Google Glass : வேண்டுமென்றே எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கிளறிவிட்டு அலைக்கழிக்கும் கூகுள் நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பு.
இப்போது யூடியூப்பில் சூடுபிடித்திருக்கும் புதிய வீடியோ கூகுள் கிளாஸ் மூலம் எதையெல்லாம் பார்க்க முடியும், எப்படி பார்க்க முடியும் என காண்பிக்கிறது.
மேலும் கூகுள் கிளாஸ் மூலம் எப்படி மின்னஞ்சல் அனுப்புவது, எப்படி படம் எடுப்பது, எப்படி Voice Commands ற்கு பதில் அளிப்பது, எப்படி குறுஞ்செய்தி அனுப்புவது என அனைத்தையும் நுனிப்புல் மேயும் மேலோட்டமாக அலசுகிறது இந்த வீடியோ.
ஆனால் உண்மையில் எப்படித்தான் இந்த கூகுள் கிளாஸ் வேலை செய்யப்போகிறது, அதன் புரோகிராம் என்ன? என்பது குறித்தோ, அல்லது எப்போது இவை சந்தைக்கு வரப்போகின்றன?, ஒரு கூகுள் கிளாஸின் விலையென்ன என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியிடவில்லை.
மாறாக கூகுள் கிளாஸின் சில பயனுள்ள புதிய நன்மைகளை பட்டியலிடுகிறது. உதாரணமாக கம்ப்யூட்டரில் வீடியோ சேட்டில் இருக்கும் ஒருவருக்கு உங்களது கூகுள் கிளாஸ் மூலம் நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதை காண்பிக்க முடியும்.
அதோடு ஒரு காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அதன் அழகு பற்றி கணணித்திரையில் உள்ள ஒருவருக்கு கேள்வி எழுப்ப முடியும். அவர் குரல் வழியாக பதில் அனுப்புவார்.
வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போதே இவை அடுத்து எங்கு, எப்போது திரும்ப வேண்டும் என சொல்லிவிடுகின்றன.
நீங்கள் ஒரு வீடியோ பதிவு கூட கூகுள் கிளாஸ் மூலம் செய்ய முடியும். இப்போது வானிலை நிலவரம் என்ன என குரல் வழிக் கேள்வி எழுப்பினீர்கள் எனில் கூகுள் கிளாஸ் தனது திரையில் காண்பித்துவிடுகிறது.
ஐந்து நிறங்களில் இந்த கூகுள் கிளாஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆனால் ஐந்தும் பக்கா ஸ்டைலிஷ் கண்ணாடிகள். சொல்வதெல்லாம் சரி! எப்போது கண்ணுல காட்டப்போறீங்க?
கூகுள் கிளாஸ் திட்டத்திற்கு எந்தளவுக்கு மரியாதை இருக்கிறதோ, அந்தளவுக்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிகின்றன. இவ்வளவு நாட்களும் கணணியில் மாத்திரம் தான் நாம் எது செய்தாலும் கூகுள் கண்காணித்துக்கொண்டிருந்தது. இப்போது நாம் எங்கு செல்கிறோம், எதை பார்க்கிறோம் என்பதை கூட மிக அந்தரங்கமாக கூகுள் தலைமைகள் தெரிந்துகொள்ளப்போகின்றன என்கிறார் ஒருவர்.
இனிமேல் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் முக்கிய பங்கு கூகுளுக்கு சென்றடையும் என்கிறார் மற்றொருவர். எதையும் தேடிப்பெறும் ஆர்வம் அற்றுப்போய் மனிதர்களை சோம்பேறிகளாக்க கூகுள் கிளாஸ் நிச்சயம் உதவப்போகிறது என்கிறார் இன்னுமொருவர்.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் இப்போது செய்திருக்கும் அறிவிப்பு ஒன்று பற்றியும் பலர் கவனத்தை திருப்பியிருக்கிறார்கள். ‘கூகுள் கிளாஸ் உங்களுக்கு கிடைத்தால் அதன் மூலம் நீங்கள் பிரயோசனமாக என்ன செய்ய விரும்புகிறீர்கள் என 50 சொற்களுக்குள் எழுதுங்கள், 15 செக்கன்களில் ஒரு வீடியோ அனுப்புங்கள், 5 புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள்.உங்கள் திட்டம் வித்தியாசமானதாக இருக்குமாயின் 1,500 அமெரிக்க டாலர் பெறுமதியான Glass Project Explorer Kit உங்கள் கைகளுக்கு கிடைக்கும். அதாவது நியூயோர்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்ஸிஸ்கோ இம்மூன்று நகரங்களில் ஒன்றில் நீங்கள் கேட்டு வாங்கிப்பெறலாம். கூகுள் கிளாஸ் திட்டத்தை எப்படி இன்னமும் மேம்படுத்தலாம் என எமக்கு உதவுங்கள் என்கிறது’ அந்த அறிவிப்பு.