சென்னை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை!


சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மோகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்திருக்கின்றனர். இதில் மோகன் உயிரிழந்திருக்கிறார்.

ஆனால் அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். தற்போது மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை காவல்துறை கூறி வருகிறது.

தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காவல்துறையால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி ஒருவன் – சினிமா விமர்சனம்


இயக்குநர் ஜெயம் ராஜாவுக்குக் கிடைத்திருக்கும் உண்மையான முதல் வெற்றி இதுதான்.  ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் நினைக்க வைத்த ஜெயம் ரவி அடுத்து வந்த ‘ரோமியோ ஜூலியட்’டிலும் அந்தப் பெயரை தக்க வைத்தார். அடுத்து வந்த ‘அப்பாடக்கர் சகலகலாவல்லவன்’ லேசாக அவருடைய பெயரை டேமேஜ் செய்து வைத்தாலும், இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியரிலும் தனித்து நிற்கும்.தனி ஒருவன் – சினிமா விமர்சனம்

ஐ.பி.எஸ். பணியின் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு அங்கே ஒரு பாண்டவர் டீமே துணைக்கு இருக்கிறது. இன்னமும் பயிற்சி முடியாத இந்த நேரத்திலும் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் செல்கிறார்கள். குற்றங்களை நேரில் பார்க்கும்போதெல்லாம் அதைக் கண்டறிந்து களத்தில் குதித்து குற்றவாளிகளைப் பிடித்து வைத்துவிட்டு இவர்கள் எஸ்கேப்பாகுகிறார்கள். இதையே ஒரு சவாலாகவும், பயிற்சியில் ஒரு பங்காகவும் செய்து வருகிறார்கள்.

32 குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தவர்கள் அதிர்ச்சியாகும்வண்ணம் குற்றவாளிகள் அனைவருமே சில நாட்களில் வெளியில் வந்துவிட.. இவர்களின் ஆதிமூலத்தைக் கண்டறியத் துடிக்கிறார் பாண்டவர் டீம் கேப்டன் ஜெயம் ரவி.

எதிரி நம் அருகில்வரும்வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும்..? நாமே அவனை தேடிச் சென்று அட்டாக் செய்வோம் என்று நினைத்து இந்தக் குற்றவாளிகளின் காட்பாதரை தேட.. கடைசியில் மருத்துவ விஞ்ஞானியான சித்தார்த் என்கிற அரவிந்த்சாமி சிக்குகிறார்.

இவர்தான் நமது எதிரி என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அவரது சாம்ராஜ்யத்தில் குண்டு வைக்க முயல்கிறது ஜெயம் ரவியின் டீம். இதை சுலபத்தில் அறிந்து கொண்ட அரவிந்த்சாமி பதிலுக்கு தன் வித்தையைக் காட்ட இரு தரப்பினருக்கும் இடையே பரபர, விறுவிறு சேஸிங்குகளும், பறத்தல்களும், சண்டைகளும் நடக்கின்றன. இறுதியில் நீதி வென்றதா..? அநீதி வென்றதா என்பதே கதை..!

வில்லனான அரவிந்த்சாமிதான் படத்தின் ஹீரோ என்று உறுதியாகச் சொல்லலாம். படத்தின் கதை முழுவதையும் தன் மீது சுமந்து கொண்டு அத்தனை அனாயசமாக நடித்திருக்கிறார்.  இவருக்கு இருக்கும் பிளாஷ்பேக் காட்சிகளும், இவரது தந்தை தம்பி ராமையா, முதலமைச்சர் நாசர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிக யதார்த்தம்..! தம்பி ராமையாவின் கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் பிற்பாதியில் சிரிக்கவும் வைத்து கடைசியாக உச்சுக் கொட்டவும் வைத்திருக்கிறது..!

ஜெயம் ரவியின் பாடி லாங்குவேஜுக்கு ஏற்ற வேடம். மிக வேகமாக நகரும் திரைக்கதையில் நடிப்பென்று தனியாக சொல்ல வைக்காமல் கேரக்டருடனேயே வாழ்ந்ததுபோலவே தெரிகிறது இவரது நடிப்பு. தன்னுடைய செயல்களெல்லாம் எப்படி அரவிந்த்சாமிக்கு தெரிகிறது என்பதை ஊகித்துத் தெரிந்து கொண்டு, அதன் பின்னான நயன்தாராவுடனான மெளன ரொமான்ஸில் நச்சென்று மனதில் பதிகிறார்.

ஒரேயொரு டூயட்டுக்காக நயன்தாரா வேஸ்ட் என்றாலும், கேரக்டர் படம் முழுக்கவே வருவது போல இருப்பதால் பார்க்கவும் முடிகிறது. ரசிக்கவும் முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே ஜெயம் ரவியை ‘வாடா’, ‘போடா’ என்றெல்லாம் அழைத்தபடியே வந்து போவதால் அந்த அன்னியோன்யத்தை மீறி அவர்களை பார்க்க முடிவதில்லை. ஏஞ்சலீனாவுக்கு பதிலாக தன்னை போகச் சொல்லும் ஜெயம் ரவியிடம் நயன்தாரா சொல்லும் வசனமும், அதை வெளிப்படுத்தியவிதத்திலும் தியேட்டரில் கைதட்டல்கள் உறுதி..!

இதேபோல் தம்பி ராமையாவும், அரவிந்த்சாமியும் பேசுகின்ற காட்சிகளெல்லாம் தியேட்டரில் கலகலப்புதான். அந்தக் குரங்கு கதையைச் சொல்லி முடித்தவுடன் தம்பி ராமையா அப்பாவீயாய் கேட்கும் ‘அப்போ அது செத்திருக்குமே’ என்ற ஆக்ஷன் ஓஹோதான்..!

நட்புக்காக கணேஷ் வெங்கட்ராமன், நாசர் என்று குலக் கொழுந்துகள் இருந்தாலும் அவரவர் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். இயக்கம் சிறப்பாகவே இருப்பதால் இவர்களையும் ரசிக்க முடிந்தது. அரவிந்த்சாமியிடம் கால் மேல் கால் போட்டு கெத்தாக பேசும் முதலமைச்சர் நாசர், அடுத்த சில வினாடிகளில் அரவிந்த்சாமி உட்கார தான் பவ்யமாக குனிந்து பேசும் காட்சியெல்லாம் ரசனைக்குரியவை. கிளைமாக்ஸ் எதிர்பாராதது..!

“எதிரியும் வாழணும்.. நாமளும் வாழணும்.. அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும். அதுதான் வீரம்..” என்ற நயன்தாராவின் பொன்மொழிதான் படத்தின் டர்னிங் பாயிண்ட். இந்த வசனத்தை யூகித்து சொன்னவருக்கு ஒரு பூங்கொத்தினை பரிசாக தரலாம்..!

ராம்ஜியின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் பளபளக்கின்றன. காட்சிகளை ஊடறுக்காமலும், பாடல் காட்சிகளில் அழகுடனும் படமாக்கியிருக்கிறார். இது போன்ற படங்களுக்கு மிகப் பெரிய துணையே எடிட்டர்தான். எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கத்தரி வேலை நச்சென்று இருக்கிறது. படத்தில் பல இடங்களில் இடம் பெறும் இண்ட்டர்கட் காட்சிகளின் ஜம்ப்பிங் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருப்பதால் கொஞ்சமும் ஸ்லிப் ஆகவில்லை. திறமையான படத்தொகுப்பும் இந்தப் படத்தின் விறுவிறுப்புக்கு ஒரு முக்கியக் காரணம்..!

ஸ்டண்ட் சில்வா மற்றும் திலீப் சுப்பராயனின் சண்டை காட்சிகள் நிகழ்த்திக் காண்பிக்கப்படாமல் நடந்ததாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கலவரமாகவே முடிந்திருப்பதுதான் கொஞ்சம் கவலையளிக்கிறது. ஜெயம்ரவியின் நண்பனின் கொலையை இத்தனை கொடூரமாகக் காட்டியிருக்க வேண்டாம். தியேட்டருக்கு வரும் பச்சைப் புள்ளைக பயந்திரும்..

உடலில் மைக்ரோபோனை பொருத்துவது என்கிற ஒரேயொரு கான்செப்ட் பல ஹாலிவுட், பாலிவுட் படங்களில் ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் அது ஒன்றை மையப்புள்ளியாக வைத்து இப்படத்திற்கு கோலம் போட்டிருக்கும் சுபா இரட்டையர்களுக்கு ஒரு பாராட்டு..!

முதற்பாதியில் வரும் 32 களப் பணிகளில் ஈடுபட்டும் லோக்கல் போலீஸில் சிக்காமல் தப்பிப்பது.. நயன்தாராவின் தொல்லை தாங்காமல் முசெளரியில் இருந்து வேறு பயிற்சிக் கல்லூரிக்கு மாறி வந்ததாக ஜெயம் ரவி சொல்வது. எடுத்த எடுப்பிலேயே போலீஸ் கண்காணிப்பாளராக வேலை கிடைத்திருப்பதாகச் சொல்வது.. போஸ்ட்டிங் கிடைத்தவர்கள் யார், யார் எந்தெந்த போஸ்ட்டிங்கில் இருக்கிறார்கள் என்பதையே தெளிவாகச் சொல்லாதது.. கடைசிவரையிலும் நயன்தாராவை போலீஸ் டிரெஸ்ஸில் காட்டாதது. டிரைவர் வைத்துக் கொள்ளாமல் அரவிந்த்சாமி எப்போதும் எல்லா இடங்களுக்கும் தானே சர்ரென்று வந்து இறங்குவது.. அவருடைய அப்பாவை இவ்வளவு இளிச்சவாயனாக காட்டுவது.. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி செய்யப்படும் ஒப்பந்த விவகாரம்.. இதில் கையெழுத்திட வருபவரை படுகொலை செய்யும் சின்ன சம்பவம்.. அரவிந்த்சாமி வாயைத் திறந்தால் தன் பதவியும் பறிபோகும் என்ற நினைப்பிலும் நாசர் கிளைமாக்ஸில் பல்டியடிப்பது.. – இப்படி படம் பற்றிய விமர்சனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்தான்.

ஆனால் இது அத்தனையையும் தாண்டி ஒரு நிமிடம்கூட செல்போனை பார்க்க வைக்காமல், போரடிக்காமல், சொல்ல வந்த விஷயத்தை ஒரே நேர்க்கோட்டில், சுவாரஸ்யமாக சொல்லிய விதத்தில் இயக்குநர் ராஜாவின் இயக்கத் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும். வெல்டன் ராஜா ஸார்..  கீப் இட் அப்..!

தனி ஒருவன் – சினிமா ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத திரைப்படம்..! 

கதாநாயகனாகும் மா.கா.பா.ஆனந்த்,


மா.கா.பா.ஆனந்த், சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘நவரச திலகம்’

‘பர்மா’ படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நவரச திலகம்.’

இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ்,  இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், ‘இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு    –  ரமேஷா, இசை    –    சித்தார்த் விபின்,  பாடல்கள்   –   யுகபாரதி மோகன்ராஜ் ,  கலை   –  சீனு, நடனம்   –  தினேஷ்,    ஸ்டண்ட்   –  மகேஷ், தயாரிப்பு நிர்வாகம்   –   லோகு – சங்கர், தயாரிப்பு மேற்பார்வை  –   ஆஸ்கார் நாகராஜ், இணை தயாரிப்பு -கே..ஜெயச்சந்திரன்ராவ், தயாரிப்பு – சுதர்சன வெம்புட்டி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காம்ரான்.

படம் பற்றி இயக்குநர் காம்ரன் பேசும்போது, “மூர்த்திக்கு ஒரே ஒரு ஆசை. ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய சாதனை செய்து உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்பதுதான். அவனது தாரக மந்திரமாக இருப்பது ‘ஒரே டீல் ஓஹோன்னு வாழ்க்கை.’ அரைகுறையாகத் தெரிந்த தொழிலை எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு அப்பா பன்னீர் சேர்த்த சொத்து எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருக்கும் அதிபுத்திசாலி. இந்த கதாப்பாத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் தூள் கிளப்பி இருக்கிறார். உடன் கருணாகரனும் இருக்கிறார். கேட்கவா வேண்டும்.

சமீபத்தில் மா.கா.பா.ஆனந்த்  – சிருஷ்டி டாங்கே பங்கேற்ற ‘கொள்ள அழகுக்காரி போறாளே.. முன்னால நல்லா இருந்தவன வழி மாற வெச்சாளே’ என்ற பாடல் காட்சியை தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் படமாக்கினோம்.  செம ஜாலியான படமாக ‘நவரச திலகம்’  உருவாகியுள்ளது.” என்றார்.

பரீட்சையில் தோற்றுவிட்டால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாதா?: 7 பேர் உயிரை மாய்த்தனர்


பள்ளியில் படிக்கும் கால கட்டங்களில் சில மாணவ–மாணவிகளுக்கு இதன் பெயரை கேட்டாலே வேப்பங்காயாய் கசக்கும்.

சுமாராக படிக்கும் இது போன்ற மாணவர்கள் எப்படியாவது ‘பாஸ்’ ஆகி விட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே படிப்பை தொடர்வார்கள்.

இதற்கே இரவு, பகலாகவும் படிப்பார்கள். ‘‘ஜஸ்ட்பாஸ்’’ வந்தால் கூட போதும்பா….. என்கிற எண்ணமே அவர்களின் மனசு முழுவதும் நிரம்பி கிடக்கும். இதற்காக மிகவும் நெருக்கமான பள்ளித் தோழர்களிடம் ஆலோசனை கேட்கும் இவர்கள் எந்தெந்த வினாக்களுக்கு முதலில் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துக்கொண்டே தேர்வு அறைக்குள் நுழைவார்கள். எதிர்பார்த்துச் சென்றது போல… ஓரளவுக்கு நன்றாக தேர்வை எழுதி விட்டாலே போதும், இவர்களின் மனசு ரெக்கை கட்டி பறக்கும்.

அப்பாடா…. இன்றைக்கு நடந்த பரீட்சையை நல்ல படியா முடிச்சாச்சி என்கிற ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பார்கள். இவர்களுக்கு அதிக மதிப்பெண் என்பது பெரிய விஷயமாகவே இருக்காது.

இப்படி படிப்பில் மோசமாகவோ…. அல்லது படுமோசமாகவோ இருக்கும் மாணவர்களிடம் நிச்சயம் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கிடக்கும். உள்ளுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த திறமையை ஒரு நாள் தட்டி எழுப்பும் அவர்கள் வாழ்க்கையில் உயரமான நிலையை எட்டிப்பிடித்திருப்பார்கள்.

இதுபோன்ற நேரங்களில் இப்போதும் பலர் உதாரணமாக சொல்வது கர்ம வீரர் காமராஜரைத்தான். படிக்காத மேதையாக விளங்கிய அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம்.

ஆனால்… இன்று இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வி அடையும் மாணவ – மாணவிகள் பலர், தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை தொடர்கிறது. ஆண்டு தோறும் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் தோல்வி பயத்தில் மாணவச்செல்வங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

‘‘மார்க் நல்லா எடுக்கல… அவ்வளவுதான்’’ என்கிற பெற்றோர்களின் மிரட்டலும்… ‘‘இப்படி படிச்சா நீ எப்படி உருப்படுவ என்கிற உறவுக்காரர்களின் அர்ச்சனைகளுமே மாணவர்களின் தற்கொலைக்கு முக்கியமான காரணமாக அமைகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

அதே நேரத்தில் பெற்றோர்கள் பலர், தங்களது விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிப்பதும் மாணவர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாகவே உள்ளது. இதனால் மாணவ– மாணவிகள், தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் அத்துடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இதுவே அவர்களை தற்கொலை முடிவுக்கும் தள்ளி விடுகிறது. பரீட்சையில் தோற்றாலும், வாழ்க்கையில் வெற்றி பெற ஏராளமான வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன என்பதையும், வாழ்வில் உயர்வதற்கு மதிப்பெண்களும், தேர்வுகளில் பெறும் வெற்றியும் மட்டுமே, படிக்கட்டுகள் அல்ல என்பதையும் மனதில் பதிய வைக்காததாலேயே அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் இலக்கியா, வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த மாணவர்கள் ரகு, குணசேகரன் ஆகியோர் தேர்வு முடிவுகளால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் இலக்கியா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். ரகுவும், குணசேகரனும் தோல்வியால் மனமுடைந்து போனார்கள்.

ஈரோட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரது மகள் மஞ்சுளா, குறைவான மதிப்பெண் பெற்றதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ஆனந்தி, தேர்வில் தோல்வி அடைந்ததால், தூக்கு போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

தேனிகண்டமனூரைச் சேர்ந்த அன்னக்கொடி என்பவரது மகன் அஜய் தேர்வு முடிவுக்கு பயந்து நேற்று முன்தினமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தேர்வில் வெற்றி பெற்று விட்டார். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மகன் பிரதீப் வர்மன் (18). பிளஸ்–2 தேர்வில் 5 பாடத்தில் தோல்வி அடைந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று இரவு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி 7 பேர் உயிரை மாய்த்துள்ள நிலையில் கடலூர், பண்ருட்டியில் மட்டும் மதிப்பெண் குறைவாக எடுத்திருப்பதால் 10 மாணவ–மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

கடலூரை சேர்ந்த பார்கவி, குருதேவி, ராஜசேகர், அனுசுயா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பண்ருட்டியை சேர்ந்த ஆனந்தி, பிரியா, நந்தினி, பவானி ஆகியோரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் மேலும் 12 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க மாணவ–மாணவிகளுக்கு உளவியல் பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும்.

குறைவான மார்க் எடுத்திருக்கும்… அல்லது தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் மாணவ செல்வங்களே… தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல…. அதையும் தாண்டி சாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் உலகில் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள். தற்கொலை முடிவை கைவிடுங்கள். நிச்சயம் ஒருநாள் வானம் வசப்படும். வாழ்க்கையும் வசப்படும்.

மாணவிகள் முந்துவதும் மாணவர்கள் பிந்துவதும் ஏன்?


சென்னை: சில ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், மாணவிகளின் தேர்ச்சியை விட குறைந்தே காணப்படுகிறது. ரேங்க் பட்டியலிலும் இதே நிலை. இது ஏன் என பெற்றோர் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.இரண்டு தசாப்தத்துக்கு முன், பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவர்களின் கையே ஓங்கி இருந்தது. தேர்ச்சி சதவீதத்திலும் ரேங்கிலும் மாணவர்களே அதிக மதிப்பெண் பெற்றனர். காலம் மாறியது; கோலமும் மாறியது.

“பைய, பைய’ பையன்களின் கவனம் சிதறத் துவங்கியது. மதிப்பெண்களும் வீழத் துவங்கின. மாணவிகளின் தேர்ச்சி சதவீதமும், ரேங்கும் ஏணியில் ஏறத் துவங்கின.

இதற்கு பல விஷயங்களை காரணமாக கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மொபைல் போன்: இப்பட்டியலில் முதலிடம் வகிப்பது மொபைல் போன்கள். பத்தாம் வகுப்புக்கு செல்லும் முன்பே, மாணவர்களின் கைகளில் மொபைல் போன்கள் விளையாடத் துவங்குகின்றன. முதலில் வீடியோ கேம்ஸ் விளையாடத் துவங்கும் இவர்கள், மெதுவாக நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புகின்றனர். ஆரம்பத்தில் ஆண் நண்பர்களுக்கு செல்லும் மெசேஜ்கள், மெதுவாக நண்பிகளுக்கும் செல்ல ஆரம்பிக்கின்றன. சில நாட்கள் கழித்து இதுவும் “போர்’ அடித்துப்போய், “பலான’ படங்கள் பார்க்கத் துவங்குகின்றனர். தாங்கள் மட்டும் பார்த்தது போதாது என்று, உண்மையிலேயே படிப்பில் கவனம் செலுத்தி வந்த மற்ற நண்பர்களுக்கும் அனுப்புகின்றனர் அல்லது சேர்ந்து பார்க்கின்றனர். இந்த “புண்ணியத்தால்’, படிக்கும் மாணவர்களின் கவனமும் கந்தலாகிறது. இப்படியே இந்த வட்டம் பெரிதாகிறது.

ஆனால் மாணவிகளின் சூழ்நிலையே வேறு. இவர்களுக்கு அவ்வளவு எளிதாக மொபைல் போன்களை பெற்றோர் வாங்கித் தருவதில்லை. அவர்களின் நடமாட்டத்தை பெரும்பாலும் பெற்றோர் கண்காணித்தே வருகின்றனர். மாணவர்களைப் போல் இவர்களிடம் “பாக்கெட் மணி’யும் அதிகம் புழங்குவதில்லை. எனவே அனாவசிய செலவுகளுக்கும் வழியில்லை. போனுக்கு “ரீசார்ஜ்’ செய்ய வேண்டும் என்றாலும் அப்பாவோ அண்ணனோ தான் உதவ வேண்டும்.

இஷ்டத்திற்கு “தெரு, தெருவாக’ சுற்றும் வழக்கமும் தைரியமும் இல்லாததால், பெரும்பாலான மாணவிகள், பள்ளி முடிந்ததும் நேரே வீட்டுக்கு தான் நடையைக் கட்டுகின்றனர். இதனால் இவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமல், படிப்பு மீது திரும்புகிறது.

கிரிக்கெட்: மாணவர்களை அடுத்து கெடுப்பது “கிரிக்கெட்’. மழைக்கு மட்டும் பள்ளிக்கு ஒதுங்குவது போல், சில மாணவர்கள், கிரிக்கெட் விளையாடாத போது பள்ளி பக்கம் ஒதுங்குகின்றனர். விடுமுறை நாட்களில், படிப்பை கை கழுவிவிட்டு, கிரிக்கெட் பேட்டை தூக்கிவிடுகின்றனர். சாப்பாட்டைக் கூட மறந்து, கிரிக்கெட்டே கதி என கிடக்கும் மாணவர்கள் பலர். பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் வேறு எதையாவது செய்து “கெட்டுக் குட்டிச்சுவராய்’ப் போகாமல், விளையாட்டின் மீது கவனம் செலுத்துவதே மேல் என நினைத்து “சும்மா’ இருந்து விடுகிறார்கள். ஆக, இதனாலும் படிப்பு “பணால்’ ஆகிறது.

இதிலும் மாணவிகள் “கெட்டி’, கிரிக்கெட் மீது அதீத ஆர்வத்தை இவர்கள் செலுத்துவதில்லை. இதுவும் இவர்களைக் காப்பாற்றுகிறது.

சினிமா: மாணவர்களை கெடுப்பதில் அடுத்து முக்கிய இடம் பெறுவது “டிவி’ மற்றும் சினிமா. கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், எஸ்எம்எஸ் ஆகியவை போக, மீதி நேரம் இருந்தால் இவர்களுக்கு நினைவுக்கு வருவது “டிவி’யில் கிரிக்கெட் மேட்ச் அல்லது அபிமான ஹீரோ நடித்து ரிலீசான சினிமா. ரசிகர் மன்றம், கதாநாயகனுக்கு பாலாபிஷேகம், முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் “த்ரில்’ என இவர்களது “லட்சிய பாதை’, அவலட்சண பாதையாக மாறுகிறது.

இவ்வளவு “உபாதை’களையும் தாண்டி, மனசை கல்லாக்கி, பல்லைக் கடித்துக்கொண்டு படிக்கும் மாணவர்களே பொதுத் தேர்வில் சாதிக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் மனோதத்துவ நிபுணர்கள், “”இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இளைஞர்களின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சம் எழுகிறது. இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இல்லாவிட்டால் மதிப்பிட முடியாத இளைஞர் சக்தியை நாம் இழந்து விடுவோம்.

அதற்கு பள்ளி பாடத்திட்டத்திலேயே மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். சமூகப் பொறுப்புணர்வு, பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை, சமுதாயத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை, நீதி, நியாயம் போன்றவை பற்றி பள்ளி கல்வியிலேயே சொல்லித் தர வேண்டும்” என்கின்றனர்.

இதை அரசு செய்யுமா?

‘இந்தியாவில் 3 ஆண்டுகளில் 3,313 விவசாயிகள் தற்கொலை


  • 2012, 2013, 2014 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரம்.
    2012, 2013, 2014 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரம்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில வாரியாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கையின் புள்ளி விபரம்.
    கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில வாரியாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கையின் புள்ளி விபரம்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 3,313 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான புள்ளி விவரம்:

கடந்த 2012-ல் கிட்டத்தட்ட 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2013-ல் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கடந்த 2014-ல் 1300 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளிலுமே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் சொற்ப அளவில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.