அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? -நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்


கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,

கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?

என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.

சென்னை மெரீனாவில் மே 18 நினைவேந்தல் கூட்டம்: விடுதலைப்புலிகள் கொடிகளை அகற்ற சொன்ன போலீசார்


தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக சென்னை மெரீனா கடற்கரையில் 18.05.2013 சனிக்கிழமை மாலை ஈழப்போரில் இறுதி நாட்களில் ஆயிரமாயிரம் பேர் கொன்றுகுவிக்கப்பட்டு ஓர் இனப்படுகொலை நடத்தி முடித்ததாக இந்த உலக நாடுகள் அறிவித்த நாள் மே 18, 2009. தமிழின இனப்படுகொலையைக் கண்டித்தும், ஐ.நா.மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள்  வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் பேரணி நடத்த இருந்தனர்.

அதன்படி மாணவர்கள் சென்னை மெரீனாவில் கூடினர். பேரணி செல்ல தயாராக இருந்தனர். அப்போது போலீசார் அனுமதிக்காததால் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மேலும் நினைவேந்தல் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் கொடிகளை பயன்படுத்தியவர்களிடம், போலீசார் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பின்னர் அந்த கொடிகள் அகற்றப்பட்டது. பின்னர் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

காலி முகத்திடல் கடற்பரப்பில் கவிழ்ந்தது கடற்படை படகு


news

காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று நடைபெற்ற யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..இது தொடர்பாக..

கடந்த 2009 ஆண்டு மே மாதம் 18 திகதி விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் அந்த வெற்றி விழாவினை இலங்கை அரசு பல கோடி நிதி செலவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றது.இதே போன்று இந்த வருடத்திற்கான நிகழ்வுகளும் வெகு விமர்சையாக காலி முகத்திடலில் நான்காவது தடவையாக இன்று கொண்டாடப்பட்டது.
இந்த  யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாகவும்
படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் வடமாகாணத்தின் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.


 

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நேற்றைய தினமே தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வருடம் அங்கு இடம்பெற்ற வைபவம் தடுக்கப்பட்டதுடன், தொடர்ந்து படையினருடைய நெருக்குதல்களுக்கும் மாணவர்கள் ஆளாகியிருந்தனர். இதனால் இம்முறை ஒரு நாள் முன்னதாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்ளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றால், வன்முறைகள் இடம்பெறும் என கருதி யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் முன்னதாகவே பல்கலைக்கழகத்தைவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, இன்று அதிகாலை முதல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் பெருளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வீதித்தடைகள் போட்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசியர்கள் தவிர்ந்த வேறு எவரும் உள்ளே செல்லாதவாறு படையினர் தடுத்திருந்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுகல் தகர்ப்பு

இதேவேளை, வவுனியா சமளங்குளம் பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்போரில் இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நடுகைக்கல் நேற்றிரவு அடையாளம் தெரியாவர்களினால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இவ்விடத்தில் நடத்துவதற்காக ஒழுங்கு செய்திருந்த அஞ்சலி நிகழ்வை நடக்கவிடாமல் செய்வதற்காகவே இது அடித்து நொறுக்கப்பட்டிருந்ததாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுடைய அலுவலகத்திலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்திலும் அந்தக் கட்சியினால் அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

ததேகூ நிகழ்வுகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா நகர சபை மண்டபத்தில் பிரதான அஞ்சலி நிகழ்வுகளும் கூட்டமும் இடம்பெற்றன. பெருமளவான மக்களும் பெற்றோரை இழந்த சிறுவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மெழுகு திரிகள் ஏற்றி இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் முக்கயஸ்தர் பவான், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த சிறி ரணதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வன்னிப்போரில் பெற்றோரை இழந்த 100 சிறுவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபா நிதியுதவியும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், பேனர்கள் வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூரில் சனிக்கிழமை பொதுக்கூட்டம், பேரணி நடத்த எண்ணி, கடலூர், சிதம்பரம் நகர்களில் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், வரவேற்பு தட்டிகள் பரவலாக வைக்கப்பட்டிருந்தன.; இந்தக் காரணத்தைக் காட்டி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அஞ்சலி செலுத்தக் கூடும்; யாழ். பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்பு தீவிரம்


news

யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தக் கூடும் என்ற சந்தேகத்தில் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரே இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களினால் நேற்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று இரவு முதல் யாழ். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியும் வளாகத்திற்கு உள்ளும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ’டிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வவுனியா நகர சபைத் தலைவர் ரதன்  தலைமையில் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகள் வவுனியா நகர சபை மண்டபத்தில் காலை 10 மணிக்கும் கிளிநொச்சி அறிவகத்தில் இன்று காலையும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின்  அலுவலகத்தில் இன்று 5 மணிக்கு  அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.