ராஜபக்சேவின் மனித உரிமை மீறலை இந்தியா புரிந்துகொள்ளாதது ஏன்? – கலைஞர்


karunanithi-mahinda

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் நிலைமைகள் முற்றிய போதி லும்; வாழ்வாதாரத்தை இழந்து – வாழ்வுரிமைகளைப் பறிகொடுத்த ஈழத் தமிழர்களின் வரலாறு காணாத தொடர் இன்னல்களை, இந்திய அரசு இன்னமும் முழுமையாகப் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. குறிப்பாக

நேற்றைய தினம் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கூடப் பூசி மெழுகத்தான் பார்த்திருக்கிறார்.

அதிலே, “இலங்கையுடனான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது; அங்கு இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் குடியேற்றம் செய்வது, புனர் வாழ்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அமைதியான கவுரவமான சம அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதில், இந்தியா உறுதியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்று கூறப்பட்டிரு ப்பதனைத்தும் வெறும் சொற்றொடர்களே தவிர, தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிக்கும் கருத்துகளாக இல்லை.

இலங்கை அதிபர் ராஜபக்சே ஈழத்தமிழர்கள்பால் அக்கறை கொண்டவரைப் போல இந்திய அரசிடம் காட்டிக் கொள்வதும், இந்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வதும், அதே நேரத்தில் அந்த உதவிகளை ஈழத் தமிழர்களுக்குப் பயன்படுத்தாமல், சிங்களவர்களுக்கே பயன்படுத்துவதும், தமிழ்ப் பெயரிலே உள்ள ஊர்களை எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றுவதும், தமிழர்க்குரிய கோயில்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்குவதும், தமிழர்களின் நிலம், வீடு மற்றும் பாரம்பரிய உடைமை களையெல்லாம் பறித்துக் கொள்ளும் சிங்களவர் ஆக்கிரமிப்பையும் – வெறித்தனமான சிங்களமயமாக் கலையும் ஊக்குவிப்பதும் போன்ற இனவெறிச் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.

பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் நாயனார் பற்றி ஒரு கதை உண்டு. அதில் மெய்ப்பொருள் நாயனாரைக் கொலை செய்வதற்காக முத்தநாதன் என்ற குறுநில மன்னன் வருவதை, சேக்கிழார் வர்ணிக்கும்போது,

“மெய்யெலாம் நீறுபூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கயினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே யென்ன மனத்தினுள்கறுப்பு வைத்துப் பொய்தவவேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்” என்று பொருத்தமாகக் குறிப்பிடுகிறார்.

அதாவது மெய்ப்பொருள் நாயனார் எனும் மன்னரைக் கொலை செய்ய வேண்டுமென்று சதித் திட்டம் தீட்டிய முத்தநாதன் என்ற குறுநில மன்னன், உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, முனிவர்களைப் போல முடியை இழுத்து மாற்றிக் கட்டிக் கொண்டு, தவ வேடமணிந்து

போரில் எதிர்த்து நின்று வெல்ல முடியாது என்ற நிலையில், தவ முனிவர் வேடமணிந்து ஏமாற்றிக் கொல்ல முற்பட்ட முத்தநாதனைப் போல, சிங்கள அதிபர் ராஜபக்சே இந்திய அரசுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக நடித்து, தனக்குத் தேவையானதையெல்லாம் சாதித்துக் கொண்டு; அதே நேரத்தில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். கையில் புத்தகங்களும், புத்தகங்களுக்கு இடையே கத்தியையும் வைத்துக்கொண்டு, அரண்மனைக்குள் நுழைகிறான்; அப்படி நுழையும்போது மனத்தில் கொலைசெய்ய வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் நுழைந்ராதான் என்பதைச் சேக்கிழார், விளக்கு எரியும்போது திரியின் நுனியில் ஒளியும், திரியின் அடியில் கரியும் இருப்பதைப் போல வெளியிலே தவ வேடமும், உள்ளே கொலை செய்யும் கெட்ட நோக்கமும் கொண்டு நுழைந்தான் என்கிறார்.

மனித நேயத்திற்கு எதிரான – மனித உரிமைகளுக்குப் புறம்பான அவரது கொடுங்கோன்மைச் செயல்பாடு களை உலக நாடுகள் எல்லாம் புரிந்து கொண்டு “ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

உலக நாடுகள் எல்லாம் சர்வாதிகாரச் சதிகாரரை உணர்ந்துள்ள சூழலில், நெஞ்சில் நஞ்சும் முகத்தில் நட்பு வேடமும் பூண்டுள்ள, இலங்கையின் “மைபொதி விளக்கை மத்திய அரசு எப்போதுதான் புரிந்து கொள்ளுமோ?’’ என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்


இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற்ற 2 நாள் திருவிழா இன்று நிறைவடைந்தது.

இந்த திருவிழாவில் இலங்கையில் உள்ள இந்திய தூதர் அசோக் கந்தா, இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்களும் இந்த திருவிழாவை கண்டு களித்தனர்.

மீனவர்களிடையே பேசிய இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, ’’இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையே நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்’’ என்று கூறினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது: தண்டனையை உறுதி செய்த முன்னாள் நீதிபதி


ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21.5.1991 அன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நளினி தரப்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை பரிசீலித்த பிறகு நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மரண தண்டனையை எதிர்நோக்கி வேலூர் சிறையில் காத்திருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்களை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

இதனையடுத்து, அவர்களை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டடது. இம்மனுவை விசாரித்த நீதிபதி 6 வார காலம் வரை அவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என தடைவிதித்தார்.

இந்நிலையில், இவர்களின் மரண தண்டனையை 1999ம் ஆண்டு உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் அமர்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,  ‘’முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 22 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். அவர்களை இப்போது தூக்கிலிடுவது ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை தண்டனை விதிப்பது போல் ஆகிவிடும்.  இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

ஆயுள் தண்டனை காலத்திற்கும் மேலாக அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டதால் இது தொடர்பாக ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

400 குழந்தைகளை கொன்று ஆற்றில் வீசிய கொலைகாரி


இங்கிலாந்து தேசிய ஆவணகாப்பகம் கடந்த 1770 முதல் 1934-ம் ஆண்டுகளில் நடந்த 25 லட்சம் கொடுங்குற்ற செயல்கள் குறித்த ஆவணங்களை ஆன்லைனில் வெளியிட்டது. அதில், அமீலியா டயர் (58) என்ற பெண் மிக கொடூரமான இரக்கமற்ற கொலைகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 வயதான அமீலியா டயர் நர்சு ஆக இருந்தாள்.

திருமணத்துக்கு முன்பே கள்ளக்காதலில் தாயாகும் பெண்கள் தங்கள் குழந்தைகளை இவளிடம் கொடுத்து பராமரித்து வந்தனர். அதற்காக அவளுக்கு பணமும் கொடுத்தனர்.

அக்குழந்தைகளை வசதிபடைத்த தம்பதிகளிடம் தத்து கொடுத்து வளர்ப்பதாக உறுதி அளித்தாள். அதை நம்பி தங்கள் குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்து வந்தனர். ஆனால், அவள் அக்குழந்தைகளை கேம்ஸ் ஆற்றில் வீசி கொன்றாள். அது போன்று 400 குழந்தைகளை இரக்கமின்றி கொலை செய்தாள்.

இக்கொலைகளுக்காக அமீலியா டயர் கைது செய்யப்பட்டாள். இக்குற்றச் செயலுக்காக அவள் 1896-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டாள்.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான வித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!


 

 

 

சென்னையில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான வித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள இன்டர்நெட் மையம் ஒன்றில் வித்யா பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 30ஆம் தேதி வித்யா மீது விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார். அப்போது அங்கிருந்தவர்கள் விஜயபாஸ்கரை பிடித்தனர். திருமணத்திற்கு மறுத்ததால் இன்டர்நெட் மையத்தில் வைத்து வித்யா மீது ஆசிட் வீசியதாக விஜயபாஸ்கர் கூறினார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த வித்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (24.02.2013) அதிகாலை 4.15 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

திராவக வீச்சில் உயிரிழந்த இரண்டாவது பெண் வித்யா ஆவார். இதேபோல் காரைக்காலில் நவம்பர் 14ல் ஆசிட் வீச்சுக்கு ஆளான வினோதினி பிப்ரவரி 12ஆம் தேதி மரணம் அடைந்தார்.

ச்சதீவுத் திருவிழாவை அரசியலாக்கும் டக்ளஸ்; வட மாகாண மீனவர் அமைப்புகள் குற்றச்சாட்டு


news

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் மயப்படுத்த முனைகிறார். இவர் தனது சுயநல அரசியல் தேவைக்காக இந்தியா இலங்கை மீனவர்களிடையே நிரந்தர விரிசலை ஏற்படுத்த முனைகிறார் என வடமாகாண மீனவர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து 5 ஆயிரம் படகுகளுடன் போராடச் செல்லப் போவதாகக் கடந்த ஒரு வருடமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து வருகின்றார். இருப்பினும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவுள்ள அவர் இதுவரையில் இந்தப் போரட்டத்தை நடத்தவில்லை.
இந்த நிலையில் கச்சதீவு அந்தோனியர் ஆலய திருவிழாவுக்குச் சென்றுள்ள அமைச்சர் அங்கு வைத்து இந்தப் போரட்டத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வடக்கு மாகாணத்திலுள்ள மீனவர் அமைப்புக்களிடம் கேட்ட போது, ஆலயத் திருவிழாவில் வைத்து அரசியல் செய்யக் கூடாது. இருநாடுகளுக்கும் பொதுவான திருவிழா கச்சதீவு அந்தோனியர் உற்சவம். இங்கு வைத்து இப்படியான போரட்டங்களை முன்னெடுப்பது பிழையான நடவடிக்கை.
தனது அரசியல் சுயலாபத்துக்காக இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையைக் கையிலெடுத்துக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை அவர் மேற்கொள்ளக் கூடாது. இதனால் இந்திய இலங்கை மீனவர் உறவில் விரிசல் ஏற்படும். எமக்கு இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பிரச்சினை உள்ளதுதான். அது தீர்க்கப்படவேண்டும்.
அதற்காக இவ்வாறு புனித இடத்தின் மதிப்பைக் கெடுக்கும் வகையில் செயற்படக்கூடாது. எனவே அரசியல் நோக்குடன் எமது பிரச்சினை கையாளப்படுவதையும், புனித தலத்தின் மகிமையை கெடுக்கும் வகையிலும் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்றனர்.