சென்னை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை!


சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மோகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்திருக்கின்றனர். இதில் மோகன் உயிரிழந்திருக்கிறார்.

ஆனால் அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். தற்போது மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை காவல்துறை கூறி வருகிறது.

தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காவல்துறையால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சையில் தோற்றுவிட்டால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாதா?: 7 பேர் உயிரை மாய்த்தனர்


பள்ளியில் படிக்கும் கால கட்டங்களில் சில மாணவ–மாணவிகளுக்கு இதன் பெயரை கேட்டாலே வேப்பங்காயாய் கசக்கும்.

சுமாராக படிக்கும் இது போன்ற மாணவர்கள் எப்படியாவது ‘பாஸ்’ ஆகி விட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே படிப்பை தொடர்வார்கள்.

இதற்கே இரவு, பகலாகவும் படிப்பார்கள். ‘‘ஜஸ்ட்பாஸ்’’ வந்தால் கூட போதும்பா….. என்கிற எண்ணமே அவர்களின் மனசு முழுவதும் நிரம்பி கிடக்கும். இதற்காக மிகவும் நெருக்கமான பள்ளித் தோழர்களிடம் ஆலோசனை கேட்கும் இவர்கள் எந்தெந்த வினாக்களுக்கு முதலில் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துக்கொண்டே தேர்வு அறைக்குள் நுழைவார்கள். எதிர்பார்த்துச் சென்றது போல… ஓரளவுக்கு நன்றாக தேர்வை எழுதி விட்டாலே போதும், இவர்களின் மனசு ரெக்கை கட்டி பறக்கும்.

அப்பாடா…. இன்றைக்கு நடந்த பரீட்சையை நல்ல படியா முடிச்சாச்சி என்கிற ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பார்கள். இவர்களுக்கு அதிக மதிப்பெண் என்பது பெரிய விஷயமாகவே இருக்காது.

இப்படி படிப்பில் மோசமாகவோ…. அல்லது படுமோசமாகவோ இருக்கும் மாணவர்களிடம் நிச்சயம் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கிடக்கும். உள்ளுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த திறமையை ஒரு நாள் தட்டி எழுப்பும் அவர்கள் வாழ்க்கையில் உயரமான நிலையை எட்டிப்பிடித்திருப்பார்கள்.

இதுபோன்ற நேரங்களில் இப்போதும் பலர் உதாரணமாக சொல்வது கர்ம வீரர் காமராஜரைத்தான். படிக்காத மேதையாக விளங்கிய அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம்.

ஆனால்… இன்று இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வி அடையும் மாணவ – மாணவிகள் பலர், தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை தொடர்கிறது. ஆண்டு தோறும் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் தோல்வி பயத்தில் மாணவச்செல்வங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

‘‘மார்க் நல்லா எடுக்கல… அவ்வளவுதான்’’ என்கிற பெற்றோர்களின் மிரட்டலும்… ‘‘இப்படி படிச்சா நீ எப்படி உருப்படுவ என்கிற உறவுக்காரர்களின் அர்ச்சனைகளுமே மாணவர்களின் தற்கொலைக்கு முக்கியமான காரணமாக அமைகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

அதே நேரத்தில் பெற்றோர்கள் பலர், தங்களது விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிப்பதும் மாணவர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாகவே உள்ளது. இதனால் மாணவ– மாணவிகள், தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் அத்துடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இதுவே அவர்களை தற்கொலை முடிவுக்கும் தள்ளி விடுகிறது. பரீட்சையில் தோற்றாலும், வாழ்க்கையில் வெற்றி பெற ஏராளமான வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன என்பதையும், வாழ்வில் உயர்வதற்கு மதிப்பெண்களும், தேர்வுகளில் பெறும் வெற்றியும் மட்டுமே, படிக்கட்டுகள் அல்ல என்பதையும் மனதில் பதிய வைக்காததாலேயே அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் இலக்கியா, வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த மாணவர்கள் ரகு, குணசேகரன் ஆகியோர் தேர்வு முடிவுகளால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் இலக்கியா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். ரகுவும், குணசேகரனும் தோல்வியால் மனமுடைந்து போனார்கள்.

ஈரோட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரது மகள் மஞ்சுளா, குறைவான மதிப்பெண் பெற்றதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ஆனந்தி, தேர்வில் தோல்வி அடைந்ததால், தூக்கு போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

தேனிகண்டமனூரைச் சேர்ந்த அன்னக்கொடி என்பவரது மகன் அஜய் தேர்வு முடிவுக்கு பயந்து நேற்று முன்தினமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தேர்வில் வெற்றி பெற்று விட்டார். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மகன் பிரதீப் வர்மன் (18). பிளஸ்–2 தேர்வில் 5 பாடத்தில் தோல்வி அடைந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று இரவு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி 7 பேர் உயிரை மாய்த்துள்ள நிலையில் கடலூர், பண்ருட்டியில் மட்டும் மதிப்பெண் குறைவாக எடுத்திருப்பதால் 10 மாணவ–மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

கடலூரை சேர்ந்த பார்கவி, குருதேவி, ராஜசேகர், அனுசுயா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பண்ருட்டியை சேர்ந்த ஆனந்தி, பிரியா, நந்தினி, பவானி ஆகியோரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் மேலும் 12 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க மாணவ–மாணவிகளுக்கு உளவியல் பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும்.

குறைவான மார்க் எடுத்திருக்கும்… அல்லது தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் மாணவ செல்வங்களே… தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல…. அதையும் தாண்டி சாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் உலகில் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள். தற்கொலை முடிவை கைவிடுங்கள். நிச்சயம் ஒருநாள் வானம் வசப்படும். வாழ்க்கையும் வசப்படும்.

‘இந்தியாவில் 3 ஆண்டுகளில் 3,313 விவசாயிகள் தற்கொலை


  • 2012, 2013, 2014 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரம்.
    2012, 2013, 2014 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரம்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில வாரியாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கையின் புள்ளி விபரம்.
    கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில வாரியாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கையின் புள்ளி விபரம்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 3,313 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான புள்ளி விவரம்:

கடந்த 2012-ல் கிட்டத்தட்ட 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2013-ல் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கடந்த 2014-ல் 1300 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளிலுமே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் சொற்ப அளவில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது


சென்னையில் நேற்று இரவில், இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மைலாப்பூரில் தாக்கப்பட்ட காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன்.

சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் நேற்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது.

76 வயதாகும் விஸ்வநாதன் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார்.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்,ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்.

ஐஸ்வர்யா ராய் விளம்பரம் எழுப்பிய சர்ச்சை


நடிகை ஐஸ்வர்யா ராய் இடம்பெற்ற பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்று தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்த நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அணிந்து அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் உற்சாகமற்ற, உடல் மெலிந்த குழந்தை ஒன்று அவருக்கு குடை பிடிப்பது போல அமைந்திருக்கும் சமீபத்தில் வெளியான பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த விளம்பரம் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாய் ஆர்வலர்கள் பலர் கருத்து வெளியிட்டனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் சர்ச்சையான கருத்துக்களோடு பரவியிருந்தது. இது போன்ற ஒரு விளம்பரத்துக்கு ஐஸ்வர்யா ராய் தனது முகத்தைக் காட்டியிருக்க்க்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு நேற்று பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா ராய், அந்த விளம்பரத்தில் தான் தனியாக மட்டுமே படம்பிடிக்கப்பட்டதாகவும், கணினியில் ஃபோட்டோஷாப் பயன்படுத்தப்பட்டு அந்த குழந்தையின் உருவம் அதில் இணைக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்த நகைக்கடை நிறுவனம், ‘இந்த விளம்பரத்தின் மூலம் ராஜவம்சத்தை சேர்ந்த ஒருவரை போன்ற காலமற்ற அழகு மற்றும் நேர்த்தியை முன்வைக்க தான் அந்த படைப்பை இயற்றிய குழு திட்டமிட்டிருந்தனர். எங்களை அறியாமல் இது எவரையாவது, அல்லது ஏதேனும் ஒரு அமைப்பின் உணர்வுகளை புண்படுத்துயிருந்தால் நாங்கள் அதற்கு வருந்துகிறோம். இந்த விளம்பரத்தை நாங்கள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்’, என்று தெரிவித்துள்ளது.

நடனம் ஆட மறுத்த பெண் சுட்டுக்கொலை


உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றின் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண் நடனக்கலைஞர் ஒருவர் நடனமாடினார். அப்போது பார்வையாளர்கள் தங்களது தாய் மொழி பாடல் ஒன்றுக்கு அவரை நடனமாடும் படி கூறினர். அதனை பெண் நடனகலைஞர் ஏற்கமறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பார்வையாளர்களில் ஒருவரான பப்லு குமார் என்பவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பப்லு குமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட அந்த பெண் நடனக்கலைஞரின் பெயர் பியூ (வயது 23). மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். திருமண விழா போன்றவற்றின்போது நடைபெறும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடுவார்.
%d bloggers like this: