மாணவிகள் முந்துவதும் மாணவர்கள் பிந்துவதும் ஏன்?

சென்னை: சில ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், மாணவிகளின் தேர்ச்சியை விட குறைந்தே காணப்படுகிறது. ரேங்க் பட்டியலிலும் இதே நிலை. இது ஏன் என பெற்றோர் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.இரண்டு தசாப்தத்துக்கு முன், பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவர்களின் கையே ஓங்கி இருந்தது. தேர்ச்சி சதவீதத்திலும் ரேங்கிலும் மாணவர்களே அதிக மதிப்பெண் பெற்றனர். காலம் மாறியது; கோலமும் மாறியது.

“பைய, பைய’ பையன்களின் கவனம் சிதறத் துவங்கியது. மதிப்பெண்களும் வீழத் துவங்கின. மாணவிகளின் தேர்ச்சி சதவீதமும், ரேங்கும் ஏணியில் ஏறத் துவங்கின.

இதற்கு பல விஷயங்களை காரணமாக கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மொபைல் போன்: இப்பட்டியலில் முதலிடம் வகிப்பது மொபைல் போன்கள். பத்தாம் வகுப்புக்கு செல்லும் முன்பே, மாணவர்களின் கைகளில் மொபைல் போன்கள் விளையாடத் துவங்குகின்றன. முதலில் வீடியோ கேம்ஸ் விளையாடத் துவங்கும் இவர்கள், மெதுவாக நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புகின்றனர். ஆரம்பத்தில் ஆண் நண்பர்களுக்கு செல்லும் மெசேஜ்கள், மெதுவாக நண்பிகளுக்கும் செல்ல ஆரம்பிக்கின்றன. சில நாட்கள் கழித்து இதுவும் “போர்’ அடித்துப்போய், “பலான’ படங்கள் பார்க்கத் துவங்குகின்றனர். தாங்கள் மட்டும் பார்த்தது போதாது என்று, உண்மையிலேயே படிப்பில் கவனம் செலுத்தி வந்த மற்ற நண்பர்களுக்கும் அனுப்புகின்றனர் அல்லது சேர்ந்து பார்க்கின்றனர். இந்த “புண்ணியத்தால்’, படிக்கும் மாணவர்களின் கவனமும் கந்தலாகிறது. இப்படியே இந்த வட்டம் பெரிதாகிறது.

ஆனால் மாணவிகளின் சூழ்நிலையே வேறு. இவர்களுக்கு அவ்வளவு எளிதாக மொபைல் போன்களை பெற்றோர் வாங்கித் தருவதில்லை. அவர்களின் நடமாட்டத்தை பெரும்பாலும் பெற்றோர் கண்காணித்தே வருகின்றனர். மாணவர்களைப் போல் இவர்களிடம் “பாக்கெட் மணி’யும் அதிகம் புழங்குவதில்லை. எனவே அனாவசிய செலவுகளுக்கும் வழியில்லை. போனுக்கு “ரீசார்ஜ்’ செய்ய வேண்டும் என்றாலும் அப்பாவோ அண்ணனோ தான் உதவ வேண்டும்.

இஷ்டத்திற்கு “தெரு, தெருவாக’ சுற்றும் வழக்கமும் தைரியமும் இல்லாததால், பெரும்பாலான மாணவிகள், பள்ளி முடிந்ததும் நேரே வீட்டுக்கு தான் நடையைக் கட்டுகின்றனர். இதனால் இவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமல், படிப்பு மீது திரும்புகிறது.

கிரிக்கெட்: மாணவர்களை அடுத்து கெடுப்பது “கிரிக்கெட்’. மழைக்கு மட்டும் பள்ளிக்கு ஒதுங்குவது போல், சில மாணவர்கள், கிரிக்கெட் விளையாடாத போது பள்ளி பக்கம் ஒதுங்குகின்றனர். விடுமுறை நாட்களில், படிப்பை கை கழுவிவிட்டு, கிரிக்கெட் பேட்டை தூக்கிவிடுகின்றனர். சாப்பாட்டைக் கூட மறந்து, கிரிக்கெட்டே கதி என கிடக்கும் மாணவர்கள் பலர். பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் வேறு எதையாவது செய்து “கெட்டுக் குட்டிச்சுவராய்’ப் போகாமல், விளையாட்டின் மீது கவனம் செலுத்துவதே மேல் என நினைத்து “சும்மா’ இருந்து விடுகிறார்கள். ஆக, இதனாலும் படிப்பு “பணால்’ ஆகிறது.

இதிலும் மாணவிகள் “கெட்டி’, கிரிக்கெட் மீது அதீத ஆர்வத்தை இவர்கள் செலுத்துவதில்லை. இதுவும் இவர்களைக் காப்பாற்றுகிறது.

சினிமா: மாணவர்களை கெடுப்பதில் அடுத்து முக்கிய இடம் பெறுவது “டிவி’ மற்றும் சினிமா. கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், எஸ்எம்எஸ் ஆகியவை போக, மீதி நேரம் இருந்தால் இவர்களுக்கு நினைவுக்கு வருவது “டிவி’யில் கிரிக்கெட் மேட்ச் அல்லது அபிமான ஹீரோ நடித்து ரிலீசான சினிமா. ரசிகர் மன்றம், கதாநாயகனுக்கு பாலாபிஷேகம், முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் “த்ரில்’ என இவர்களது “லட்சிய பாதை’, அவலட்சண பாதையாக மாறுகிறது.

இவ்வளவு “உபாதை’களையும் தாண்டி, மனசை கல்லாக்கி, பல்லைக் கடித்துக்கொண்டு படிக்கும் மாணவர்களே பொதுத் தேர்வில் சாதிக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் மனோதத்துவ நிபுணர்கள், “”இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இளைஞர்களின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சம் எழுகிறது. இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இல்லாவிட்டால் மதிப்பிட முடியாத இளைஞர் சக்தியை நாம் இழந்து விடுவோம்.

அதற்கு பள்ளி பாடத்திட்டத்திலேயே மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். சமூகப் பொறுப்புணர்வு, பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை, சமுதாயத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை, நீதி, நியாயம் போன்றவை பற்றி பள்ளி கல்வியிலேயே சொல்லித் தர வேண்டும்” என்கின்றனர்.

இதை அரசு செய்யுமா?

Leave a comment