யாழ்.நகரை அண்மித்த பகுதியில் டக்ளஸ் ஆதரவில் நிரந்தர சிங்களக் குடியேற்றம்


                யாழ். நகரத்தையொட்டிய எல்லையான நாவற்குழியில் நிரந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளன. இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடனும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் இந்தக் குடியேற்றப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிரந்தர சிங்களக் குடியிருப்பில் குடியேறியுள்ளவர்களுக்கு காணிகளைச் சொந்தமாக வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைசசர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறும் நோக்குடன் 54 குடும்பங்கள் சிங்களக் குடும்பங்கள் திடீரென வந்து யாழ். ரயில் நிலையத்தில் தங்கின. 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் தாம் இங்கு வாழ்ந்தனர் என்று தெரிவித்தே அவர்கள் இங்கு குடியேற முயற்சித்தனர். எனினும் அதற்கான ஆதாரங்கள் எவையும் அவர்களால் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பவில்லை.
எனவே அவர்களுக்கான உதவிகள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ன. ஒரு மாத காலம் இந்த நிலைமை தொடர்ந்த பின்னர் திடீரென அவர்கள் அடாத்தாக நாவற்குழியில் குடியேறினர். தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள் அத்துமீறி புகுந்து கொட்டில்கள் அமைத்துத் தங்கினர்.
இந்த அத்துமீறிய குடியேற்றம் குறித்து வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரிகள் கொழும்பிலுள்ள தலைமையகத்துக்கு தெரியப்படுத்தியதுடன் அறிக்கை மேல் அறிக்கை அனுப்பினர். ஆனால் அங்கிருந்து அடாத்தான குடியேற்றத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நிரந்தரமாக்குக்குவதற்கு நடவடிக்கை
இவ்வாறு நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்கள் தமது குடியேற்றத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்துள்ளனர். இதற்கான நிதி உதவிகள் அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவினாலும் சிங்கராவய என்ற பிக்குகள் அமைப்பினாலும் தமக்கு வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிரந்தர சிங்களக் குடியேற்றத்துக்காக 20 வீடுகளுக்கு சுவர்கள் எழுப்பப்படடு கட்டடப் பணிகள் விரைவாக்கப்பட்டுள்ளன. மேலும் 40 வீடுகளுக்கான அத்திபாரங்களை அமைக்க குழிகள் வெட்டப்பட்டுள்ளன. சிமெந்துக் கலவை இயந்திரங்கள் சகிதம் இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வருகின்றன என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
”எங்களுக்கு இங்குள்ள அதிகாரிகளால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. தெஹிவளையைச் சேர்ந்த சிங்கராவய அமைப்பைச் சேர்ந்த பிக்குகளால் ஒரு வீட்டுக்கு 5 லட்சம் ரூபா என்ற ரீதியில் நிதி வழங்கப்பட்டது. எங்களுக்கு ஹெல உறுமய கட்சியினரும் பிக்குகளும் மட்டுமே உதவிகளைச் செய்கின்றனர்” என்று தெரிவித்தார், சிங்களக் குடியேற்றவாசிகளின் சார்பில் ஊடகங்களிடம் பேசும் சூட்டி என அழைக்கப்படும் மல்காந்தி.
”எமக்குத் தேவையான எல்லா வீடுகளையும் அமைப்பதற்குரிய நிதியை உடனடியாக திரட்ட அவர்களாலும் (பிக்குகளால்) முடியாதுள்ளது. இதனால் கட்டம் கட்டமாகவே நிதி தருகின்றனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிரந்தர சிங்களக் குடியேற்றத்தை வலுப்படுத்தும் விதத்தில் பன்சல (விகாரையுடன் உள்ள பொது நோக்கு மண்டபம்) அங்கு அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்துள்ள காணிகளை அவர்களுக்கே எழுதித் தருவதற்கான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்வார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தம்மிடம் சில நாள்களுக்கு முன்னர் உறுதியளித்தார் என்று அந்த மக்கள் ஊடகங்களிடம்  தெரிவித்தனர்.
”தற்போது நாங்கள் 135 குடும்பங்கள் இங்கு தங்கியுள்ளோம். எங்களுக்கு இப்போதுள்ள இந்தக் காணித் துண்டுகள் போதா. கடந்த 28 ஆம் திகதி இங்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எங்களுக்கு இந்தக் காணிகளைப் பகிர்ந்தளித்து உறுதி ஆவணங்களைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்” என்று மல்காந்தி கூறினார்.
135 குடும்பங்கள் குடியேறி இருப்பதாக மல்காந்தி கூறுகின்ற போதும் அவர்களில் யாரும் நிரந்தரமாக இங்கு குடியிருக்கவில்லை என்றும் இது சிங்களக் குடியேற்றம் ஒன்றை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஏற்படுத்தி குடாநாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் தொடர்ச்சியைத் துண்டாடுவதற்கான திட்டமிட்ட முயற்சி என்றும் தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நிரந்தமாகத் தங்குதவதற்கே
வீடுகளை இங்கு அமைக்கின்றோம்
“நாங்கள் இங்கு எல்லோரும் ஒரே நேரத்தில் தங்குவது கிடையாது. ஊருக்கு (அநுராதபுரம், மிஹிந்தலை) சென்று வருகின்றோம். இங்கு எமக்கு வேலை கிடையாது. பிள்ளைகளுக்கு பாடசாலை கிடையாது. எனவே நாம் இங்கு நிரந்தரமாகக் குடியேறவில்லை. அதற்காகத்தான் நிரந்தர வீடுகளை அமைக்கிறோம்” என்கிறார் மல்காந்தி.
நிரந்தரக் கட்டங்களை அமைப்பதற்கான உள்ளுராட்சிச் சபையின் அனுமதி எதுவும் இந்த மக்களால் பெறப்படவில்லை. சிங்கள மக்கள் நிரந்தரக் கட்டடங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் எதனையும் இதுவரை கோரவில்லை என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.துரைராசா தெரிவித்தார்.
அவர்கள் சட்டவிரோதமாகவே அதனை மேற்கொள்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்தச் சிங்களக் குடியிருப்புக்குத் தாமே பொறுப்பு என்று அதன் அருகில் உள்ள இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சீருடை அணிந்த ஒருவர்  தெரிவித்து வருகின்றார். அதற்கு முன்னதாக அங்கு வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர், இங்குள்ள சிங்கள மக்களை யாராவது வந்து சந்திப்பதாயினும் சரி, அவர்கள் தங்கியுள்ள பகுதிகளை ஒளிப்படம் எடுப்பதாயினும் சரி இராணுவ முகாமில் அனுமதி பெற வேண்டும் என்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை எச்சரித்திருக்கின்றார்.
அத்துடன் சிங்கள மக்களால் தாம் பிடித்து வைத்துள்ள காணி எல்லையில், “தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழி வீட்டுத் திட்டக் காணி’ என்ற பெயர் பலகை நடப்பட்டுள்ளது.
இதேவேளை சிங்கள மக்கள் இங்கு அடாத்தாகக் காணி பிடித்ததை அடுத்து அந்தப் பகுதியில் 125 தமிழ்க் குடும்பங்களும் காணி பிடித்துள்ளன. எனினும் அந்தக் குடும்பங்கள் அனைத்தும் எதுவித வசதிகளும் அற்ற நிலையில் கொட்டில் வீடுகளிலேயே வாழ்கின்றன.

முற்றுகை போராட்டம்


ராஜபக்சே 8ம் தேதி திருப்பதி வருகையை எதிர்த்து செவ்வாய் மாசி  5ம் நாள் அன்று “தமிழக வாழ்வுரிமை கட்சி” தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தும் என்று அதன் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்தார்.

குடிமகன்கள் போராட்டம்


மது குடிப்போர் விழிப்புணர்வு புரட்சி இயக்கம்’ சார்பில், மதுபான விலை உயர்வை கண்டித்து, சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் லட்சக்கணக்கான, “குடிமகன்’கள் உள்ள நிலையில், மது விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில், நான்கு பேர் மட்டுமே பங்கேற்றதால், போராட்டம் நடத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்பக்க சக்கரம் உடைந்து ஓடிய அரசு பேருந்து (படங்கள்)


 

bus panangulam 2

கீரமங்கலம் அருகே மதுரை சென்ற அரசு பஸ் முன்பக்க சக்கரம் உடைந்து தாறுமாறாக ஓடியது. ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் அருகில் உள்ள மரத்தில் மோதாமல் விபத்து தடுக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து அதிகாலை 6.05 மணிக்கு மதுரை நோக்கி புறப்படும் அரசு பஸ் 6.50 மணிக்கு கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்திற்குள் சென்ற கொண்டிருந்த போது இடது பக்கம் உள்ள சக்கரத்தின் அனைத்து போல்ட்களும் துண்டிக்கப்பட்டு சக்கரம் கழன்று தனியாக ஓடியது. முன்பக்க சக்கரம் உடைந்து பஸ்க்கு முன்னால் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்த பயணிகள் அலறிவிட்டனர். சக்கரம் உடைந்து ஓடியதை அறிந்த ஓட்டுநர் சாமியய்யா சாமார்த்தியமாக பஸ்சை வலது பக்கமாக திருப்பி அருகில் உள்ள புளிய மரத்தில் மோதிவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இது குறித்து அந்த அரசு பஸ்சில் வந்த பயணிகள் கூறும் போது : பஸ் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. பனங்குளம் கிழக்கு பஸ் நிறுத்தம் அருகில் வரும் போது டயர் கருகும் வாசனை வந்தது. அதனால் அறந்தாங்கி டெப்போவில் பழுது பார்த்து கொண்டு மேலும் செல்லலாம் என்று ஓட்டுநர் சாமியய்யாவும், நடத்துனர் ராமமூர்த்தியும் பயணிகளிடம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் கொஞ்ச தூரத்தில் இந்த சக்கரம் மாட்டப்பட்டுள்ள அனைத்து போல்ட்டுகளும் துண்டிக்கப்பட்டு சக்கரம் மட்டும் பஸ்க்கு முன்னால் ஓடியது. இதை பார்த்து பயணிகள் அலறிவிட்டோம். ஆனால் ஓட்டுநர் சாமார்த்தியமாக சிரமப்பட்டு பஸ்சை நிறுத்தினார். அதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.. உடைந்த சக்கரம் ஒரு வீட்டின் வழியாக ஓடியது. அப்போது அந்த வீட்டின் முன்பு நின்ற பெண் மீதும் சக்கரம் மோதாமல் 100 மீட்டக்கு மேல் ஓடி கீழே விழுந்தது என்றனர்.
மேலும் இந்த பஸ்சில் வந்த பயணிகள் கூறும் போது : பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி டெப்போக்களில் இருந்து செல்லும் அரசு பஸ்கள் சரியான பராமறிப்பு செய்யாமல் அடிக்கடி ஏதாவது பழுது காரணமாக நடுவழியில் நின்று விடுகிறது. அதனால் பயணிகள் நடுவழியில் தவிக்கும் அவல நிலை உள்ளது. அதனால் தினசரி இரவு டெப்போக்களுக்கு வரும் போது பேருந்துகளை பராமறிப்பு செய்வதுடன், சிறு சிறு பழுதுகளையும் நீக்க வேண்டும். அபபோது தான் இது போன்ற விபத்துகள் நடக்காமல் பாதுகாக்க முடியும் என்றனர்.
மேலும் ஒவ்வொரு அரசு பஸ்க்கும் கூடுதல் சக்கரம் மற்றும் பழுது நீக்கும் உபகரணங்களும் வழங்க வேண்டும். இந்த பஸ் நின்ற அதே நேரத்தில் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் பழுதாகி ஒரு அரசு பஸ் நின்றது.

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படை


dolfin

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களிடமிருந்து மீன்கள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டு இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று முன்தினம் அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உணவு தயாரிக்க வைத்திருந்த ரேஷன் பொருட்கள் போன்றவற்றை பறித்துக்கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.