பரீட்சையில் தோற்றுவிட்டால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாதா?: 7 பேர் உயிரை மாய்த்தனர்

பள்ளியில் படிக்கும் கால கட்டங்களில் சில மாணவ–மாணவிகளுக்கு இதன் பெயரை கேட்டாலே வேப்பங்காயாய் கசக்கும்.

சுமாராக படிக்கும் இது போன்ற மாணவர்கள் எப்படியாவது ‘பாஸ்’ ஆகி விட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே படிப்பை தொடர்வார்கள்.

இதற்கே இரவு, பகலாகவும் படிப்பார்கள். ‘‘ஜஸ்ட்பாஸ்’’ வந்தால் கூட போதும்பா….. என்கிற எண்ணமே அவர்களின் மனசு முழுவதும் நிரம்பி கிடக்கும். இதற்காக மிகவும் நெருக்கமான பள்ளித் தோழர்களிடம் ஆலோசனை கேட்கும் இவர்கள் எந்தெந்த வினாக்களுக்கு முதலில் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துக்கொண்டே தேர்வு அறைக்குள் நுழைவார்கள். எதிர்பார்த்துச் சென்றது போல… ஓரளவுக்கு நன்றாக தேர்வை எழுதி விட்டாலே போதும், இவர்களின் மனசு ரெக்கை கட்டி பறக்கும்.

அப்பாடா…. இன்றைக்கு நடந்த பரீட்சையை நல்ல படியா முடிச்சாச்சி என்கிற ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பார்கள். இவர்களுக்கு அதிக மதிப்பெண் என்பது பெரிய விஷயமாகவே இருக்காது.

இப்படி படிப்பில் மோசமாகவோ…. அல்லது படுமோசமாகவோ இருக்கும் மாணவர்களிடம் நிச்சயம் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கிடக்கும். உள்ளுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த திறமையை ஒரு நாள் தட்டி எழுப்பும் அவர்கள் வாழ்க்கையில் உயரமான நிலையை எட்டிப்பிடித்திருப்பார்கள்.

இதுபோன்ற நேரங்களில் இப்போதும் பலர் உதாரணமாக சொல்வது கர்ம வீரர் காமராஜரைத்தான். படிக்காத மேதையாக விளங்கிய அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம்.

ஆனால்… இன்று இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வி அடையும் மாணவ – மாணவிகள் பலர், தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை தொடர்கிறது. ஆண்டு தோறும் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் தோல்வி பயத்தில் மாணவச்செல்வங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

‘‘மார்க் நல்லா எடுக்கல… அவ்வளவுதான்’’ என்கிற பெற்றோர்களின் மிரட்டலும்… ‘‘இப்படி படிச்சா நீ எப்படி உருப்படுவ என்கிற உறவுக்காரர்களின் அர்ச்சனைகளுமே மாணவர்களின் தற்கொலைக்கு முக்கியமான காரணமாக அமைகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

அதே நேரத்தில் பெற்றோர்கள் பலர், தங்களது விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிப்பதும் மாணவர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாகவே உள்ளது. இதனால் மாணவ– மாணவிகள், தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் அத்துடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இதுவே அவர்களை தற்கொலை முடிவுக்கும் தள்ளி விடுகிறது. பரீட்சையில் தோற்றாலும், வாழ்க்கையில் வெற்றி பெற ஏராளமான வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன என்பதையும், வாழ்வில் உயர்வதற்கு மதிப்பெண்களும், தேர்வுகளில் பெறும் வெற்றியும் மட்டுமே, படிக்கட்டுகள் அல்ல என்பதையும் மனதில் பதிய வைக்காததாலேயே அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் இலக்கியா, வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த மாணவர்கள் ரகு, குணசேகரன் ஆகியோர் தேர்வு முடிவுகளால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் இலக்கியா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். ரகுவும், குணசேகரனும் தோல்வியால் மனமுடைந்து போனார்கள்.

ஈரோட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரது மகள் மஞ்சுளா, குறைவான மதிப்பெண் பெற்றதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ஆனந்தி, தேர்வில் தோல்வி அடைந்ததால், தூக்கு போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

தேனிகண்டமனூரைச் சேர்ந்த அன்னக்கொடி என்பவரது மகன் அஜய் தேர்வு முடிவுக்கு பயந்து நேற்று முன்தினமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தேர்வில் வெற்றி பெற்று விட்டார். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மகன் பிரதீப் வர்மன் (18). பிளஸ்–2 தேர்வில் 5 பாடத்தில் தோல்வி அடைந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று இரவு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி 7 பேர் உயிரை மாய்த்துள்ள நிலையில் கடலூர், பண்ருட்டியில் மட்டும் மதிப்பெண் குறைவாக எடுத்திருப்பதால் 10 மாணவ–மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

கடலூரை சேர்ந்த பார்கவி, குருதேவி, ராஜசேகர், அனுசுயா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பண்ருட்டியை சேர்ந்த ஆனந்தி, பிரியா, நந்தினி, பவானி ஆகியோரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் மேலும் 12 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க மாணவ–மாணவிகளுக்கு உளவியல் பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும்.

குறைவான மார்க் எடுத்திருக்கும்… அல்லது தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் மாணவ செல்வங்களே… தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல…. அதையும் தாண்டி சாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் உலகில் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள். தற்கொலை முடிவை கைவிடுங்கள். நிச்சயம் ஒருநாள் வானம் வசப்படும். வாழ்க்கையும் வசப்படும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s