காமன்வெல்த் மாநாடு! பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! திருமா வேண்டுகோள்!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று நாம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இதைக் கூறி வருகின்றன.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகனும்கூட இந்தக் கோரிக்கையை வழிமொழிந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதென்பது அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை அங்கீகரிப்பதாகிவிடும். அது மட்டுமின்றி, காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடுகளும் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படும்.  எனவேதான் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதெனவும் அவ்வாறு நடத்தப்பட்டால் அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது எனவும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

பெற்றோருக்கு உதவாத பிள்ளைகள் : நீதிபதி வருத்தம்


பெற்றோருக்கு உதவி செய்ய மனம் வராமல் கோர்ட் படியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

ஊட்டி ஜே.எஸ்.எஸ்., சர்வதேச பள்ளியில், ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்த, ஐந்து நாட்கள் பயிற்சி கருத்தரங்கு, நேற்று துவங்கியது. கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அசோக் ஹிங்கெரி பேசுகையில், தெரியாமல் பலர், தவறு செய்து விடுகின்றனர்.

நிர்கதியாய், ஆதரவற்ற தாய்மார்களுக்கு, மாதம் குறைந்தது 500 ரூபாயாவது வழங்க, அவர்களது பிள்ளைகள் முன்வர வேண்டும் என, சட்டம் கூறுகிறது. ஆனால் 500 ரூபாயை கூட தாய்க்கு கொடுக்க மனம் வராமல் அதற்கு வசதியில்லை எனக் கூறி, பல இளைஞர்கள் கோர்ட் படியேறுகின்றனர்; இந்நிலை மாற வேண்டும் என்றார்.

கர்நாடக மாநில நீர் வளத்துறை முதன்மை செயலர் சத்யமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்னிந்திய ஐ.பி.எம்., நிறுவன செயல் இயக்குனர் ஸ்ரீராம் ராஜன் பங்கேற்றார். வரும் 11ம் தேதி வரை, கருத்தரங்கு நடக்கிறது.

இலங்கையில் குண்டுவெடிப்பு: 6 சிங்கள வீரர்கள் உயிரிழப்பு


இலங்கை முல்லை தீவுப்பகுதியில் 07.05.2013 செவ்வாய்க்கிழமை திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 சிங்கள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவரின் கைக்குண்டு வெடித்ததினால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும், இதுதிட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள வீரர்களின் தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியில் துப்பாக்கி சூடு காயங்களுடன் ஒரு சிங்கள வீரர் சடலமாக கிடந்துள்ளார். இவரது மரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்றும், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துங்கள் என்று கூறுவது பயங்கரவாதமா; மனோ கணேசன்


news

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துங்கள் என்று சொல்வது பயங்கரவாதமாக போய் விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அல்கைதா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வளைத்து போட தேசிய ஐக்கிய முன்னணி பொதுசெயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூனியர் விகடன் சஞ்சிகையில் அசாத் சாலியின் நேர்முகம் 24ம் திகதி வெளிவந்தது.அதில் இடம்பெற்றதாக சொல்லப்படும் கருத்து பிழையை திருத்தி அவர் ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்துள்ள திருத்தம் இன்றைய திகதியிடப்பட்டுள்ள இதழில் வெளியாகியுள்ளது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன பெரிய பிரச்சினையா?

இது சம்பந்தமாக அவரிடம் ஒரு வாக்குமூலம் பெற்றுக்கொண்டால் போதும். இது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்யும் அளவிற்கு பெரும் பிரச்சினை அல்ல.

அத்துடன் அதிகாரத்தை பகிர்ந்து அரசியல் தீர்வின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்போம் என உலகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கூறுவது தவறா என அவர் கேள்வி எழுப்பியதுடன்,

கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை உறுதியளித்தப்படி நிறைவேற்றுங்கள் என சொல்வது தவறா?இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால் இந்த நாட்டில் மீண்டும் பிரிவினைவாதமும், ஆயுத போராட்டமும் தோன்ற இடம் இருக்கின்றது என சொல்வது தவறா?

இவை தவறுகள் அல்ல. இவை தவறு செய்யாதீர்கள் என்ற முன்னெச்சரிக்கைகள். இந்த நாட்டில் இன்று முன்னெச்சரிக்கை செய்வது தவறாக போய் விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துங்கள் என்று சொல்வது பயங்கரவாதமாக போய் விட்டது. இதைத்தான் அசாத் சாலி எங்களுடன் சேர்ந்து சொன்னார். அதற்காகத்தான் அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கே இப்போது இருக்கும் நாங்களும் இதைத்தான் சொல்கிறோம். அப்படியானால் நாங்களும் பயங்கரவாதிகளா? இதுநாள்வரை நாட்டை பிரிக்க சொல்வதுதான் பயங்கரவாதம் என சொல்லப்பட்டது.

இப்போது அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்று சொல்வதும் பயங்கரவாதம் என்று இந்த அரசாங்கம் சொல்கிறது.

அப்படியானால் இந்த நாட்டில் இன்று அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும், 13ம் திருத்தத்தை அமுல் செய்யுங்கள், வட மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பயங்கரவாதிதான்.

அப்படியானால், நாட்டுக்கு வெளியே இருந்து 13ம் திருத்தத்தை அமுல் செய்யுங்கள் என சொல்லும் பான் கி மூன், பராக் ஒபாமா, மன்மோகன் சிங், கமரூன் ஆகியோரும் பயங்கரவாதிகள்தான்.

தெரு அரசியல் செய்யும் சிலர் இப்படி சொல்வது உண்டு. இன்று இந்த அரசாங்கமும் இப்படியே நடந்து கொள்கிறது.உண்மையில் அசாத் சாலி கைதுக்கு பின்னால் உள்ள உண்மை காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகத்தில் இன்று இஸ்லாமிய அடிப்படைவாததிற்கு எதிராக மேற்குலகமும், இந்தியாவும் கூட்டாக செயல்படுகின்றன.ஆனால் இலங்கை தேசிய பிரச்சினையில் இந்த நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

அதிகாரத்தை பகிரும் அரசியல் தீர்வை காணும்படி இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் உள்ளது.இந்நிலையில் இலங்கையில் அல்-கைதா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வளைத்து போட இலங்கை அரசு முயற்சி செய்கிறது.

அல்-கைதா, தலிபான், அல்-ஜிஹாத் என்பவற்றின் தொடர்பாளர்கள் இங்கு இருப்பதாக காட்டினால் மேற்குலகம் தன்னை அரவணைக்கும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இங்கு இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாக காட்டவே தேசிய ஐக்கிய முன்னணி பொதுசெயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?


‘ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வரும் மே 2 தொடங்கி 17 அன்று வரை, தமிழகமெங்கும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’’தமிழீழ விடுதலை, தமிழகம் எதிர் கொள்ளும் ஆற்று நீர் உரிமை மறுப்புகள், சாதி ஒழிப்பு, அணுஉலைத் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் தவிக்கும் தமிழினம், இனி என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பின்வரும் அட்டவணைப்படி, கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். அதில், கட்சியி முன்னணியாளர்கள் உரையாற்றுகின்றனர்.

சிதம்பரம் – 04.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து,
த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்

மதுரை – 04.05.2013
உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்

கோவை – 06.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை

ஈரோடு – 07.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை
தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து

ஒரத்தநாடு – 08.05.2013
உரை: த.தே.பொ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரெ.சிவராசு

பாப்பாநாடு – 09.05.2013
உரை: மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி

திருச்சி – 09.05.2013
உரை: மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா
மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி

பாபநாசம் – 10.05.2013
உரை: மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி
த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்

பட்டுக்கோட்டை – 10.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு

திருக்காட்டுப்பள்ளி – 11.05.2013
உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்

சென்னை – 11.05.2013
உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்
த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி

ஓசூர் – 12.05.2013
உரை: மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி
த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி

காட்டுமன்னார்குடி – 15.05.2013
உரை: த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி
த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்

தஞ்சை – 15.05.2013
உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்

பெண்ணாடம் – 16.05.2013
உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்

மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா

செங்கிப்பட்டி – 16.05.2013
உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்

குரும்பூர் – 16.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை
த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி

சாமிமலை – 17.05.2013
உரை: மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி
த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன்

மேற்கண்ட பொதுக்கூட்டங்களில், தமிழுணர்வாளர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டு மென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்’’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம்பட்ட 37 புலி பிள்ளைகளுக்கு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன் : வைகோ பேச்சு


ம.தி.மு.க தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 20 ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடந்தது. இரவு 8.45 க்கு தொடங்கி 10.45 மணி வரை 2 மணி நேரம் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ பேசினார்.

 ஒரு ஆராய்ச்சி மாணவரின் ஆராய்ச்சியில் சொல்லி இருக்கிறார்,  கொடிய வறட்சியும், உணவு பஞ்சமும் வரப்போகிறது என்ற அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. மது ஒழிப்பிற்காக 1130 கி.மீ தூரம் நடை பயணம் செய்திருக்கிறேன். பெண்கள், குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

மத்தியில் 10 ஆண்டுகாலம் கொடிய துரோக காங்கிரஸ் ஆட்சி நடந்துவிட்டது. இனியும் அந்த ஆட்சி தொடரக் கூடாது. ஈழத்திற்கு அவர்கள் செய்த துரோகத்திற்கு காங்கிரஸ்காரனுக்கு மன்னிப்பே கிடையாது. தனி கட்சி ஆட்சி என்பது சாத்தியமில்லை.

அணை பாதுகாப்பு மசோதாவை நறைவேற்றினால் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று பிரதமரிடம் சொல்லி இருக்கிறேன். மீத்தேன் எரிவாயு எடுக்க விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை ஒரு போதும் அரசுக்கு விற்க கூடாது.

இலங்கையில் தமிழர்களைக் கொல்ல திருவனந்தபுரம் வழியாக விமானத்தில் ஆயுதம் போனது. அதை தடுத்து நிறுத்தாமல் அந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி இலங்கைக்கு அனுப்பியவர் ராஜிவ்காந்தி. அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்டேன். ஆயுதம் அனுப்பவில்லை வெடிமருந்துகள் தான் போகிறது என்றார்.

அந்த வெடி மருந்துகள் தான் நம் தமிழினம் அழிய காரணமாக இருந்தது. அதே நேரத்தில் கடல் புறா என்ற படகில் 17 கரும்புலிகள் ஆயுதம் இன்றி செல்லும் போது சுற்றி வளைத்து பிடித்தார்கள். அவர்களை சுட்டுக் கொல்ல சொன்னார்கள். அதில் 12 புலிகள் நஞ்சை கடித்தார்கள். 5 புலிகள் எஞ்சினார்கள்.

காயம்பட்ட 37 புலி பிள்ளைகளுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார். அதனால் ஓராண்டு சிறை தண்டனை கொடுத்தார்கள். இதை மனப்பூர் வமாக ஏற்றக் கொண்டேன்.

பாராளுமன்ற கட்டிட சுவற்றில் ராஜராஜ சோழன் புலி கொடி பறக்க ஈழம் கொண்ட ஓவியம் வரையப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பேசும் போது சுவரோவியத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசினேன். அதனால் அந்த ஓவியம் அழிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை அந்த ஓவியம் வரையப்படவில்லை.

சிவக்கொழுந்தம்மாளுக்கு 4 பிள்ளைகள் அவர்கள் 4 பேரும் களத்திற்கு போனார்கள். களம் வெற்றி கண்டது. 4 பிள்ளைகளும் செத்தார்கள். செத்ததை பற்றி கவலைப்படவில்லை அந்த அம்மாள் களம் வெற்றி கண்டதே என்று பெருமிதப்பட்டார். அவர் தான் புலிகளின் அம்மாள். அதே போல ஜோதிமணியம்மாள் தன் பிள்ளைகளை காணவில்லை என்று அவர்களின் கல்லரையில் இருந்து எடுக்கப்பட்ட இரு கற்களை வைத்து முகாமில் தகர கொட்டகையில் பூஜை செய்தார்.

 உலகத்தில் வாக்கெடுப்புகள் மூலம் பல நாடுகள் சுதந்திரம் பெற்றுள்ளது. ஆனால் உலகம் முழுவதும் பரவிகிடக்கும் ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும் நாடு ஈழ நாடு மட்டுமாகத் தான் இருக்கும். அந்த வாக்கெடுப்பில் 99.9 சதவீதம் வெற்றி பெரும். அதே போல ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 99.9 சதவீதம் மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு உணர்ச்சிமிக்க பேசினார் வை.கோ.