மே 17 இயக்கம் போராட்டம்! காங்கிரசாரும் எதிர் போராட்டம்!


இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாக கூறி சத்தியமூர்த்தி பவனை இன்று (23.02.2013) முற்றுகையிடப்போவதாக மே 17 என்ற தமிழ் அமைப்பு அறிவித்திருந்தது.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் இணை போலீஸ் கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த வருவதை அறிந்ததும் ஏராளமான காங்கிரசாரும் சத்தியமூர்த்தி பவனில் திரண்டனர். மாநில தலைவர் ஞானதேசிகனும் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த வந்தால் மோதல் ஏற்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதனால் ஜி.பி. ரோடு முனையிலேயே தடுப்பு வேலி அமைத்து முற்றுகை போராட்டத்துக்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த அமைப்பின் தலைவர் திருமுருகன் தலைமையில் காங்கிரசுக்கு எதிராகவும், இலங்கை தமிழர்கள் படுகொலை தொடர்பாகவும் சோனியா, மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரை விசாரிக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினார்கள்.

தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த வந்திருப்பதை அறிந்ததும் சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்த காங்கிரசார் ஆவேசத்துடன் மெயின் ரோட்டுக்கு ஓடி வந்தனர். உடனே போலீசார் நடுரோட்டில் அவர்களை பெரும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினார்கள்.

உடனே அவசர அவசரமாக போலீசார் தமிழ் அமைப்பை சேர்ந்த சுமார் 30 பேரை கைது செய்து வேனில் ஏற்றி பாதுகாப்பாக கொண்டு சென்றனர். காங்கிரசாரை ஞானதேசிகன் சமாதானப்படுத்தி சத்தியமூர்த்தி பவனுக்குள் செல்லும்படி அனுப்பி வைத்தார்.

காங்கிரஸ் தரப்பில் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கைது செய் கைது செய் தேச துரோகிகளை கைது செய்’ என்று ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் ஜி.பி. ரோட்டில் சுமார் 1 மணி நேரம் பதட்டமும் பரபரபரப்பும் நிலவியது.

நடிகர் குண்டர் சட்டத்தில் கைது


கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் பிரவீன் (24). இவர் திருமணமானவர். கடந்த 2011-ம் ஆண்டு 13 வழிப்பறி வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர். பின்னர் 4 மாதத்தில் வெளியே வந்த இவர், மீண்டும் வழிப்பறி, திருட்டு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து பிரவீனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, துடியலூர் போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரவீன் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
டிப்ளமோ படித்துள்ள பிரவீன், வேட்டிய மடிச்சுக்கட்டு, முதல் பயணம் மற்றும் பல படங்களில் துணைநடிகராக சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என தெரியவருகிறது.

கணவர் கொலை: மனைவி கைது, கள்ளகாதலன் தலைமறைவு


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள தாடிகாரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கண்ணன், வயது-35. இவர் செங்கல்சூளை நடத்தி வந்தார்.
இவரது மனைவி மாதம்மாள், வயது-30. இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, சரிதா,வாயது-10, கார்த்திகா, வயது-5 ஆகிய இரு மகள்களும் பிரதாப் வயது-7 என்கிற ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமாருக்கும் வாயது-35 என்பவருக்கும், மாதம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் தெரிகிறது.
இதனால், லிங்கண்ணன், மாதம்மாள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு முற்றி கணவன் மனைவிக்குள் கைகலப்பு நடந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த சிவகுமார், அன்றிரவே தாடிக்காரன் கொட்டாயில் உள்ள லிங்கன்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வந்தததும், லிங்கண்ணனை சிவக்குமார் கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது.
இதில், லிங்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மாதம்மாள்,சிவக்குமார் இருவரும் சேர்ந்து லிங்கண்ணன் உடலை அருகில் உள்ள செங்கல் சூளையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் மூடினராகள்.
வியாழக்கிழமை காலை லிங்கண்ணனின் மகன் பிரதாப் தனது தந்தையும்,சிவக்குமாரும் சண்டை போட்டுக் கொண்டனர் என்றும், தனது தந்தைக்கு ரத்தம் வந்ததாகவும் பக்கத்திலிருந்த உறவினர்களிடம் கூறியுள்ளான்.
இதுகுறித்து அவர்கள் போச்சம்பள்ளி போலீஸில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில், பர்கூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் கஜேந்திரன், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் வந்து மாதம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்த மாதம்மாள் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழித்து சென்று விசாரனை நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. லிங்கண்ணன் வீட்டிலிருந்து அருகில் உள்ள செங்கல் சூளைக்கு ஓடிய மோப்ப நாய், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலைத் தோண்டியது.
மோப்ப நாய் அடையாளம் காட்டிய அந்த இடத்தில் போலீஸார் மணலைத் தோண்டிப் பார்த்த போது லிங்கண்ணன் கொலை செய்யப்பட்டு மணலில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
லிங்கண்ணன் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து,லிங்கண்ணன் மனைவி மாதம்மாளை போலீஸார் கைது செய்தனர். தலைமரப்வாக உள்ள சிவக்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! டிரைவர் கைது!


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி, கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகன் சின்ராஜ் (வயது- 20). இவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் கடந்த வாரம் ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களை சமன் செய்யும் பணியை செய்துள்ளார். அப்போது, சீலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயதான கவுதமி, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்ற சின்ராஜ், வீட்டில் தனியாக இருந்த கவுதமியை கடத்திச் சென்று, பக்கத்தில் இருந்த பாக்குத்தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இடத்தேலேயே மயங்கிக் கிடந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் மீட்டு ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போதுதான் சிறுமி கவுதமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கவுதமியின் பெற்றோர்கள் மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுகுறித்து விசாரனை நடந்து வருகிறது.

கிரிவல நேரம் அறிவிப்பு


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாசி மாதம் கிரிவலம் 25 . 2. 2013 திங்கள்கிழமை விடியற்காலை 2.50க்கு தொடங்கி மறுநாள் 26.2.2013 விடியற்காலை 3.05க்கு முடிகிறது. அதனால் திங்கள் கிழமை கிரிவலம் வந்தால் சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் போட்டி நடுவருக்கு எதிர்ப்பு:


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை நடுவரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடக்க உள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த குமார தர்மசேனா என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். குமார தர்மசேனா நடுவராக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை இந்தியாவை விட்டு வெளியேற்றக்கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ராஜபச்சேவின் உருவப்படத்தையும் தீ வைத்து எரித்தர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.