சென்னை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை!


சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மோகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்திருக்கின்றனர். இதில் மோகன் உயிரிழந்திருக்கிறார்.

ஆனால் அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். தற்போது மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை காவல்துறை கூறி வருகிறது.

தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காவல்துறையால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் தேர்வுஇலங்கை எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் 16 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா


pizap.com14245298936341

உலகத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி நடாத்தும் சூப்பர் சிங்கர்.

கடந்த சில வருடங்களாக மக்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிச்சுற்று நேற்று சென்னையில் நடைபெற்றது.

இப்போட்டியில் பல குழந்தைகள் கலந்து கொண்டாலும் முதல் ஆறு இடத்தை பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா, ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு ஒன்றரை கோடி பார்வையாளர்கள் வாக்களித்தனர்.

இந்த ஆறு பேரில் முதல் மூன்று இடங்களை ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். இதனால் போட்டியில் இருந்து வெளியேறிய பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா ஆகியோருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர் மூன்றாவது இடத்தை ஹரிப்ரியா பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

6 பேர் பங்கேற்ற இந்த இறுதிச்சுற்றில்  வெற்றி பெற்ற ஈழத்தமிழ் சிறுமி ஜெசிக்கா இரண்டாம் இடம் பிடித்து 1 கிலோ தங்கம் வென்றார்.

கனடாவில் வசிக்கும் இவர் இந்த தங்கத்தில் பாதியை இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கும், மற்றொரு பாதியை ஈழத்தில் வாழும் அனாதை குழந்தைகளுக்கும் வழங்கி அனைவரின் மனதையும் மீண்டும் ஒருமுறை வென்றுள்ளார்.

ஜெசிக்கா தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்திற்கும், இலங்கையில் உள்ள வறியவர்களுக்கும் தானமாக வழங்கப்போவதாக தந்தை மூலம் தெரிவித்திருந்தமை பாராட்டுக்குரியதே.

இவள்  இச்சுற்றில் பாடிய பாடல் அரங்கில் நின்றவர்களை மட்டும் அல்லாது உலகமெங்கும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான உலகத்தமிழர்களை உருக வைத்து விட்டாள்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா? என்று தொடக்கி விடை கொடு எங்கள் நாடே பாடலையும் இணைத்து உலகமெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களை நெகிழச்செய்து தனக்கு கிடைத்த மேடையை ஈழ மக்களின் உணர்வுக்களமாய் அமைத்து விட்டாள்.

 

 

இலங்கை வந்தார் போப் பிரான்சிஸ்


போப் பிரான்சிஸ், தனது ஆசிய பயணத்தில் முதலாவதாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உள்ளிட்ட பிரமுகர்கள் போப்பை வரவேற்றனர்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மத மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ள நாடாக இலங்கையை காண்பதே தனது அபிப்பிராயம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.   உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த பாப்பரசர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.    இதேவேளை, பாப்பரசரின் விஜயம் இலங்கைக்கு பாக்கியம் என கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.    இலங்கை வந்த பரிசுத்த பாப்பரசரை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வரவேற்றனர்.   இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்புவில் இலங்கை -இந்தியப் படைகள் கூட்டுப் போர் பயிற்சி


தமிழக அரசு மற்றும் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவத்துடன் இந்தியப் படைகள் இன்று கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன.
மித்ரா சக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான போர் பயிற்சி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள உவா-குடோயா கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் இன்றிலிருந்து வரும் 23-ம் தேதிவரை நடைபெறும் என்றும் இதில் இந்திய சிறப்புப் படையை சேர்ந்த சுமார் 40 வீரர்களும், இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 வீரர்களும் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்தியா-இலங்கை வீரர்களுக்கிடையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் வாடிக்கையான போர்ப் பயிற்சிதான் என இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த 2012-க்குப் பிறகு இதைப் போன்ற கூட்டுப் போர் பயிற்சிகளில் இந்தியாவும், இலங்கையும் ஈடுபட்டதில்லை எனவும், கடந்த மாதம் கொழும்புவில் அந்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர் இடையிலான இருநாட்டு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையின்போதுதான் இந்த புதிய போர் பயிற்சிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.SriLankaArmy

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்


yaalvili-news-1stveppanjaffan

இன்று இலங்கை தமிழர்கள் பரவலாக உலகம் முழுக்க வாழ்கிறார்கள் , கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட. ஆனால் இதற்கு முன்பு ஈழ தமிழர்களின் குடியேற்றம் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்டது. கல்வித்துறையில் சிறந்து விளங்கியதால், பிரித்தானியர் யாழ்ப் பாண தமிழரை நிர்வாகம் சார்ந்த தொழிலுக்கு ஈடுபடுத்தினர். பலர் மலாயா ரயில் சேவை நிரவாகத்தில் வேலை செய்தனர்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர் தமக்கென ஒரு அடித்தளத்தை கலாசாரம், மதம், மொழி சார்ந்து ஏற்படுத்தினர். ஆனால் இந்த ஏற்பாடுகள் பல காலங்கள் நீடிக்கவில்லை, காரணம் முதலாம் உலக போர். ஐரோப்பாவில் ஜெர்மனி இக்கும் பிரித்தானிய- பிரான்ஸ் நேச படைகளுக்கும் இடையேயான பல லட்சம் உயிர்களை பறித்த கொடூர போர்.

போரின் ஆரம்பத்தில் விமானத்தின் பயன்பாடு ஆரம்ப நிலையே (விமானம் 1903 ம் ஆண்டு ரைட் சகோதரர்களால் கண்டு பிடிக்கப்பட்டது ) . முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம், எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

புதிய தாக்குதல் போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது. மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் அல்மா பேக்கர் என்பவர் , வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் கோலாலம்பூர் நில அளவைகள் திணைக்களத்தில் உயர் பதவியில் இருந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் Penang, Kuala Lumpur, Taiping, Pahang, Selangor, உட்பட பல இடங்களில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து 2250 பவுண்ட்ஸ் நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை செய்ய பங்களிப்பு செய்தார்.

இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது. இவ் விமானம் 22/12/1915 இல் பிரித்தானிய அரசிடம் கையளிக்கப்பட்டது.

இந்த இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

jaffna_war_flight02