“பாயும் புலி’ சினிமா விமர்சனம்


நடிகர்கள்: விஷால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், சூரி, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், ஆர்கே

ஒளிப்பதிவு: வேல்ராஜ் இசை: டி இமான் தயாரிப்பு: எஸ் மதன் இயக்கம்: சுசீந்திரன்

Paayum Puli Review

இன்னுமொரு தங்கப் பதக்கம் டைப் கதை. மதுரை எப்பவோ நவீனத்துக்கு மாறிவிட்டாலும் தமிழ் சினிமா அதை இன்னும் ரவுடியிசம், கொலை கொள்ளையிலிருந்து விடுவிக்காது போலிருக்கிறது! மதுரையில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் கும்பலை போலீசார் சுற்றி வளைக்கும்போது ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார். அவரைச் சுட்டுக் கொன்ற தாதா தானாகவே போய் சரணடைகிறார். ஒரு போலீஸ்காரனைக் கொன்ற தாதாவையும் அவன் கும்பலையும் எப்படி விட்டு வைக்கக் கூடாது என்பதற்காக, திருச்சியில் பணியாற்றும் விஷாலை, அவரது சொந்த ஊரான மதுரைக்கு அன்டர்கவர் ஆபரேஷனுக்காக அனுப்புகிறது காவல்துறை. வந்த உடனே, சாலையைக் கடக்கவும், யு டர்ன் அடிக்கவும் பயப்படும் காஜல் அகர்வால் கண்ணில் பட, அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் விஷால். மதுரையில் ஆதிக்கம் செலுத்தும் அத்தனை ரவுடிகளையும் பொட்டு பொட்டென்று சுட்டுத் தள்ளுகிறார் விஷால். மெயின் தாதாவான பவானியைப் போட்டுத் தள்ளும்போது, ‘எனக்கும் மேல ஒருத்தர் இருக்கார்..’ என்று கூறவிட்டு சாகிறான். யார் அந்த தாதா… அவனை விஷால் எப்படி ஒழித்தார்? என்பது மீதி. விஷாலுக்கென்றே அளவெடுத்துத் தைத்த மாதிரியான போலீஸ் வேடம். மனிதர் சின்ன அலட்டல் கூட இல்லாமல் பிறவி போலீஸ்காரர் மாதிரி நடித்திருக்கிறார். மதுரையின் மொத்த குற்றங்களுக்கும் பின்னணி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் விதமும், கண்டுபிடித்தபிறகு கலங்கித் தவிப்பதும் நிறைவான நடிப்பு. துப்பாக்கி முனையில் காஜல் அகர்வாலை ஐ லவ் யூ சொல்ல வைக்கும் காட்சி புதுசு. முந்தைய இரு படங்களைவிட இதில் காஜல் அகர்வால் பார்க்க அழகாக இருக்கிறார். அவருக்கான நடனங்களை இன்னும் கூட அழகான மூவ்மென்ட்டுகளுடன் வைத்திருக்கலாம். ஏதோ வாங்கின சம்பளத்துக்கு ஆடின மாதிரி இருந்தது. ஹெல்மெட்டோடு குளிக்கப் போய் மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் இடத்தில் மட்டும் சூரியின் காமெடி ரசிக்க வைக்கிறது. ஹீரோவுக்கு இணையான வேடம். கலக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. அமைச்சராக வரும் ஆர்கே, தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், ஆனந்த்ராஜ், வேல ராமமூர்த்தி என அனைவரும் மிகையற்ற நடிப்பைத் தந்துள்ளனர். இரண்டு மணி பத்து நிமிடமே ஓடும் படத்தில் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல விறுவிறுப்பு. சமுத்திரக் கனிக்கும் விஷாலுக்குமான அந்த துரத்தலைப் படமாக்கிய வேல்ராஜைப் பாராட்ட வேண்டும். இமானின் இசையில் சிலுக்கு மரமே, மருதைக்காரி.. பாடல்கள் கேட்கும்படி உள்ளன. விஷால் – காஜல் காதல் காட்சிகளில் ஜில்லா பாடலை பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருக்கிறார் இமான். சுசீந்திரன் இயக்கியுள்ள முதல் போலீஸ் கதை. இடைவேளையில் அவர் வைத்திருக்கும் ட்விஸ்ட்டே கதையின் முடவை யூகிக்க வைத்துவிடுகிறது. அதை க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்திருந்தால் படம் வேறு ரேஞ்சில் இருந்திருக்கும்!

சென்னை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை!


சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மோகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்திருக்கின்றனர். இதில் மோகன் உயிரிழந்திருக்கிறார்.

ஆனால் அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். தற்போது மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை காவல்துறை கூறி வருகிறது.

தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காவல்துறையால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

புலி ரகசியம் கசிந்ததா??


சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் புலி படம் உருவாகி வருகிறது. இதில் ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரும் நடித்து உள்ளனர்.

விஜய் நடிப்பில் புலி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை இதுவாக இருக்குமோ?, அதுவாக இருக்குமோ? என பல வதந்திகள் உலா வருகின்றன. அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி, படத்தில் விஜய் கார்ட்டூனிஸ்டாக வருகிறார். இவர் வரையும் படங்களுக்கு திடீரென்று உயிர் வருமாம்.மேலும், அது மட்டுமில்லாமல் அந்த படங்களின் சம்பவங்களுக்குள் விஜய் போவது போல் கதையம்சம் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.  கத்தி படத்தில் அவர் 2 வேடங்களில் நடத்தார். இந்த படத்தில் 3 வேடங்களில் விஜய் தோன்றுகிறார்.திருவனந்தபுரம் அருக்ங்காட்சியகத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்புகள் நடந்தன.

‘பாகுபலி’ யால் குழம்பிய விஜய் , தள்ளிப்போகும் புலி


‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின்

வெளியீடு தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘புலி’ திரைப்படம் அரசர்கள் காலத்து கதை என்பதாலும், போர்க்களக் காட்சிகள்

இருப்பதாலும் இடைவேளைக்கு பின்பு வரும் பெரும்பாலான காட்சிகள்

கிராபிக்ஸில் அமைய வேண்டிய கட்டாயமாம்.

சென்ற மாதம் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் கிராபிக்ஸில் ஒரு குறிப்பிடத்தக்க

எல்லையைத் தொட்டுவிட்டதால், அது போலவே ‘புலி’ படத்தின் கிராபிக்ஸும்

பிரமிக்க வைப்பதாக இருக்க வேண்டும் என்று படத்தின் ஹீரோவான விஜய்

விரும்பியிருக்கிறார்.

இதனாலேயே இதுவரையில் செய்திருந்த கிராபிக்ஸ் வேலைகளை தூக்கிக்

கடாசிவிட்டு மீண்டும் புத்தம் புதிய தொழில் நுட்பக் கலைஞர்களுடன்

அந்த வேலையில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

இந்தப் பணிகள் இன்னமும் முடிவடையாததால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி

செப்டம்பர் 17 அன்று படம் வெளியாக வாய்ப்பில்லையாம்.

ஆகவே அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை அன்றைக்குள்ளும் முடியாவிட்டால் படம் தீபாவளிக்கு

வருவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் படக் குழுவினர்.

ராஜபக்சே கட்டிய விமான நிலையத்தை அரிசி குடோன் ஆக மாற்றியது புதிய அரசு


இலங்கையில் உள்ள மத்தல என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதன் திறப்பு விழா நடைபெற்றது.
விமான நிலையம் அமைந்துள்ள இடம் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சொந்த மாவட்டமாகும். தனது மாவட்டத்தில் விமான நிலையம் அமைய வேண்டும் என்பதற்காகவே இதை கொண்டுவந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு விமான போக்குவரத்து தொடங்கியது. ஆனால் போதிய பயணிகள் வரவில்லை. தற்போது ஒரேஒ ரு விமானம் மட்டும் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இந்த விமான நிலையத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வில்லை. மேலும் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் காட்டு பறவைகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அவை விமானத்தில் மோதி விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது.  எனவே விமான நிலையத்தை மூடிவிடலாமா என்ற யோசனையில் புதிய அரசு உள்ளது. அதற்கு முன்னோட்டமாக விமான நிலையத்தில் சரக்கு குடோன் பகுதி அரிசி குடோனாக மாற்றப்பட்டுள்ளது.
நேற்று இங்கு லாரிகள் மூலம் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அப்போது விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி அரிசி மூட்டைகள் குடோனில் இறக்கப்பட்டன.

இலங்கை எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் தேர்வு



இலங்கை எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் 16 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.