அனுமானின் பாதசுவடு நெடுந்தீவில் கண்டுபிடிப்பு


யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில்

மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான
கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 அடி மனிதனின் பாதச்
சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப்
பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட
பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும்
பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக
நெடுந்தீவு பிரதேச செயலாளர்
ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார். பாறைகள் சிதைவடைந்து இந்த
சுவடு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால்
உருவானதாகவும் இராமாயணப் போர்
நடைபெற்றபோது அனுமான் மலையைத்
தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

மணிவண்ணன் – தமிழ் சமூகத்தின் தவிர்க்க முடியாத கலைஞன்


 

manivannan+%281%29மணிவண்ணன் என்கிற மகத்தான கலைஞனை மனிதனை இழந்து தவித்து கொண்டிருக்கிறோம். அவருடைய இறப்பு அறிவிற்குப் புலப்பட்டாலும் மனதால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழகம் முழுவதும் வாழும் பகுத்தறிவாதிகள் அனைவராலும் நமது தோழர் என்று உணரப்பட்ட அற்புதமான மனிதர். பார்ப்பன நடுத்தர வர்க்க பார்வையாளர்களை மய்யப்படுத்திய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த 80களில் வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர் பிரச்சனைகளை மய்யப்படுத்திய திரைப்படங்கள் வெளிவர காரணமாக இருந்தவர். இனி ஒரு சுதந்திரம், வீரப்பதக்கம், தோழர் பாண்டியன், அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் மணிவண்ணனின் வசனங்கள் சமகால அரசியலை மிகத் துணிச்சலாக சாடியவை.

97 என்று நினைவு.. மதுரை தமுக்கம் மைதானத்தில் தமுஎச சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை இரவில் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உள்ளத்தை அள்ளித் தா, அவ்வை சண்முகி என மணி்வண்ணன் இயக்குனர் பணியில் இருந்து தற்காலிகமாக விடுபட்டு முழு நேர நடிகனாக தன்னை வடிவமைத்து கொண்டிருந்த நேரம். அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து உருவாகி இருந்த நேரம். அந்த மாநாட்டில் இடது சாரித் தோழர்கள் தவிர்த்து வெகுசன மக்கள் பலரும் மணிவண்ணனை பார்ப்பதற்காக கூடி இருந்தனர். அந்த பெருந்திரள் கூட்டத்திற்கு முன் மிகவும் பணிவாகப் பேசிய அவரது உரையின் பாதிப்பு பத்து நாட்களுக்கு மேல் என்னிடம் இருந்தது. கடந்த ஒராண்டிற்கு முன் மூவர் தூக்கிற்கு எதிரான உண்ணாநிலை மேடைக்கு மணிவண்ணனை அழைப்பதற்காக அவருடைய வீட்டிற்கு நானும் அமீர் அப்பாஸூம் சென்றிருந்தோம். அப்போதும் மிகவும் தன்மையுடன் பேசினார். அவருடைய மகன் வயதில் உள்ள என்னை அவரது சம வயது தோழர் போல் நடத்திய அவரது பண்பு இன்றைய அரசியல்வாதிகள் , பிரபலங்கள் எத்தனை பேருக்கு வரும்?

அய்ம்பது திரைப்படங்களை இயக்கிய, 400 படங்களில் நடித்த 30 ஆண்டு காலமாக பொதுவுடைமை அரசியலுடனும் திராவிட இயக்க ஆளுமைகளுடனும் தொடர்பு வைத்திருந்த மனிதரின் எளிமை என்னை ஆச்சரியப்படுத்தியது. இனி இது போல் என்னை ஆச்சரியப்படுத்தும் அற்புதமான மனிதர்களை என் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. அந்த மதுரை கலை இரவில் திரையில் தோன்றும் நடிகர்களை நேரில் பார்ப்பதையே அதிசயமாக நினைக்கும் மனநிலைதான் என்னிடம் இருந்தது. அப்போது எனக்கு வயது 12. ஆனால் சமீபத்தில் அவரை சந்தித்த போதும் அதே பிம்பம்தான் எனக்கு இருந்தது. சினிமா குறித்தும் நடிகர்கள் குறித்தும் எனக்கிருந்த மாய பிம்பம் உடைந்திருந்த இந்த காலகட்டத்திலும் அவர் என்னை முழுமையாக வசியபடுத்தி இருந்தார் என்பது நான் மறுக்கமுடியாத உண்மை. ஏனென்றால் இயக்குனர், நடிகர் என்கிற நிலையைத் தாண்டி அற்பதமான மனிதராக அவர் இருந்தார் என்பதை நான் உணர்ந்து கொண்ட அனுபவம்.

அமைதிப்படை திரைப்படம் வந்த புதிதில்தான் மணிவண்ணனைப் பற்றிய பிம்பத்தை எனக்கு என் அப்பா (ஏபி.வள்ளிநாயகம்) கொடுத்தார். மதுரை மதி திரைஅரங்கில் ஒரு இரவுக் காட்சி அந்த திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்தோம். சத்யராஜ் அந்த படத்தில் பெரியாரின் வசனத்தை பேசுவார். அந்த வயதில் அந்தக் காட்சி ஒன்று மட்டுமே எனக்குப் புரிந்தது. மிகவும் பிற்காலத்தில் அந்த படத்தை பார்க்கும் போதுதான் தீண்டாமை கொடுமை, நாத்திக பிரச்சாரம், அரசியல் நையாண்டி என பல்வேறு கருத்துக்கள் அந்த படத்தில் இருப்பது புரிந்தது. இப்பேர்பட்ட கலைஞனுக்கான அங்கீகாரத்தை திரையுலகம் கொடுக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.

பாரதிராசா போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த இயக்குனர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் வார இதழில் மணிவண்ணன் குறித்து பேசியது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது. முதல் மரியாதை, வேதம் புதிது எடுத்த பாரதிராசாவா இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் என்பது நெஞ்சைப் பிளக்கும் கேள்வியாக இருக்கிறது. பாரதிராசாவே உங்க படத்தை பார்த்துட்டு நாங்க கரையேறிட்டோம் நீங்க கரையேறலையா? அலைகள் ஓய்வதில்லை, காதல் ஒய்வதில்லை, வேதம் புதிது, கருத்தம்மா என உங்களின் பல படங்கள் உடைமை சமூகத்தையும் சாதிய சமூகத்தையும் கேள்விக்குட்படுத்திய காவியங்கள்தான். அதற்காக தமிழ் திரைச் சூழலில் உங்களுக்கு ஒப்பற்ற இடத்தை மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் கொடுத்து வைத்திருந்தார்களே, அதற்கு நீங்கள் கொடுத்த பரிசு இதுதானா?

மணிவண்ணன் என்கிற மனிதன் வறுமையில் பிறந்திருக்கலாம்; வலியுடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதற்காக மணிவண்ணன் வருத்தப்பட்டிருக்க மாட்டார். ஆனால் தன் வாழ்நாளில் கடைசி தருணங்களில் ஏற்பட்ட மன வலியை அவரால் தாங்கியிருக்க முடியாது. பாரதிராசாவே கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்தாலும் பத்திரிக்கை தர்மத்தை கருத்தில் கொண்டு விகடன் பத்திரிக்கை அந்த வார்த்தைகளை தணிக்கை செய்திருக்கலாம்.

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வரும் இயல்பான தந்தை போலவே நிஜ வாழ்க்கையிலும் அற்புதமான மனிதராகவே மணிவண்ணன் வாழ்ந்திருக்கிறார். பணம் இல்லாதபோது கம்யூனிசமும் சாதி ஒழிப்பு சிந்தனையுடன் படம் எடுத்த பல பேர் இன்று உடைமை சமூக உணர்வுடனும் சாதி உணர்வுடனும் இருப்பதை நாம் கண்கூடாய் காண்கிறோம். இது போன்ற சந்தர்பவாத சமூகத்தில் இறுதி வரை தான் கொண்ட கொள்கைகளே தனக்கான அடையாளம் என்று வாழ்ந்த அற்புதமான மனிதர் மணிவண்ணன். அந்த படைப்பாளியின் கொங்கு நாட்டு கிண்டலை நம்மால் மீண்டும் கேட்கமுடியுமா? ஈழப்பிரச்சனைக்கும் பெரியாரிய மேடைகளுக்கும் வலிய வந்து உதவி செய்யும் கொள்கையாளரை மீண்டும் சந்திக்க முடியுமா என்கிற கேள்விகள் எழும் போதே இந்த இழப்பின் வலியை நம்மால் உணர முடிகிறது.

கார்ப்பரேட் கலாச்சரத்தை மய்யப்படுத்திய மேட்டுக் குடி பாணி இயக்குனர்கள் மய்யம் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் காரல் மார்க்ஸின், பெரியாரின் கருத்துக்களை திரைஅரங்குகளில் பேச வைத்த எளியவர்களின் இயக்குனரை, அரசியல் விமர்சகரை நாம் இனி எங்கு காணப் போகிறோம்? பகுத்தறிவுவாதியாக மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆனால் பாமர ரசிகனாக என்னால் எதுவும் பேச முடியவில்லை.

உடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க..!


காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். 

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. 

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர். 

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. 

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம். 

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். 

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும். 

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம். 

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம். 

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. 

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும். 

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். 

இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. 

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே… அதே பாணியில் பருமனையும் கரைப்போம்! (நன்றி மருத்துவ உலகம்)

 

இணையற்ற தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களை ஏன் காட்டவில்லை? – சத்தியராஜ்!


1013011_206158396204861_814878855_nபகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..!!” என்கிற தனது ஆதங்கத்தினை நடிகர் சத்யராஜ் வெளிபட்டுத்தினார்.
துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், கதாநாயகி அமலாபால், சத்யராஜ், சரண்யா, மனோபாலா, ஆர்.பி. சவுத்ரி, எஸ்.ஏ. சந்திரசேகர், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தலைவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். முன்னதாகத் தலைவர்களைப் பற்றிய லேசர் வரைகலையில் பிரபாகரன் காட்டப் படாததில் ஏற்கனவே பலர் அதிருப்தியில் இருக்க, புரட்சித் தமிழன் மற்றும் ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய சத்யராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன..? மேடையில் ஏறிய அவர், ” உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்… நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..!!” என்கிற தனது ஆதங்கத்தினை வெளிபட்டுத்தினார்.

இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்!


988542_206166796204021_875942517_nகடந்த ஒரு வாரமாக வட இந்தியாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளமென்றால் சாதாரண வெள்ளமல்ல.. இந்தத் தலைமுறை தன் வாழ்நாளில் கண்டிராத வெள்ளம். இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கின்றன மீடியாக்கள்.

குறிப்பாக உத்தர்கண்டின் பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களையொட்டிய சிறு நகரங்களும் கிராமங்களும் முற்றாக உருக்குலைந்து போயிருக்கின்றன. சுமார் 5500 பேர்களுக்கு மேல் மூழ்கிப் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கேதார் நாத் என்ற புனிதத் தலமே முற்றாக மண்ணில் புதைந்திருக்கிறது, அங்கிருந்த சிவன் கோயிலையும் சில கட்டிடங்களையும் தவிர. உத்தர்காசி, ருத்ரப்ரையாக், ரிஷிகேஸ், பத்ரிநாத் போன்ற இடங்களில் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டிருந்த அத்தனை கட்டடங்களையும் இழுத்துக் கொண்டு போய்விட்டது கட்டுக்கடங்காத வெள்ளம்.

ஆனால் இந்தப் பேரழிவுக்கான பழியை இயற்கை மீது யாரும் போட முடியாது. இது Man Made Disaster என்றே அனைவரும் சொல்கிறார்கள். இத்தனை ஆயிரம் பேர் இறந்து போய்விட்டார்களே… இவ்வளவு நாசமாகிவிட்டதே… என்றெல்லாம் வருத்தப்படுபவர்கள் மிகக் குறைவுதான்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்த இமயமலை புண்ணியத் தலங்களில் ஒற்றைக் கோயிலும் சுற்றி நான்கைந்து சிறு கூரை வீடுகளும்தான் இருந்திருக்கின்றன. அவ்வளவு ஏன்… எண்பதுகளில் கூட கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்துள்ளன.

இதற்கு முன்பும்கூட பலமுறை இமயமலையில் பெரும் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. மேகம் வெடித்து வானமே பொத்துக் கொண்டது போல வெள்ளம் ஓடியிருக்கிறது. ஆனால் அப்போது ஆறுகளின் வழித் தடங்கள் சிதைக்கப்படவில்லை.

ஆறுகளின் பாதைகள் மறிக்கப்படவோ மாற்றப்படவோ இல்லை. மலைப் பள்ளத்தாக்குகளில் புதிய சாலைகள் ஏதும் போடப்படவில்லை. ராட்சத எந்திரங்கள் கொண்டு மலைகள் சிதைக்கப்படவில்லை. குறிப்பாக மின்சாரத்துக்காக நூற்றுக்கணக்கில் சிறு – பெரு அணைகள் கட்டப்படவில்லை.

ஆனால் இந்த 30 ஆண்டுகளில் இமயமலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள் என்பதை இஸ்ரோ சமீபத்தில் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன. 70க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்காக கேதர்நாத் கோயிலை ஒட்டி ஓடுகிற மந்தாகினி ஆற்றின் போக்கை கடந்த பல ஆண்டுகளாக திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள். இப்போது பெருமழை பெய்து, கேதர் டோம் என்ற பனிச் சிகரமும் உடைந்து சர்பால் ஏரியில் விழுந்து பனிச் சுனாமியை உருவாக்கியதால், மந்தாகினி ஆறு தனது பழைய பாதையைதே தேடி பெரும் வேகத்தில் வழியிலிருந்து மனிதர்கள், கட்டடங்கள், வாகனங்கள் அத்தனையையும் வாரிசு சுருட்டி வீசிவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

கங்கையின் மற்ற முக்கிய துணையாறுகளான பாகீரதி 80 சதவீதமும், அலக்நந்தா 65 சதவீதமும் பாதை மாற்றப்பட்டுள்ளன, மின் திட்டங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்காக. மற்ற சிறிய ஆறுகள் 90 சதவீதம் அதன் போக்கிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளனவாம். இப்படி இயற்கையின் போக்கை மாற்றியிருப்பது, எதிர்வரும் நாட்களில் பேரழிவைத் தோற்றுவிப்பது நிச்சயம் என்று கூறியுள்ளார் உத்தர்கண்ட் பகுதி சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர் மகராஜ் பண்டிட்.

மெகா சாலைகள்…

கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைகளை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, இந்த மலைப் பகுதிகளை தாறு மாறாக சிதைத்ததும் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்.

“பிரயாகை பாலத்தின் ஓரத்தில் நின்றபடி, அந்த வழியாகப் போகும் வாகனங்களை ஒரு நாள் கவனித்தேன். ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் 117 பஸ்- லாரி – கார்கள் கடந்து சென்றன. இது எத்தனை கொடுமை… முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நூறு வாகனங்கள் கூட செல்லாமலிருந்த பகுதிகள் இவை. இவ்வளவு வாகனங்கள் வருவதற்காக உருவாக்கப்பட்ட சாலைகளுக்காக, எத்தனை மலைகளை சிதைத்திருப்பார்கள்… அதனால் இந்தப் பிரதேசத்தின் மண் பலமிழந்து, சரிந்து விழும் தருணத்துக்காக காத்திருந்தது என்பதுதான் நிஜம்,” என்கிறார் பண்டிட்.

இன்னொரு பக்கம் எந்த சட்டங்களையும் மதிக்காமல் மனிதர்கள் இயற்கையைச் சிதைத்ததும் அதற்கு அரசுகளே துணை போனதையும் யாராலும் மன்னிக்க முடியாது. இவர்களுக்கு இந்த தண்டனை தகும் என்பதுதான் பலரது கருத்தும். ஆற்றங்கரைகள் எனத் தெரிந்தும் மந்தாகினி, அலக்நந்தா, பாகீரதி போன்ற நதிக்கரைகளின் ஓரங்களில் பல நூறு பிரமாண்ட கட்டடங்களை கட்டி ஓட்டல், கடைகள் நடத்திய மனிதனின் பேராசையை அப்படியே மண்ணோடு மண்ணாக்கியுள்ளது இந்த இமயமலைச் சுனாமி.

இந்த இயற்கைச் சீற்றத்தில் 5000 உயிர்களுக்கு மேல் பலியாகியிருப்பது மனதை துணுக்குற வைக்கிறது. ஆனால், பெருமழைக் காலம் என்று தெரிந்தும், புனித யாத்திரை என்ற பெயரில் ஆபத்தான இந்த இடங்களுக்கு ஆயிரக்கணக்கில் பயணித்திருக்கிறார்கள். இதில் நமக்குத் தெரிந்தவர்கள்.. ஏன் நாமே கூட பாதிக்கப்பட்டிருந்தாலும், பழியை இயற்கை மீது போட்டுவிடுவதற்கில்லை.காரணம், நம்மை இயற்கை சிதைக்கவில்லை… நாம்தான் இயற்கையை அதன் போக்கில் விடாமல் நம் சுயநலத்துக்காக சிதைத்து சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உலகின் வெப்பநிலை சமனற்றுப் போயுள்ள தருணம் இது. இதில் முதல் இலக்காக நிற்பதே இந்தியாவின் இமயமலைப் பகுதிகள்தான் என சர்வதேச சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதையெல்லாம் மீறி, நாம் தவறுகளைத் தொடர்ந்தால், இதைவிட பலமான தண்டனைகளுக்குள்ளாக வேண்டியிருக்கும்…

புனிதத் தலங்கள் எனப் போற்றப்படும் இந்த இடங்களுக்குப் போய் பேராபத்தில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவக்கூட அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முன்வரவில்லை. இத்தனை கோரமான சூழலிலும் கிடைத்த வரை சுருட்டிக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர். ஒரு சாதாரண ரொட்டியைக் கூட நூற்றுக் கணக்கில் விலை வைத்து விற்று பணம் பார்த்திருக்கின்றனர். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ… ஆனால் அன்பற்ற இந்த மனிதர்கள் வசிக்கும் இதுபோன்ற பிரதேசங்களுக்கு புனித யாத்திரையெல்லாம் தேவையா… இருக்குமிடத்திலிருந்தே இறைவனைத் தேடுங்கள் என இயற்கையே பாடம் நடத்தியிருக்கிறது.


கற்பனைக்கெட்டாத பரப்பளவில் பரந்து விரிந்த இமயமலைக்கே இந்த கதி என்றால், சுற்றுலா என்ற பெயரில் கொடுமையாக சிதைக்கப்பட்டுள்ள சிறு வனப் பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது!

தமிழ் பிறந்த மண்ணாம் யாழ்ப்பணத்தில் தாய்மொழி தமிழுக்கு தடை விதித்தவர்கள் யார்..!!!


யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அண்மைக் காலங்களாக நிகழ்வுகளுக்கு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் முன்னிலைப்படுத்துவதன் நோக்கம் என்ன?
இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் ?
கடந்த முறை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது
இந்த விதமான செயற்பாடும் இனவழிப்பில் ஒரு வகை என்பதை இங்கு ஆணித்தரமாக பதிவு செய்கிறோம்.
(இதன் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எமக்கு கிடையாது)

மொழி அழிந்து போனால், இனம் அழிந்து போகும்…!