மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது கலெக்டர் உத்தரவு.


வன்னியர் சங்கத்தின் மாமல்லபுரம் சித்திரை திருவிழா நடந்த போது அதற்கு சென்றவர்களுக்கும் மரக்காணக்கம் பகுதியில் உள்ளவர்களுடனும் ஏற்பட்ட கலவரத்தால் இருவர் கொல்லப்பட்டனர், இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சினைகளில் டாக்டர் இராமதாஸ், காடுவெட்டி குரு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று டாக்டர் இராமதாஸ் சிறையிலிருந்து விடுதலையானார், இந்தநிலையில் மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

எமக்கு விடுதலை கிடைப்பதற்கு கருணாநிதி வாய்திறக்காது விட்டாலே போதும் – ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் அரசின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல, அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும் எதிர்​பார்ப்போடு இருக்கிறார்கள். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையிலும், வேலூர் பெண்கள் சிறையில் நளினியும், மதுரை மத்தியச் சிறையில் ரவிச்சந்திரனும் அடைக்கப்​பட்டிருக்கிறார்கள்.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் உத்தரவுபெற்று 15 நாள் பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். இப்போது மீண்டும் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை​யில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 

வழக்கறிஞர் மூலம் ரவிச்சந்திரன் இந்திய ஊடகம் விகடன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

” உங்கள் விடுதலைக்கான சாத்தியங்கள் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?”
”கடந்த 13 ஆண்டுகளாக நிறைய மனுக்களை தமிழக முதல்வர்களுக்கு அனுப்பிவிட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் கட்சியைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரை விடுதலைசெய்ய வேண்டும் என்பதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஏழு ஆண்டுகள் மட்டுமே தண்டனையை முடித்த 1,405 கைதிகளை விடுதலைசெய்தார்.

 

அப்போது நாங்கள் 17 ஆண்டுகள் தண்டனையை நிறைவுசெய்திருந்தோம்.

 

ஆனால், சி.பி.ஐ. வழக்கு என்ற நொண்டிச் சாக்கு சொல்லி எங்கள் நால்வரை மட்டும் விடுதலை செய்யவில்லை.

 

இப்போதைய முதல்வரைப் பொறுத்தவரையில், அதிகாரிகள் அந்த மனுக்களை முதல்வரின் பார்​வைக்கே கொண்டுசெல்வது இல்லை.

 

எங்கள் நால்வரின் விடுதலை இப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கையில்தான் இருக்கிறது. கருணாநிதியை நாங்கள் நம்புவதாக இல்லை.”

 

”சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று இப்போது கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளாரே?”
”முதல்வர் ஜெயலலிதா தன் அமைச்சரவையைக் கூட்டி அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 

கடந்த 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது மூன்று தமிழர்களைத் தூக்கிலிடுவது என டெல்லி முடிவு​செய்தது. அவர்கள் அளித்த கருணை மனுக்கள் மீது கருத்துக் கேட்டு, கருணாநிதி தலைமையிலான அரசுக்கு ஆவணங்களை அனுப்பிவைத்தது மத்திய அரசு.

 

ஆனால், அப்போது அமைச்சரவையைக் கூட்டி இதே​போன்ற தீர்மானத்தை ஏன் அவர் நிறை​வேற்றவில்லை?

 

இதே மூன்று தமிழர்களும் நளினியும் கடந்த 2000, 2001-ம் ஆண்டு​களில் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியிடம் கருணை மனு அளித்தனர். சட்டப்படி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்காமல், நேரடியாக கவர்னருக்கு அனுப்பினார் கருணாநிதி.

 

கவர்னரோ நால்வரின் கருணை மனுக்​களையும் நிராகரித்து தூக்குத் தண்டனையை உறுதிசெய்தார். இதை எதிர்த்து நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ‘அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கருணை மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்யும்படி கவர்னருக்கு உத்தரவு பிறப்பித்தது.

 

இந்த உத்தரவுக்குப் பின், வேறு வழியின்றி கருணாநிதி தன் அமைச்சரவையைக் கூட்டி, நளினியின் தூக்குத் தண்ட​னையை மட்டும் ரத்துசெய்தார். கருணாநிதி அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று கவர்னரும் அப்படியே ஆணை பிறப்பித்தார்.

 

அதிகாரத்தில் இருக்கும்போது, மூன்று தமிழர்களுக்கு ஆதரவாக முடிவெடுக்காத கருணாநிதி, இப்போது இப்படி கோரிக்கை வைப்பதன் நோக்கம், அவர்கள் மீதான அக்கறையில் அல்ல. தான் வாய் திறந்தால் ஜெயலலிதா எதிர்மறையாகத்தான் செய்வார் என்ற கெடு எண்ணத்தில்தான்.

 

அதனால், அவர் வாய் திறக்காமல் இருந்தாலே போதும். அந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமின்றி, எங்கள் நால்வருக்கும் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது.”

 

 

அதிக அழகுக்கு ஆசைப்பட்ட பெண்ணின் நிலை!


பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது வழக்கம்தான்.

அது போல் தன் முகத்தை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் சமையல் எண்ணெயையும் சிலிகானையும் ஊசி மூலம் முகத்தில் ஏற்றிக்கொண்ட மாடல் அழகி ஒருவரின் முகம் வீங்கிப் போய் விகாரமாக மாறிவிட்டது.

 

 

இதனால் அப்பா, அம்மாவுக்கே அவரை அடையாளம் தெரியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து முகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியாது என்று டாக்டர்களும் கை விரித்துவிட்டனர்.

 

தென் கொரியாவை சேர்ந்தவர் ஹங் மியாகு. இவருக்கு இப்போது வயது 48. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அழகாக இருந்தவர் மாடலிங் துறையில் இறங்கினார். பேஷன் ஷோ, விளம்பரங்களில் பரபரப்பாக வலம் வந்தார். முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள அவருக்கு ஆசை ஏற்பட்டது. முகத்தில் கொழுப்பு சத்து ஏறினால் மேலும் அழகாகும் என்று யாரோ சொன்னதை நம்பி தனது 28 வயதில் சுய அழகு சிகிச்சையில் இறங்கினார்.

 

அதுவும் கொடூரமான சிகிச்சை முறை. கடையில் குறைந்த விலையில் கிடைக்கும் சிலிகான் ஜெல்லையும் சமையல் எண்ணெயையும் மாறி மாறி சிரிஞ் மூலம் முகத்தில் ஏற்றிக் கொள்வார். நாளாவட்டத்தில் குண்டான கன்னங்கள், வாளிப்பான சதையுடன் முகம் பளபளப்பாகவும் மாறியது. வியந்து போனவர் சுய அழகு சிகிச்சையை அடிக்கடி எடுத்துக் கொண்டார். சிறிது காலத்தில் ஜப்பான் சென்றவர் அங்கும் சுய அழகு சிகிச்சையை மேற்கொண்டார்.

 

சில ஆண்டுகளுக்கு பிறகு, அவரது முகத்தில் விபரீத மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. ஆங்காங்கே சதைகள் தொங்கின. கண், வாய் அருகில் உருண்டை உருண்டையாக சதைகள் சேர்ந்தன. ஆனால், ஊசி சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஹங் மியாகு தள்ளப்பட்டார். அதற்கு அடிமையாகவே மாறினார். 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விபரீத சுய சிகிச்சையை மேற்கொண்டதன் விளைவு.. அவரது முகம் முழுவதுமாக உருக்குலைந்து விகாரமாக மாறியது. பெற்ற அப்பா, அம்மாவால்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பயங்கரமாக அவரது முகம் மாறிவிட்டது.

 

வாய்ப்புகள் அனைத்து பறிபோய், அனைவரும் கேலியும் கிண்டலும் செய்தனர். உணவுக்கூட வழியில்லாததால் பழைய பேப்பர், இரும்பு கடையில் வேலைக்கு சேர்ந்தார். ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் கருணை தொகை, பழைய கடையில் கொடுக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டினார்.

 

இதற்கிடையில், அவரது கடந்த கால பயங்கரம் பற்றிய தகவல்கள் டிவிக்களில் ஒளிபரப்பாயின. அதில் பேட்டியளித்த ஹங் மியாகு, தனது சிகிச்சைக்கு உதவும்படி கதறினார். நாடு முழுவதும் இருந்தும் நிதியுதவிகள் குவிந்தன. ஆஸ்பத்திரிக்கு சென்று தன் நிலைமை பற்றி எடுத்து கூறினார். அவரது முகம் மற்றும் கழுத்து பகுதியில் டாக்டர்கள் 10 முறை ஆபரேஷன் செய்து சிலிகான் மற்றும் தேவையற்ற கொழுப்பு, கட்டிகளை அகற்றினர். ஆனாலும், விகார தோற்றம் இன்னும் மாறவில்லை. அவரது முகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் என் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்தவில்லை – மஹிந்தவும், கோத்தாவுமே செய்தார்கள்!


2007 ஆம் ஆண்டு கொழும்பில் தன் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக அன்றைய இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின்படி தன் மீது அந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொன்சேக்கா கூறியுள்ளார்.

 

குண்டு தாக்குதல் தொடர்பாக வாக்;குமூலம் ஒன்றை பெறுவதற்காக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொன்சேக்காவை தொடர்பு கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இவ்வாறே அந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.

 

அதிகாரி – பொன்சேக்கா அவர்களே உங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதல் குறித்து சந்தேகிக்க கூடிய எவராவது உள்ளனரா?.

 

பொன்சேக்கா – ஆம் ஆம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றதா?.

 

அதிகாரி – இந்த தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்புகிறீர்களா?.

 

பொன்சேக்கா- விடுதலைப்புலிகள் அந்த காலத்தில் காட்டில் இருந்தனர். அவர்களை காட்டுக்குள் நான் மட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.

 

அதிகாரி – இந்த தாக்குதல் குறித்து நீங்கள் சந்தேகிப்பது பிரபாகரனையா? பொட்டம்மானையா?.

 

பொன்சேக்கா – நான் ஒரு தடவை கூறினே; அவர்கள் காட்டில் உள்ளனர் என்று.

 

அதிகாரி – அப்படியொன்றால் விடுதலைப்புலிகளின் நீங்கள் யாரை சந்தேகின்றீர்கள்?.

 

பொன்சேககா- எனக்கு விடுதலைப்புலிகளில் உள்ள எவர் மீதும் சந்தேகமில்லை. இதில் சந்தேக நபர்கள் இல்லை. இதனை ஜனாதிபதியும் கோத்தபாயவுமே செய்தனர். நாட்டின் அதிஷ்டம் நான் உயிர் தப்பினேன். இல்லை என்றால் இவர்கள் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். யுத்தம் செய்வது மாத்திரமல்ல அதனை விற்று திண்பார்கள். யுத்தத்தை நான் முடிவுக்கு கொண்டு வந்து விடுவேன் என்று இவர்கள் அப்போதிருந்தே பயத்தில் இருந்தனர். அது அவர்களுக்கு நஷ்டம்.

 

பொன்சேக்காவின் கருத்துக்களை அடுத்து அந்த அதிகாரி எதனையும் பேசாது மௌனமாக இருந்துள்ளார்.

 

பொன்சேக்கா – வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?.

 

அதிகாரி – இல்லை சார் இந்த விடயம் சம்பந்தமாக உங்களிடம் வாக்குமூலத்தை பெற வேண்டும் என எனக்கு உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்தது. அதுதான் உங்களிடம் பேசினேன். நீங்கள் வாக்குமூலத்தை வழங்க முடியுமா?.

 

பொன்சேக்கா – ஆம் முடியும். ஆனால் நான் கூறுவதை அப்படியே எழுதி கொள்ள வேண்டும். பின்னர் மாற்றங்கள் செய்யக் கூடாது. அதனை ஏற்றுக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் எனது அலுவலகத்திற்கு வரலாம் என பொன்சேக்கா கூறியுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகையின் டைரி


நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான டர்ட்டி பிக்சர்ஸ் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பல மொழிகளிலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக்கி வருகின்றனர்.
சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ஈஸ்ட்மென் ஆண்டனி, சில்க்கின் வாழ்க்கையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் படமாக்கி உள்ளார்.
இந்தப் படம் தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் டப் ஆகிறது.
டிஜிட்டல் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் எச்.கே.ஏ. தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், சில்க் ஸ்மிதாவாக சனாகான் நடிக்கிறார்.
இறுதி கட்ட பணிகள் முடிந்து இப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூணாகலை தேயிலை தோட்டத்திற்கு அருகில் துப்பாக்கிகளுடன் கெப் வாகனம்!


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் பண்டாரவளை பொலிஸார் கெப் வாகனம் ஒன்றை மீட்டுள்ளனர்.

 

 

பண்டாரவளை – பூணாகலை தேயிலை தோட்டத்திற்கு அருகில் இருந்து இந்த கெப் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று இரவு பூணாகலை வீதியில் கடமையில் இருந்த பொலிஸார் அங்கு பயணித்த கெப் வாகனமொன்றை நிறுத்தியுள்ளனர். எனினும் பொலிஸாரின் சமிக்ஞையை மதிக்காது கெப் வாகனம் சென்றதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கெப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப் வாகனத்தில் இருந்த ஆவணங்களை வைத்து சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.