‘சாத்தம் ஆலை’ அந்தமான் தீவில் ஓர் ஆசிய ஆச்சரியம்!


அந்தமான்-நிகோபர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள சாத்தம் தீவில் அமைந்துள்ள ‘சாத்தம் மர அறுவை ஆலை’… ஆசியாவிலேயே மிகவும் பெரியதும், பழமையானதுமாகும். தீவின் 40% பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, அந்தமான் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

நாடுகளை பிடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள்… அந்தமான் தீவுகளில் காலடி வைத்ததும், அங்கே குடியேறுவதற்காக காடுகளை அழிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவர்களால் வெட்டுப்பட்ட மரங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பிரமித்துப் போனவர்கள்… அவற்றை தங்கள் நாட்டுக் கொண்டு சென்று பலவிதமான கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தினர். மரங்களை மொத்தமாக இங்கிலாந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்கவே… அவற்றை அறுத்து, பலகைகளாகக் கொண்டு செல்ல நினைத்தனர். அதற்காக 1888|ம் ஆண்டில் உருவாக்கியதுதான் ‘சாத்தம் மர அறுவை ஆலை’! அப்போது… இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பழைய இயந்திரங்களுடன் துவங்கப்பட்ட ஆலை… இன்றைக்கு அதிநவீன இயந்திரங்களுடன் சுமார் 750 தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது!

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்த மர அறுவை ஆலையில் மரங்கள் அறுக்கப்பட்டு… மேற்கத்திய நாடுகளுக்கு வணிக நோக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையின் மரச்சுவர்கள் யாவும் அந்தமான் படாக் எனும் உயர்ரக மரத்தினால் அமைக்கப்பட்டவையே!

சிறப்பு வாய்ந்த இந்த மர அறுவை ஆலையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அதன் பொறுப்பாளர், துணைநிலை வனப்பாதுகாவலர் ராஜ்குமாரைச் சந்தித்தேன். நூற்றாண்டு பெருமைவாய்ந்த அந்த ஆலை பற்றி பேசியவர், ”ஒரு காலத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கனமீட்டர் மர அறுவை செய்து வந்த இந்த ஆலை, தற்போது 5,000 கனமீட்டர்தான் அறுவை செய்கிறது. இப்போது இந்த ஆலையை மேலும் நவீனமாக்க, ‘இந்திய பிளைவுட் தொழில் ஆய்வு மையம்’ எனும் நிறுவனத்திடம் இதை கையளிக்க இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளில் இதை நவீனப்படுத்திக் கொடுப்பார்கள். அதன் பிறகு, பழைய திறனுக்கு இந்த ஆலை இயங்கக் கூடும்.

‘இப்படி மரங்களாக வெட்டிக் கொண்டிருக்கிறார்களே’ என்று நினைக்க வேண்டாம். நாங்கள் தாறுமாறாக மரங்களை வெட்டுவதில்லை. ஆங்கிலேயர்கள் வணிக நோக்கில் படாக் மரங்களை வெட்டிவிட்டு, அவற்றின் இடங்களில் வேகமாக வளரும் மென்மரங்களை நட்டு வைத்தனர். அதனால், ‘படாக்’ மரங்கள் குறைந்த அளவிலேயே தற்போது உள்ளன. ஆனால், நாங்கள் வனச்சூழல் சரியாக பரமாரிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கையுடன் மரங்களை வெட்டுகிறோம். வெட்டப்படும் மரங்களைப் போல, இரண்டு மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். சில இடங்களில் ஆறு மடங்கு கன்றுகளைக்கூட நடுகிறோம். வருங்காலத்தில் பயன்படக்கூடிய வகையில் உற்பத்தியும் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக, படாக் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் கன்றுகளை நடவு செய்கிறோம். மக்களின் தேவைகளுக்காக இஷ்டம்போல வெட்டிக் குவிப்பதில்லை. வெட்டப்பட்ட மரங்களை, மக்களின் தேவைகளுக்குப் பகிர்ந்தளிக்கிறோம்.

வனத்துறையின் மேற்பார்வையில்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன. அப்படி வெட்டப்படும் மரங்களை ஒன்று சேர்த்துக் கட்டி, நீர்ப்பரப்பில் இழுத்து வந்து, கரை சேர்த்து, கனரக வாகனங்களில் அடுக்கி ஆலைக்கு கொண்டு வருகிறோம். இங்கு அறுக்கப்படும் 23 வகை மரங்களில் ‘அந்தமான் படாக்’ ரகத்தைதான் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். வீட்டுப் பயன்பாட்டுக்காக கதவு, ஜன்னல், மேசை, நாற்காலி, கட்டில் போன்றவற்றுக்கு இது, பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலையில் ஒரு கன மீட்டர் ‘படாக்’ சுமார் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மெயின் லாண்டில் (இந்தியாவை அப்படித்தான் இங்கு குறிப்பிடுகின்றனர்) இங்கு விற்பதைப் போல மூன்று மடங்கு விலை அதிகம்” என்று அழகாக விவரங்களை அடுக்கினார்.

நாம் ஆலைக்குள் நுழைந்தபோது… அறுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, வகைவகையாக பிரிக்கப்பட்டு… என ஆங்கங்கே மலைக்குன்றுகள் போல குவிந்திருந்த மரங்களைப் பார்த்தபோது… ‘என்ன இது, இப்படி மரங்களை வெட்டிக் குவிக்கிறார்களே…’ என்பது உட்பட பலகேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், ராஜ்குமாரிடம் பேசியபிறகு அத்தனை¬யும் விடைபெற்றன!


அந்தமான் யானைகள்!

அந்தமானில் யானைகள் கிடையாது. மரங்களை காடுகளில் இருந்து கொண்டு வருவதற்காக, 1906-ம் ஆண்டு, இந்தியாவிலிருந்து யானைகள் கொண்டுவரப்பட்டன. தற்போது, உச்ச நீதிமன்றம் ஆணை காரணமாக மரங்களை வெட்டுவதில் சில சிக்கல்கள் ஏற்படவே…. ‘இன்டர்வியூ’ எனும் தீவில் யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு, அவை பராமரிக்கப்படுகின்றன. தற்போது 110 யானைகள் வரை அந்தக் காட்டில் வசிக்கின்றன.

முடக்கிய ஜப்பான் குண்டு!

இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு… கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு… இன்று வரை தன் பணியைத் தொடர்கிறது.

அந்தமான் படாக்!

‘டெரோகார்பஸ் டல்பர்ஜியோட்ஸ்’ (pterocarpus dalbergiodes) எனும் தாவரவியல் பெயர் கொண்ட அந்தமான் படாக் மரத்துக்கு… அந்தமான் செம்மரம், கிழக்கிந்திய மகோகனி, செஞ்சிவப்பு மரம் என பல பெயர்கள் உண்டு. மென்மையான பிரௌன், பொன்னிறம், அடர் சிவப்பு பிரௌன், செறிவான சிவப்பு மற்றும் தீக்கொழுந்து சிவப்பு போன்ற நிறங்களில் இம்மரங்கள் உள்ளன. நாளடைவில் தண்ணீர்பட்டு பொலிவிழந்து போனாலும், லேசாக மெருகேற்றம் செய்தாலே பழைய பொலிவுக்கு வந்துவிடும் என்பதுதான் இம்மரத்தை மக்கள் பெரிதும் விரும்பக் காரணம்.

 

ஆச்சரியமான உண்மைகள்!


மனிதர்களாகிய நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு நமது ஐம்புலனறிவு ஒரு முக்கியக் காரனம். ஐம்புலனறிவு எல்லா உயிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூட பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் 22 கோடி வரை உள்ளன.
மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 இலட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு வாசனைகளை அவனால் பிரித்தறிய முடியும்.
உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த வாசனை மட்டுமே தெரியும்.
ஒவ்வொர் உயிரினமும் தம் உடலில் இருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தன் வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தன் இணையைக் கவரும்.
சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணருகின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன. தவளைக்குப் பார்வை சக்தி குறைவு. தன் இரை மட்டுமே அதற்குப் புலப்படும். இன்னும் பல பறவை, விலங்கு, பூச்சியினஙகளிடம் ஆச்சரியமான உண்மைகள் உண்டு.

கரடி தாக்கியதில் 8 பேர் பலி


ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று கோராபுட் மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

காட்டு பகுதியில் விறகு எடுக்க சென்றவர்களை கரடி கடுமையாக தாக்கியுள்ளது. மேலும், அப்பகுதியாக சென்றவர்களையும் தாக்கியுள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அப்பகுதி வனத்துறை அதிகாரி ஜாய்போர் லட்சுமி மிஸ்ரா கூறியுள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதிய சேர்ந்த கிராம மக்கள் கரடியை அடித்து விரட்டியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோராபுட் மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சொர்க்கமா…நரகமா…? கட்டாயம் இதைப் படியுங்கள்!


இரண்டு பேர் இறைவனின் முன்னால் நிறுத்தப்பட்டார்கள். உலகத்தில் இருக்கும் போது பாவங்களை அதிகமாகச் செய்தவர்கள் அவர்கள்.
அவர்கள் செய்த நன்மைகளையும் தீமைகளையும் கணக்கிட்டுப் பார்த்த இறைவன் தீர்ப்புச் சொன்னான்.

”நீங்கள் இருவரும் நரகத்துக்குப் போங்கள். உங்களின் பாவங்களுக்கு அதுதான் தண்டனை…!”

அவ்வாறு இறைவன் சொன்னதுதான் தாமதம்…ஒருவன் வெகு வேகமாக ஓடிச் சென்று நரகத்துக்குள் குதித்து விட்டான். மற்றவனோ, நரகத்தை நோக்கி மெதுவாகப் போவதும், இடையில் நின்று திரும்பி இறைவனைப் பார்ப்பதுமாகச் சென்று கொண்டிருந்தான்.

அவனை இறைவன் அழைத்தான்.

”உன்னை நரகத்துக்குப் போகும்படி நான் கூறினேன். ஆனால் நீ இப்படி மெதுவாகப் போகிறாயே…உனக்கு என்ன திமிர்..?” என்று இறைவன் அவனிடம் கேட்டான்.

அவன் சொன்னான்:

” இறைவா…நீ பாவங்களை மன்னிப்பவன்.அத்தோடு, இரக்கமும் கருணையும் உள்ளவன். நரகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் என் மீது உனக்கு எந்த நிமிடத்திலும் கருணை பிறந்து விடலாம்..இரக்கம் வந்து விடலாம்…அப்போது நீ என்னைத் திருப்பி அழைத்து ‘சரி..உன் பாவங்களை மன்னித்தேன்..நீ சொர்க்கத்துக்குப் போ..’ என்று சொல்லிவிடுவாய் என்ற எதிர்பார்ப்பில்தான் நான் உன்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்து மெதுவாகச் சென்றேன்…!” என்றான்.

இறைவனுக்கு உணமையிலேயே அவன் மீது இரக்கம் வந்து விட்டது.

”சரி நீ சொர்க்கத்துக்குப் போ..” என்று அவனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு, சற்று முன்னர் ஓடோடிச் சென்று நரகத்துக்குள் குதித்தவனைக் கூட்டி வரும்படிக் காவலர்களைப் பணித்தான்.
காவலர்கள் அவனை அழைத்து வந்தனர்.

”அது என்ன..’நரகத்துக்குப் போ..’ என்று நான் சொல்லி முடிக்கும் முன்னமே நீ ஓடிச் சென்று நரகத்தில் குதித்து விட்டாய்…?” என்று இறைவன் கேட்டான்.

அதற்கு அவன், ”இறைவா…நீ சொன்ன எதையுமே நான் கேட்காமல் உலகத்தில் பாவங்கள் செய்து கொண்டிருந்தேன். அங்கேதான் நீ சொன்னதை நான் கேட்கவில்லை. இங்கேயாவது உன் கட்டளைக்கு மாறு செய்யாமல், அதனை ஏற்று நடப்போமே..என்றுதான் ஓடிச் சென்று நரகினுள் குதித்தேன்..” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அவன் மீதும் இறைவனுக்குக் கருணை பிறந்து விட்டது. இறைவன் சொன்னான்:

”சரி..சரி…நீயும் சொர்க்கத்துக்குப் போ..!”

இறைவனின் அன்புக்கும் கருணைக்கும்தான் நிகரேது…!

கண்ணா…’களி’… தின்ன ஆசையா…?


‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மற்றும் ‘லத்திகா’ உட்படப் பல படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ஸ்டார் ஹோட்டல் அதிபரான ரங்கநாதன் என்பவரிடம் வாங்கிய ரூ.50 இலட்சத்துக்காகக் கொடுத்த காசோலை திரும்பி வந்தததால் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும்
 
 
 
தற்போது இவர்  புழல் மத்திய சிறையிலிருந்து வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
வேலூர் சிறையில் H.S.1 ப்ளாக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையின் H.S.2 ப்ளாக்கில்தான் ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் இருக்கிறார்கள்.
 
பவர் ஸ்டாருக்கு முதல் வகுப்புக் கொடுக்கப்படவில்லை எனவும், சாதாரண வகுப்பிலேயே வைக்கப்பட்டுள்ளாரெனவும் தெரிய வருகிறது. 
 
‘கண்ணா..லட்டு தின்ன ஆசையா ..?’ என்று கேட்ட பவர் ஸ்டாரிடம் ‘கண்ணா..களி தின்ன ஆசையா..?’ என்று அவரது எதிரிகள் கேட்பார்களோ, தெரியவில்லை.

தமிழ்நாட்டில் பரபரப்பாக விற்பனையாகும் கழுதைப் பால்


தமிழ்நாட்டின் கிரிஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள புலியூர், அரசம்பட்டி,மேட்டுப்புலியூர்,பாரூர் மற்றும் செல்லம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கழுதைப் பால் பரபரப்பாக விற்பனை செய்யப்படுகிறதாம்.

குறிப்பிட்ட இந்தக் கிராமங்களுக்குக் கழுதைகளுடன் செல்வோர், கழுதைப் பால் கேற்பவர்களுக்கு  அங்கேயே கறந்து கொடுக்கின்றனராம். ஒரு பாலாடை ரூ.50 ற்கு விற்பனையாகிறதாம்.

கழுதைப் பால் குடித்தால் இருமல், சுரம், இளைப்பு, சளி, கை,கால், இடுப்பு வலிகள் குணமாவதாகவும் இதைச் சின்னஞ் சிறுவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாவதாகவும், எனவே அவர்கள் ஆரோக்கியமாக வாழ முடிவதாகவும் சொல்கிறார்கள்.

”சாதாரண பசுப் பாலில் கூட பக்டீரியாக்கள் இருக்கும்; ஆனால் கழுதைப் பால் சுத்தமானது” என்று இணையத்தில் இது குறித்துத் தேடிய போது ஒரு தகவல் தெரிவித்தது.

”ச்சே..கழுதைப் பாலால் எந்த ஆரோக்கியமும் கிடையாது; மாறாக அது மனிதனின் சுகத்திற்கு ஆபத்தானது…” என்று சில மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையையும் இணையத்தில் படிக்க முடிந்தது.

 

எது எப்படியோ, மனித உடல் நலத்தைப் பாதுகாக்க எத்தனையோ  வழிகளை மருத்துவம் கண்டுபிடித்துவிட்ட இந்த நவீன உலகில், கழுதைப் பால் அருந்தித்தான் ஆரோக்கியம் பேண வேண்டுமென்ற அவசியமேயில்லை என்பதுதான் நமது கருத்து.