காணாமல் போனவர்களின் உறவுகள் கண்ணீரால் போராட்டம்


காணாமற் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியும் நியாயமான விசாரணை ஒன்றினையும் வலியுறுத்தியும் வடக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்  ஒன்றினை யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் நடத்தினர்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு யாழ்.பொது நூலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் இறுதி போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் யுத்த காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரியும்,  நிலஅபகரிப்புக்கு எதிராகவும், மீள்குடியமர்வை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள்  கலந்து கொண்டதுடன் தமது உறவுகளின் படங்களை கையில் ஏந்தியவாறு அவர்களை மீட்டுத் தருமாறு கோரியும் கதறி அழுதனர்.

இதேவேளை, ஆணையாளர் நவிப்பிள்ளையிடம் தமது பிரச்சினைகளை கூற செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் பொலிஸாரையும் பொருட்படுத்தாது நூலக வாசலருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் அவர்களது ஒழுங்கமைப்பு குழு அவரை நூலகத்தின்  பின் வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர். அதனையறிந்த பொலிஸார் தமது கடமைகளை நிறுத்திவிட்டு திரும்பிவிட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று யாழ். பொது நூலகத்தில் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரஜைகள் குழுக்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.தந்தையை, சகோதரரை இழந்த குழந்தைகளும் அங்கு இருந்தனர்.

அதேவேளை, நூலகத்துக்கு வெளியே யுத்தத்தில் காணாமல் போனவர்களின் உறவினர் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

நூலகத்தை நோக்கி அவர்கள் செல்ல முயன்றார்கள்.

ஆனால், பொலிஸார் அவர்களைத் தடுத்துவிட்டனர்.

காணாமல் போன தனது உறவைத் தேடித்தரக் கோரி ஒப்பாரி வைத்த ஒரு தாய்.

உறவுகளைத் தேடித்தரக்கோரி கெஞ்சி அழும் தாய்மார்.

படங்களில்: நுண்ணோக்கியில் மலரழகு


எலக்டிரான் மைக்ராஸ்கோப் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி வெற்றுக் கண்ணுக்கு புலப்படாத மலரின் அழகை ஜப்பானியக் கலைஞர் சுசுமு நிஷிநக வெளியுலகுக்கு கொண்டுவந்துள்ளார்.

கத்தரிப்பூ, அல்லிப்பூ போன்றவற்றினை இவர் இவ்வகையில் படம்பிடித்துள்ளார்.

இந்தப் படங்களில் பிரமிக்கவைக்கும் நுணுக்கம் காணப்படுகிறது.

கணினியில் காட்சிகளை வடிவமைப்பவராக பயிற்சி பெற்றவர் நிஷிநக, நுணுக்கமான விஷயங்களை படம் பிடிக்கும் ஆர்வம் பின்னர் இவரைத் தொற்றிக்கொண்டது.

ஸ்கேன்னிங் எலக்டிரான் மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்தினால் எவ்வளவு நுணுக்கமாகப் படமெடுக்க ம்டுஇயும் என்பதை பல்கலைக்கழகம் சென்றபோது இவர் தெரிந்துகொண்டார்.

எலக்டிரான் கதிர்களைப் பாய்ச்சி ஸ்கேன் செய்வதன் மூலம் மிக நுணுக்கமான படங்களை எடுக்க முடியும்.

இந்தப் படங்களின் வர்ண ஜாலம் கலையம்சம் நிறைந்திருக்கின்றன.

மூழ்கிய போர்க்கப்பலுக்கு ஒரு அருங்காட்சியகம் (படங்கள்)


 

போர்ட்ஸ்மவுத்தின் வரலாற்றுப்புகழ்மிக்க கப்பல் கட்டும் தளத்தில் அமைந்துள்ள மேரி ரோஸ் அருங்காட்சியகம்

இந்தப் புதிய மேரி அருங்காட்சியகம் போர்ட்ஸ்மவுத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க கப்பல் கட்டும் தளத்தில் , எட்டாம் ஹென்றியின் முக்கிய கப்பல் 1509ல் கட்டப்பட்ட இடத்துக்கு வெகு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் , இந்தக் கப்பலின் வயதில் பாதி வயதே ஆன, நெல்சனின் பிரதான கொடிதாங்கிக் கப்பலான, எச்.எம்.எஸ் விக்டரி ( வெற்றி)க்குப் பக்கத்த்திலேயே இருக்கிறது.

 

ட்யூடர் காலத்திய காலரி

கப்பலின் காலரி ஏறக்குறைய முழுமையாகவே கண்டுபிடிக்கப்பட்டது. கறிகாய் நறுக்கும் பலகையில் கத்தியின் வெட்டுக் குறிகள் கூட அப்படியே இருந்தன. இந்த காலரியில் ட்யூடர் வம்சத்தினர் காலத்திய விறகொன்றும் காணப்பட்டது. கப்பலின் மூழ்கிய பகுதிகளில் கிடைத்த ஒவ்வொரு துகளும் அசல் துகள்கள்.

 

கப்பல் சமையல்காரரின் சொந்த பொருட்கள் . கிண்ணத்தில் பொறிக்கபட்ட வாசகங்களுடன்.

உணவுப்பொருட்களில் எஞ்சியிருக்கும் எலும்புகள்

உணவுப்பொருட்கள் உண்ணப்படாத நிலையில், அதில் இருந்த எலும்புத்துண்டுகளுடன் கிடைத்தன. ஒரு காட் மீனின் முழு முதுகெலும்பு (10), கால்நடைகளின் எலும்பு ( 9) ஹேக் என்ற ஒருவகை மீனின் எலும்பு (11), காங்கர் என்ற ஒரு வகை விலாங்கு மீனின் எலும்பு ( 12) ஆகியவைகளைப் படத்தில் காணலாம்.

மேரி ரோஸ் கப்பலில் கிடைத்த ஷூக்கள், ஒரு சாக்ஸ், ஒரு பூட்ஸ்

மிதியடிகள், சாக்ஸ் ஒன்று, பூட்ஸ் ஒன்று ஆகியவைகளும் கிடைத்தன. இந்த கப்பல் மூழ்கியபோது சுமார் 500 பேர் இறந்தார்கள்.இறந்தவர்களின் பெயர் விவரங்கள் கிடைக்கவில்லை. கப்பலின் வைஸ் அட்மிரல் ஸர் ஜார்ஜ் கேரூ, கப்பலின் மாஸ்டர் ரோஜர் க்ரன்வில் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே கிடைத்தன.

1982ல் இந்தக்கப்பல் சோலெந்த் பகுதிக் கடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டபோது கிடைத்த கப்பலின் பிரதான கம்பத்தின் மேல் பகுதி. இந்தக் கப்பல் கடும் காற்றில் சிக்கி மூழ்கியது. இந்தக் கப்பல் 1545ல் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில் 35 பேரே உயிர்தப்பினர்.

கப்பலில் இருந்த நாயொன்றின் எலும்புக்கூடு

கப்பலின் தலைமை தச்சரின் அறைக்கு அருகே காணப்பட்ட ஒரு இளம் , ஆண் நாயின் எலும்புக்கூடு. ஹேட்ச் என்று அருங்காட்சியகப் பணியாளர்களால் பெயரிடப்பட்ட இந்த நாய்க்கு ஒன்றைரை வயதிலிருந்து இரண்டு வயது வரை இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இது கப்பலில் இருந்த எலிகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

 

தலையில் அம்புக்காயத்துடன் காணப்படும் ஒரு மனிதனின் மண்டை ஓடு

இந்த மனிதர் தலையில் அம்பு துளைத்த பின்னரும் உயிர் தப்பியிருந்தார். ஆனால் கப்பல் மூழ்கியபோது உயிரிழந்தார். ஆறிய காயத்தின் வடு தலையின் உச்சியில் தெளிவாகவே தெரிகிறது. கப்பல் பணியாளர்களின் எலும்புகளிலிருந்து தடயவீயல் நிபுணர்கள் அவர்களின் முகங்களை மீண்டும் வடிவமைத்திருக்கிறார்கள்.

காய வைக்கப்படும் மேரி ரோஸ் கப்பல்

1982ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கப்பல் மீது 1994 வரை தண்ணீர் பீய்ச்சப்பட்டது. இந்த பின்னர் இந்த ஆண்டு முன் பகுதி வரை, இதன் மீது பாலியெதிலீன் க்லைக்கோல் என்ற ஒரு வகை மெழுகு ஊற்றப்பட்டது. அடுத்த நான்காண்டுகளுக்கு, காற்றுக்குழாய்கள் இதன் மீது காற்றைப் பாய்ச்சி அதைக் காயவைக்கும். அதன் பிறகு, இந்தக் கப்பலை மூடியிருக்கும் சுவர்களும், ஜன்னல்களும் அகற்றப்பட்டு அது அருங்காட்சியகத்தில் முழுமையாகக் காட்டப்படும்.

மேரி ரோஸின் பீரங்கித் தளம்

கடற்படை வரலாற்றில் மேரி ரோஸுக்கு ஒரு இடமுண்டு. இந்தக் கப்பலில்தான் முதன் முதலாக புதிய வெண்கலத்தாலான பீரங்கிகள் ( படத்தின் முற்பகுதியில்) மற்றும் கல் குண்டுகளை எறியும் இரும்பு பீரங்கிகள் ( வளையத்துக்குள்) மற்றும் நீண்ட வில் மற்றும் தீயைச் சுமந்து செல்லும் அம்புகள் போன்ற மத்திய காலகட்ட போர்முறையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை இருந்தன.

வில்லாளன் ஒருவரின் எலும்புக்கூடு

கப்பலில் கண்டெடுக்கப்பட்ட 92 முழு எலும்புக்கூடுகளில் ஒரு வில்லாளனின் எலும்புக்கூடு . இந்த வில் வீரனுக்கு 20வயதுகளின் முற்பகுதி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 1.78 மீட்டர் உயரம் . முதுகுத்தண்டின் மத்திய பகுதி வளைந்திருக்கிறது. அவரது வலது விரலில் காணப்படும் பள்ளங்கள் நீண்ட வில்லை வளைத்து ஏவுவதால் ஏற்பட்டிருக்கலாம்.

மேரி ரோஸில் கண்டெடுக்கப்பட்ட இசைக்கருவிகள்

கப்பலில் குறைந்தது 10 இசைக்கருவிகள் காணப்பட்டன. ஊதியத்துக்குப் பணி புரிந்த இசைக்கலைஞர்களால் இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இரண்ட் பிடில்கள், ஒரு டேபோர் ட்ரம், மூன்று டேபோர் பைப்புகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. ட்யூடர் காலத்திய இசைக்கருவிகள் அரிதாகவே கிடைத்திருக்கின்றன. இவைகளில் சில மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

காலநிலையைக் கணிக்கும் கப்பல் பணியாளர்கள் பயன்படுத்திய ஒரு பெட்டி.

கப்பல் பணியாளர் ஒருவரின் தனி உடமைகள்

இந்த கப்பல் மூழ்கிய இடம் முதன் முதலில் 1971ல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 19000 பொருட்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டன. இதில் பல அக்கப்பலில் இருந்தவர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட பொருட்கள். இந்தப் படத்தில் காணப்படுவது கப்பலின் உணவு மற்றும் பானங்கள் வழங்கலைக் கட்டுப்படுத்து அதிகாரிக்குச் சொந்தமானவை. ஒவ்வொரு கப்பல் பணியாளருக்கும் நாளொன்றுக்கு 4.5 லிட்டர் பீர் வழங்கப்பட்டது.

கப்பல் உணவு மற்றும் பானம் வழங்கல் பொறுப்பு அதிகாரியின் தனி உடமைகள்

 

சேற்றில் சிக்கிய யானை மரணம்! கண்ணீர் சிந்திய பொதுமக்கள்!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் அங்குள்ள பவளக்குட்டை என்ற இடத்தில் தண்ணீர் குடிக்க கூட்டமாக வந்தன. அப்போது 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை தண்ணீர் குடிக்கும்போது சேற்றில் சிக்கிக்கொண்டது.

குட்டையின் வெளியே நின்றுகொண்டு இருந்த மற்ற யானைகள், சேற்றில் சிக்கிய யானையை துதிக்கையால் பற்றி இழுத்தது. ஆனால் அவைகளால் மீட்க முடியவில்லை. அப்போது இதனைப் பார்த்த அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஊருக்குள் ஓடிச்சென்று இதுபற்றி கூறினார்கள்.

உடனே கிராம மக்கள் பவளக்குட்டைக்கு ஓடிவந்தனர். ஆனால் குட்டையை சுற்றி யானைகள் நின்றதால், அவர்கள் அருகே செல்லவில்லை. இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்தார்கள்.

வன ஊழியர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து முதலில் பட்டாசு வெடித்து மற்ற யானைகளை அங்கிருந்து விரட்டினார்கள். பிறகு கயிற்றால் கட்டி யானையை மீட்க முயன்றும் முடியவில்லை. அப்போது இருட்டி விட்டதால் வனத்துறை ஊழியர்கள் அதிகாலை வரை அங்கேயே இருந்தனர்.

பின்னர் நேற்று காலை பெரிய கயிற்றால் யானையில் கால்களை கட்டி அதை பொக்லைன் இயந்திரத்தில் இணைத்து மெதுவாக இழுத்தார்கள். நேற்று காலை 9 மணி அளவில் யானை குட்டையில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால் ஒன்றரை நாட்களாக தண்ணீர், உணவு இல்லாததால், மிகவும் சோர்வுடன் காணப்பட்டது.

இதனால் யானையால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. ஒரு பக்கமாக சாய்ந்தவாறு யானை படுத்து கிடந்தது. இதனால் யானை உயிருக்கு போராடி வருகிறது.

சம்பவ இடத்துக்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, அவர் யானைக்கு குளுக்கோஸ் கரைசலை கொடுத்தார். ஆனால் அதனை துதிக்கையால் உறிஞ்சக்கூட முடியாமல் யானை சிரமப்பட்டது. வாழைப்பழங்களும் கொடுக்கப்பட்டது. குட்டையில் இருந்து மீட்கப்பட்ட யானையை வனப்பகுதி எல்லையில் மற்ற யானைகள் பார்த்தபடியே நின்றன.

நேற்று மாலை 4 மணி அளவில், யானை தள்ளாடியபடி எழுந்து நின்றது, 50 அடி தூரம் நடந்த பிறகு மீண்டும் விழுந்தது. இதேபோல் எழுந்து நிற்பதும், விழுவதுமாக இருந்தது. தொடர்ந்து கால்நடை டாக்டரும், வனத்துறை அதிகாரிகளும் யானையை காப்பாற்ற போராடினார்கள். இந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.

குட்டி யானை உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்தனர். கண்ணீருடன் மலரஞ்சலி செலுத்தினர்.