்று விட்டார்.
இது குறித்து மாணவி தனது தந்தையிடம் கூறினார். ரத்தினம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியை ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அமைதிப் படைக்கு தரக்குறைவான உணவு : இருவருக்குச் சிறை


எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கு தரக்குறைவான உணவினை வழங்கிய குற்றச்சாட்டில், சம்பவம் நடைபெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ கே குப்தா மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் எஸ் எஸ் காடியன் ஆகியோருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்திடம் போதுமான உணவுப்பொருட்கள் அந்த நேரத்தில் இருந்தும் அவ்விரு உயர் அதிகாரிகளும், தேவையில்லாமல் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி மற்றும் பழங்களை கோவாவில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கினர்.

மூன்று டன் இறைச்சி தேவைப்பட்டபோது, அதிகமாக ஐந்து டன் இறைச்சியை அவர்கள் வாங்கினர்.

இவ்வாறு பல வகைகளில் விதிகளுக்கெதிரான முறைகேடுகளில் ஈடுபட்டு அவ்வதிகாரிகள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினர் என சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வழக்குக்களுக்கான சிறப்பு நீதிபதி பரமராஜ் புதனன்று தீர்ப்பளித்திருக்கிறார்.

எனவே இருவருக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி.

தரக்குறைவான இறைச்சியினை இராணுவத்திற்கு வழங்கியதற்காக கோவாவிலுள்ள மர்கோவா நகரில் இயங்கும் நிறுவனமான கோஸ்டாவிற்கு ரூ 30,000 அபராதம் விதித்தார் அவர்.

ஆனால் இரு அதிகாரிகளும் மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

காதலிக்க மறுத்த பெண் தீ வைத்து எரித்து கொலை; காதலன் வெறிச்செயல்


நாகர்கோவில்: காதலிக்க மறுத்த பெண்ணை, வாலிபர் ஒருவர் டீசல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அழிக்கால் பிள்ளைத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர். மீனவ கிராமம் என்பதால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் கேரளாவில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். பீட்டரும் கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இந்த பகுதியில் பள்ளிக்கூட வசதி இல்லாததால் அவரது 16 வயது மகள் சுபானி பக்கத்து கிராமமான முட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தாள்.

பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக தினமும் முட்டத்திற்கு சென்று வந்த சுபானிக்கு அந்த பகுதியை சேர்ந்த எவரெஸ்ட் 23 என்ற வாலிபரோடு காதல் ஏற்பட்டது. சுபானி கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு படிந்து வந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் சுபானியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் சுபானியின் படிப்பை நிறுத்திய அவளது பெற்றோர் அவளை உறவினர் வீட்டில் சில காலம் தங்க வைத்திருந்தனர்.

அங்கு அவளது உறவினர்கள் அறிவுரை கூறி சுபானியின் மனதை மாற்றியிருக்கிறார்கள். சுபானியும், எவரெஸ்ட் உடனான தொடர்பை துண்டித்து விட்டு பெற்றோருடன் அவரது பிள்ளைத்தோப்பு வீட்டில் வசித்து வந்தார். சுபானி தன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்து எவரெஸ்ட்க்கு தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த 25ஆம் தேதி எவரெஸ்ட் தன்னை காதலிக்க மறுக்கும் சுபானியின் வீட்டு குளியல் அறையில் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கே வந்த சுபானியின் கையை பிடித்து இழுத்திருக்கிறான். சுபானி சத்தம் போடவே விசயம் வெளியே தெரிந்தால் ஊரில் மானம் போய்விடும் என்று, மீன்பிடி படகுக்கு பயன்படுத்துவதற்காக வைத்திருக்கும் டீசலை சுபானியின் மேல் ஊற்றி தீவைத்து விட்டு ஓடி விட்டான். சுபானியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுபானியை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுபானி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பறிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் வெள்ளிச்சந்தை காவல் நிலைய போலீசார் கூறுகையில், சம்பவம் நடந்த மறுநாள் காலையிலேயே எவரெஸ்டை கைது செய்து விட்டோம். அவனிடம் விசாரித்ததில், தனக்கு கிடைக்காத சுபானி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று டீசலை ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். எவரெஸ்ட் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தோம் அதை இப்போது கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம் என்றார்கள்.

 

லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது’


இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லண்டனில் இருந்து வருகை தந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வற்றாப்பளையில் உள்ள தனது பெற்றாருடைய வீட்டில் இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இருக்கின்றார்களா என வீட்டிற்கு வந்து இருவர் முதலில் விசாரித்துவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்த 6 பேர் அவரைக் கைது செய்து கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள் காலையில் வவுனியாவில் உள்ள தமது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி கூறியதற்கமைய இன்று காலை வவுனியாவுக்குச் சென்றபோது, அவரை மேல் விசாரணைக்காக உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு செல்வதாகவும் சனிக்கிழமை வந்து அவரைப் பார்வையிடலாம் என்றும் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய மயில்வாகனம் கணேசரூபன் என்றும், நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பிரித்தானிய பிரஜை என்றும் 18 வருடங்களின் பின்னர் தாயகத்திற்கு அதுவும் ஆலய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்து, அடுத்த வாரமே தாங்கள் லண்டன் திரும்பிச் செல்லவிருந்த வேளையிலேயே, இவ்வாறு தனது கணவன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய மனைவி சுகந்தினி தெரிவித்தார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிட்டிருப்பதுடன், பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பிள்ளையாரடியில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை


மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரினார்கள்.

குறித்த ஆர்பாட்டம் தொடர்பாக காவல்துறை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொதுத் தொல்லை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரினர்.
காவல் துறையின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ், சிலை வைப்பதற்து தடை உத்தரவை பிறப்பித்ததோடு அதற்கான வேலைகளையும் நிறுத்துமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் சிவானந்தனுக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது : அமெரிக்காவில் ஈழத்தமிழருக்குக் கிடைத்த கெளரவம்


ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளைமாளிகையினால் விழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று 29ஆம் திகதி காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒரவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும், இவருடன் சேர்த்து 11 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.

சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார். தனது முயற்சியினால் “சிவானந்தன் ஆய்வு மையம்” என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாபநோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.