கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா


நமது பாரத கலாச்சாரம் தொன்மையானது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் உலகின் மூன்றாம் நிலையில் அதிகமாக பின்பற்றப்படும் கலாச்சாரம் நம்முடையது. மேற்கத்திய நாடுகள் அறிவியல் பூர்வமான விஷயங்களில முன்னோடியாக இருந்தாலும் , குடும்ப அமைப்புகள் உணர்வு பூர்வமான பாசங்கள் போன்றவற்றில் நம்மை விட பின் தங்கியே இருக்கிறார்கள்.

மேல் நாட்டிநாட்டினர் நம் நாட்டிற்கு வரும் பொழுது ( குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்) அவர்கள் ஓர் முன்நிர்ணயம்(Predefined Mind set) செய்த மனோநிலையில் வருகிறார்கள். எதை முன்னால் முடிவுசெய்கிறார்கள் என பார்த்தால் , பாரத தேசத்தவர்கள் எந்தவிதமான கலாச்சாரமும் நாகரீகமும் அற்றவர்கள் என்பது தான்.அவர்களை பொருத்தவரை நம் மக்கள் மருத்துவம் இல்லாமல், சுகாதாரம் இல்லாமல் இருக்கிறோமாம். ஒரே வார்த்தையில் சொல்லுவதேன்றால் காட்டுமிரண்டிகள் என சொல்லலாம். மிகையாக நான் சொல்லுவதாக உங்களுக்கு படலாம்.

ஐரோப்பியர்கள் நமது நாட்டை ஆளும் காலத்தில் அவர்களின் மனோபாவத்தால் நிறைய விஷயங்கள் நம் கலாச்சாரத்தில் புகுத்தப்பட்டது. அதே சமயம் அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்த இந்தியாவை உலகிற்கு காட்டி,இது தான் இந்த பாம்பாட்டிகளும் – சாமியார்களும் கொண்ட காட்டுமிராண்டி தேசம் என சொன்னார்கள்.

நம் நாட்டவர்களோ அவர்களின் நிறத்தாலும், அடக்கு முறை ஆற்றலாலும் பயந்த நாம் அவர்களை “துரை” என அழைத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்களை போற்றி புகழ்ந்தோம்.சிந்து நதிக்கரையிலிருந்து தென்பகுதியை தேசமாக கொண்டதால், இந்தியா என வெளிநாட்டினர் தான் நமது தேசத்திற்கு பெயரையும் வைத்தார்கள். சிந்தியா என்று தானே வைக்கவேண்டும் என நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு “Si” என்ற உச்சரிப்பு “ze” என்று தான் வரும். சுகந்திரத்திற்கு முன் இருக்கும் பிரிட்டீஷ் காலனி ஆதிக்க பத்திரங்கள், அரசு ஆவணங்களில் “zenthu” என்றே இந்தியனை அவர்கள் அழைத்தார்கள்.

அதனால் தான் நம் நாட்டை பாரதம் எனும் சொல்லில் அழைக்கிறேன். காரணம் வெளிநாட்டினர் வைத்ததாற்காக அல்ல, பாரதி நம் தேசத்தை பாரதம் என்றே அழைத்தான். அது தான் நம் நாட்டின் உண்மையான பெயரும் கூட.

முதல் குழந்தை பிறந்ததும் முதலைக்கோ, கொடிய மிருகங்களுக்கோ கொடுத்துவிடுவார்கள். அந்த நாடு முழுவதும் பாம்பாட்டிகளும் சாமியார்களும் நிறைந்துஇருப்பார்கள் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மை பற்றி மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவேகானந்தர் அமெரிக்காவிற்கு பயணமாகும்பொழுது இந்தியாவை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைத்தார்கள் என்பது மேற்கண்ட தகவல்களுக்கு ஓர் சான்று. இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பார்த்தால் பாம்பாடிகளை வைத்து வேடிக்கை காட்டுவார்கள். இது எல்லாம் எதற்கு என கேட்டால்… நாம் இந்தியர்கள் என நிரூபிக்க வேண்டாமா? சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா வந்த உணர்வு ஏற்படுத்த வேண்டாமா என கூறுவார்கள். விவேகானந்தர் சிகாக்கோவுக்கு பயணமாகி ஒரு நூற்றாண்டு முடிந்த நிலையிலும் இந்த நிலையே நீடிக்கிறது.

ஹைஜீனிக் (hygienic) எனும் விஷயம் நாம் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டுமாம். இதை பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். சாமியார்களும் பாம்பாட்டிகளும் என்றாவது குளித்தார்களா? துய்மை என்பதே அவர்களுக்கு கிடையாதே. அதனால் அதான் நாம் மேலை நாட்டினரிடத்திலிந்து துய்மையாக இருப்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஹைஜீனிக் என்றவுடன் எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வரும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த சமயம் ஓர் அரசு முறை விருந்தில் கலந்து கொண்டார். அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டதும், ஸ்பூனை பயன்படுத்தாமல் கையால் உணவை சாப்பிட ஆரம்பித்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த மேலைநாட்டுக்காரர் ஒருவர் , ஜனாதிபதியை நெருங்கி “ ஐயா, கரண்டியை பயன்படுத்தாமல் கையால் சாப்பிடுவது சுகாதரமானது அல்ல” என கூறி நீண்ட உரையாற்றினார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட திரு ராதகிருஷ்ணன் அவர்கள், “ஐயா, நீங்கள் கையில் வைத்திருக்கும் கரண்டியில் எத்தனையோ நபர்கள் உணவு அருந்தி இருப்பார்கள். எனது கையில் நான் மட்டும் தான் உணவருந்துவேன். கையில் உண்பதே சுகாதாரமானது” என்றார்.

இன்றைய உலகில் நாகரீகம் என்ற பெயரிலும் சுகாதாரம் என்ற பெயரிலும் எத்தனையோ கோமாளித்தனங்கள் நடக்கிறது. தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஐரோப்பிய ம்னோபாவம் தான் இத்தனைக்கும் காரணம். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் நம்மை ஆண்டதால் நமக்கும் உண்டு. நைஜீரியா மற்றும் உகாண்டாவை பற்றி உங்கள் நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். மக்கள் எலும்பும் தோலுமாக பட்டினியால் சாகிறார்கள் என்பதே அவர்கள் பதிலாக இருக்கும். உண்மையில் உகாண்டாவில் பணக்காரர்களும் இருக்கிறார்கள், தனது கழிவறையை தங்கத்தால் அலங்கரித்தவர்கள் அங்கே அதிகம். ஆனால் செய்தி ஊடகங்களும் மேலைநாட்டு மேதாவிகளும் துயரத்தை மட்டுமே காட்டி இருக்கிறார்கள். தற்சமயம் உகாண்டாவின் அரசர் முடுசூட்டப்படும் பொழுது எடுத்த படம் உங்களுக்காக

எப்படி ஏழ்மையாக எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் என சொல்லப்படும் நிலையில் ஆப்பிரிக்கா சித்தரிக்கப்படுவதை போல பாரதமும் சித்தரிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டில் சதம் அடித்தாலும், சந்திராயன் அனுப்பினாலும் அவர்களுக்கு சென்றடையாது. ஆனால் சாமியார் ஒருவர் லிங்கம் எடுத்தால் தென் அமெரிக்காவின் முனையில் இருப்பவருக்கு சென்றடையும் மர்மம் இது தான்.

சினிமாவில் கலாச்சாரம் சீரழிவு என சொல்லிவிட்டு ஐரோப்பிய மனோபாவத்தை சாடுகிறீர்களே? என நீங்கள் கேட்பது புரிகிறது. செய்தி ஊடகங்களும் சில மேதாவிகளும் பல நூற்றாண்டுகளாக செய்து வந்த மாபெரும் செம்பணியை தற்காலத்தில் சினிமா எனும் ஒரே ஊடகம் திறம்பட செய்கிறது.

என்னிடம் சாஸ்திரம் கற்க பல மேலை நாட்டுக்காரர்கள் வருவதுண்டு. அவர்கள் வரும் பொழுது கூறுவது, ”நான் நினைத்த இந்தியா ஒன்று. இங்கே இருப்பது ஒன்று.” அவர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்கள் எப்படி ஆடை உடுத்த வேண்டும், இங்கு உள்ள உணவு முறை, தட்பவெப்பம் எப்படி இருக்கும் என கூறிவிடுவேன். பிரச்சனை உடை விஷயத்தில் தான் ஆரம்பிக்கும். குறிப்பாக மேலை நாட்டு பெண்கள் இந்திய திரைப்பட நடிகையின் படத்தை காண்பித்து , இந்திய பெண்கள் இவ்வாறு உடை அணியும் பொழுது நாங்கள் அணியும் உடை மேன்மையானதாகவே இருக்கும் என்பார்கள். அதன் பிறகு இங்கு வந்து நம் பெண்களை பார்த்து உடை மாற்றி புடவை கட்டி அழகு பார்ப்பார்கள் என்பது வேறு விஷயம்.

இந்தியாவை தெரிந்து கொள்ள அவர்கள் நம் சினிமாவையும், தொலைகாட்சியையும் நாடுகிறாரர்கள் என்பதால் தான் இத்தனை பிரச்சனையும்.

சினிமா என்பது கலாச்சாரத்தின் ஓர் பிம்பம் என மறந்து தங்கள் மனம் போன போக்கில் இவர்கள் சினிமா எடுப்பதால் பாரதம் என்பது வேறு வகையான தன்மையில் வரலாற்றில் பதிவாகிறது. 50 வருடம் கழித்து இந்தியர்களின் மனநிலை 2008ல் எப்படி இருந்தது என ஆய்வு மேற்கொண்டால் ஆவணமாக இருப்பது தற்சமய சினிமா எனும் ஊடகம் என்பதை மறந்துவிடக்கூடாது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்கள் எப்படி இருந்தார்கள் என இலக்கியத்தை பார்த்துதானே தெரிந்து கொள்கிறோம்? புலியை அடித்து விரட்டிய பெண்யை பற்றி யுவான்சுவாங்கின் நூல் குறிப்பிலா தெரிந்துகொள்கிறோம் ? அது போல பெண்கள்,சமூதாய உறவுகள்,ஆன்மீகம் என அனைத்தும் சினிமாவில் ஒன்றும் நடைமுறையில் ஒன்றுமாக இருக்கிறது. சில காலத்திற்கு பிறகு பாரதம் இப்படித்தான் இருந்தது என வரலாறு சொல்ல இவர்கள் துணைபோகிறார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையும் சினிமாவில் வந்த கட்டபொம்மனின் வாழ்க்கையும் வேறு வேறானது என எத்தனை சராசரி தமிழனுக்கு தெரியும்?

சினிமாவில் காண்பிக்கப்படும் சில அபத்தங்களை இங்கே பட்டியலிட வேண்டி இருக்கிறது. இதன் மூலம் சினிமாவின் தவறான கலாச்சார ஊடுருவலை உணர முடியும்.

பாசிச மன நிலை : காதல் படங்களை எடுக்கும் பொழுது மத ரீதியான பாஸிச கொள்கை கொண்டு எடுக்கப்படுகிறது. பாரத கலாச்சாரம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதல் மணம் புரிவது போல் எடுக்கும் படங்களில் சில அபத்தங்கள் உண்டு. இது போன்ற படங்களில் அதிகபட்சம் பெண் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக காட்டப்படும். உதாரணம் அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள் துவங்கி காதலுக்கு மரியாதை வரை பெரிய பட்டியலே உண்டு.

கிருஸ்துவ பெண் என்பதால் வேறு மதத்தவருடன் எளிதில் பழகுவாள் என காண்பிப்பது எவ்வளவு கொடுமையானது. பாரதத்தில் எந்த மதத்தில் பிறந்தாலும் பெண் அவளுக்கே உண்டான குணத்தில் இருக்கிறாள் என்பதே உண்மை. கிருஸ்துவை கும்பிட்டாலும், கிருஷ்ணனை கும்பிட்டாலும் அவளுக்குள் இருக்கும் பெண்மை பாரத தேசத்திற்க்கே உரிய பண்பாடு நிறைந்தது என ஏன் மறந்து விடுகிறார்கள்? உங்களுக்கு விளக்க வேண்டியதற்காக தமிழ் படங்களை பட்டியலிட்டுள்ளேன், அனைத்து மொழி இந்திய படங்களில் இது போல நிறைய உண்டு.

சமூதாயத்தை தவறாக சித்தரிப்பது : திருநெல்வேலி என்றவுடன் வீச்சரிவாளை காண்பிப்பது. மதுரை என்றவுடன் அடிதடி செய்வது என காண்பிப்பது ஒட்டு மொத்த மக்களையும் அசிங்கப்படுத்தவதாக இருக்கிறது. இவர்கள் சினிமாவில் காட்டுவதை பார்த்தால், திருநெல்வேலி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகள் கூட மினி அருவாளுடன் பிறக்கும் என நினைக்க தோன்றுகிறது.

சென்னையை விட்டு தாண்டாத உங்கள் சாப்ட்வேர் நண்பரிடம் திருநெல்வேலி பற்றி கேட்டுப்பாருங்கள், அவர்கள் சினிமாவிலிருந்து எடுத்த தகவலைத் தான் பகிர்ந்து கொள்ளுவார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இதுதான் நிலை. இங்கே திருநெல்வேலி என்றால் அங்கே பீகார் அல்லது சம்பல் பள்ளத்தாக்கு.

ஆன்மீகம் : சினிமாவில் அதிகம் சீரழிவது ஆன்மீகம் தான். தாங்கள் ஆன்மீகத்தை காண்பிக்கிறோம் என அவர்கள் செய்யும் அவமானங்கள் எல்லை இல்லாதது. ஆன்மீகம் என்றவுடன் மத ரீதியான சாயம் பூசுவது இவர்கள் செய்யும் சேட்டையின் முதல் படி.

கஷ்டம் வரும்பொழுது அம்மன் கோவில் வாசலில் நின்று கதறி அழும் பொழுது மணி காற்றில் ஆட …. புயல் அடிக்க…அங்கு அம்மன் வந்து கஷ்டத்தை நிவிர்த்தி செய்வதாக காண்பிக்கப்படுவது உச்சக்கட்டம். இப்படி நடப்பது உண்மை என்றால் ஒவ்வொரு கோவிலிலும் இண்டஸ்ட்ரியல் விசிறி வாங்கி வைத்து தினமும் புயலை கிளப்ப வேண்டி வரும். பனங்காட்டு அம்மனோ, பாளையத்து அம்மனோ ஏதோ ஒரு படம், அதில் ஓரு காட்சி. அம்மனாக வரும் அந்த நடிகை அடுத்த காட்சியில் குறைந்த ஆடையுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார். வில்லனாக வரும் கதாப்பத்திரத்தை அம்மன் மயக்குகிறாளாம். என்ன கொடுமை இது? இந்தியாவின் ஆன்மீக படங்களை சப்டைட்டிலுடன் பார்க்கும் வெளிநாட்டுக்காரர்கள் என்ன நினைப்பான்?

இதெல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் எனது யோக வகுப்பில் சேர ஒருவர் வந்தார். எது போல யோக பயிற்சி எடுக்கிறீர்கள் என கேட்டார். விளக்கினே. திடீரென தனது கைவிரலை மடக்கி இது போல யோகா சொல்லி தருவீர்களா என கேட்டார். பள்ளி நாட்களில் “டூ” விட்ட நண்பரிடம் “பழம்” என காண்பிப்பது போல இருந்தது அந்த செய்கை. பின்புதான் தெரிந்தது ஒரு சினிமா நடிகர் சினிமாவில் யோகாவை அப்படி அசிங்கப்படுத்தினார் என்பது.அப்படி எல்லாம் யோகா கிடையாது என எவ்வளவு விளக்கினாலும் , வந்த நபர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

தற்சமயம் அகோரிகளை அசிங்கப்படுத்தி ஓர் சினிமா. அனைவருக்கும் அகோரிகள் என்பவர்கள் யார் என தவறாக பதிவு செய்வதில் தனது பணியை செம்மையாக செய்திருக்கிறது. கபாலிகர்கள் எனும் ஆன்மீகவாதிகளின் வழி வந்த அகோரிகள் மிகவும் தூய்மையானவர்கள், மாமிசம் உண்ணமாட்டார்கள், கஞ்சா குடிக்க மாட்டார்கள் என நான் சொன்னால் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு இந்த பக்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்கள்.

நாகாசன்யாசிகள் எனும் பரம்பரை அகோரிகள் எனும் பிரிவை கொண்டது. பல நாட்கள் உணவு உண்ணாமல், எங்கே சென்றாலும் கால் நடையாகவே செல்லும் ஓரு வகை சன்யாசிகள் அகோரிகள். பெரும் ஞானம் கொண்ட இவர்களை புரிந்து கொள்வது கடினம். இவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்ததால் எனக்கு இவர்களின் செயல் ஓரளவு தெரியும்இவர்களை பற்றி விரிவான பதிவே போடலாம் (நீங்கள் விரும்பினால் வெளியிடுகிறேன்). ஆனால் சினிமா இவர்களை நரமாமிசம் தின்பவர்களாகவும், போதைக்குஅடிமையானவர்களாக காட்டுவது மிகப்பெரிய கலாச்சார அதிர்வை உண்டு பண்ணுகிறது.

ஐரோப்பியர்கள் இன்று கூட காசியில் மனிதன் மனிதனை தின்பதாக படங்கள் வெளியிடுகிறார்கள். சில வீடியோ வலைதளத்தில் அகோரிகள் என தேடினீர்கள் என்றால், நர மாமிசம் தின்பவனைதான் காட்டுகிறார்கள். தமிழகத்தில் ஏதோ ஒருவர் சினிமா எடுப்பதால் எப்படி உலக மக்கள் அனைவரும் தவறாக புரிந்து கொள்வார்கள் என நீங்கள் வாதம் செய்யலாம். இணைய தளத்தின் தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் “அகோரி” என கொடுத்து தேடினால் என்னவருகிறது என கீழே கொடுத்திருகிறேன்.

(படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கவும்)

எதிர்காலத்தில் ஒருவர் அகோரிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த திரைப்படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் காரணம் தகவல் களஞ்சியமே சிபாரிசு செய்துவிட்டதே…!

எத்தனையோ விஷயங்கள் இப்படி நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. மனநிலைபாதிக்கப்பட்ட குழந்தை நெருப்பில் ஒருவர் கருகி சாவதை கைகொட்டி சிரிப்பதைபோல கலாச்சாரம் நெருப்பில் அழியும் பொழுது நாம் சினிமா அரங்குகளில்கைகொட்டி ரசிக்கிறோம். ஒரு நாட்டிற்காகவோ, மதத்திற்கவோ சார்பாக நான் இங்கே பேசவில்லை.

உண்மை தவறாக பதிவு செய்யும் பொழுது அதை சுட்டிக்காடுவதை கடமை என நினைத்து கூறுகிறேன். என்னை பொருத்தவரை உலக ஜீவராசிகள் அனைவரும் என்னில் ஒருபகுதியாகவே பார்க்கிறேன். ஆனால் எனது உடலின் உறுப்பு ஒன்று சீழ் பிடித்து புண்ணாக இருக்கும் நிலையில் பிறரிடம் காட்டி ஆறுதல் தேடும் முயற்சிதான் இது. ஒரு சில நல்ல படங்கள் வெளிவரலாம் , ஆனால் பெருவாரியான படங்கள் இவ்வாறு இருந்தால் நல்ல படங்கள் இதன் முன் மறைந்து விடும். நல்ல படங்களை மட்டுமே சினிமாவாக பதியவேண்டும் என சொல்ல முடியாது.

எனது வேண்டுகோள் எல்லாம் இதுதான்.

உண்மைக்கு புறம்பானவற்றை சினிமாவாக எடுக்காதீகள். சாகசம் செய்யும் இருசக்கர வாகன விளம்பரங்களில் வரும் எச்சரிக்கை செய்தியை போல, திரைபடம் துவங்கும் முன் இதில் வரும் பாத்திரங்கள் சினிமாவுக்காக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறுங்கள்.

உங்கள் குறுகிய மனப்பான்மையை சினிமாவாக எடுத்தால் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சமூகத்தில் அம்பலமாக்காதீர்கள். சமூக ஆர்வலர் சிலரிடம் கருத்துக்கள் கேட்டு சினிமாவை எடுங்கள் அல்லது காண்பித்தபின் வெளியிடுங்கள்.

எதிர்காலத்தில் இயக்குனார்களாகவோ, திரைப்பட தயாரிப்பாளராகவோ, கதையாசிரியர்களாகவோ வரக்கூடிய ஏனையோர் இந்த பதிவை படிக்கலாம். அதில் யாரேனும் எனது கருத்தை புரிந்து கொள்வீர்கள் எனும் நோக்கத்தில் இக்கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். நீண்ட கட்டுரையை படித்த உங்களுக்கு நன்றி

சத்தியமேவ ஜெயதே..!

அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள்


உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்த இரு பிரிவில் யார்உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். பூமியின் ஏதாவது ஒரு பகுதி இரவு தன்மையை கொண்டு இருக்கிறது. அதற்காக அந்த பகுதியே எப்பொழுதும் இரவாகவே இருக்காது என சொல்லலாம். காலம் சுழலும் இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியில் தொடர்பற்று ஆகாய மார்க்கத்தில் இருக்கும் ஒரு வஸ்துவுக்கு இரவு பகல் என்பது கிடையாது. சூரியனில் ஏது இரவு ஏது பகல்? மனிதர்கள் பூமியில் தொடர்பு கொண்டு வாழ்வதால் அவர்களுக்கு மாற்றம் என்பது இருக்கிறது. ஆன்மீகவாதிகள் இதிலிருந்து விடுபட்டு உள்ளதால் காலத்தாலும், மாற்றத்தாலும் கட்டுவிக்கப்படாமல் விடுபட்டு இருக்கிறார்கள்.

ஆன்மீகவாதிகள் என்றவுடன் பாரத தேசத்தில் மட்டுமே இருப்பதாகவும், உலகில் வேறுபகுதியில் கடவுள் ஆன்மீகவாதிகளை வளரவிட மாட்டார் எனவும் பலர்எண்ணுகிறார்கள். வேத காலம் என ஒன்று இருந்தது. அக்காலத்தில் உலகமே ஒரு நாடாக இருந்தது. எல்லை பிரச்சனையில் பக்கத்து மாநிலத்துடன் சண்டையிடும் நமக்கு இதை சிந்திப்பது சிரமம் தான். வேத மந்திரம் “பாரத கண்டே” எனும் சொல் நமது உலகமே ஒரே கண்டமாக இருந்தது என உணர்த்துகிறது.

காலத்தால் கலாச்சார மாற்றம் அடைந்து பெரிய சேலையாக இருந்த பாரதம் பல சிறு துண்டங்களாக மாற்றம் அடைந்து கைக்குட்டையானது. உலகின் பிறபகுதிகள் கலாச்சார மாற்றம் அடைந்தாலும், பாரத தேசத்தில் மட்டுமே ஆன்மீகவாதிகள் பெருக காரணம் சூழல் தான். தாங்கள் செய்யும் ஆன்மீக சாதனைகள் (பயிற்சிகள்) இடையூறு வராதவண்ணம் சூழல் இங்கு இருக்கிறது. ஞானம் அடைய தனிமனித முயற்சி இருந்தாலும் அதற்கான சூழல் வேண்டும்.

திபத்தில் இருக்கும் மக்கள் முக்கியமாக ஓர் மந்திரத்தை சொல்லி கடவுளை வேண்டுவதுண்டு. “கடவுளே எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை பாரதத்தில் பிறக்க வை”- என்பதே அம்மந்திரம். வேறு இடங்களில் ஒரு மனிதன் பிறந்தால், தானே ஞானமடையும் முயற்சியில் இறங்க வேண்டுமாம். பாரதத்தில் பிறந்தாலே போதும் என்பது அவர்களின் எண்ணம். பாவம் அவர்களுக்கு தெரியாதே, நாம்துரித உணவகத்தில் உண்டு, கேளிக்கை செய்து, இனத்தை பெருக்கி மாண்டுவிடுவோம் என்பது…!

ஆன்மீகவாதிகள் என்றவுடன் நம் மக்களுக்கு சில எண்ணங்கள் உண்டு. கற்பனை உலகிலேயே வாழ்பவர்கள் தங்கள் நினைத்தது போல தான் பிறர்வாழ்கிறார்கள் என எண்ணுவார்கள். உண்மையில் ஆன்மீகவாதிகளின் நிலை ரகசியாமாக காக்கப்படுவதில்லை. மக்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் ரகசியமாகி விட்டது.கடலுக்கு அடியில் முத்து எடுக்க சென்றவன், தான் கடலின் ஆழத்தில் கண்டவற்றை கரையில் இருப்பவனுக்கு சொல்ல முடிவதில்லை. அது போல ஆன்மீகநாட்டமுள்ளவனும் பிறரிடம் தான் கண்ட ஆன்மீகவாதிகளை பற்றி வெளியே சொல்ல முடிவதில்லை.

ஆன்மீகம் என்பது மதம்,கலாச்சாரம், சடங்குகள், மொழி போன்றவற்றை கடந்தது. ஆன்மீகம் என்றவுடன் அனைவரும் மதத்துடன் அதை தொடர்புபடுத்தி குழப்பிகொள்கிறார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பல நிலைகள் மற்றும் தன்மைகள் உண்டு. இயல்புவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை பார்த்தால் வித்தியாசம்தெரிவதில்லை.

சாதுக்கள், சன்யாசிகள், ஸ்வாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நம் ஆட்கள் ஒரேவார்த்தையில் அடக்கிவிடுவார்கள் அது- “சாமியார்”

தாந்தீர்கம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இங்கு ”சாமியார்” எனும் அடைவுக்குள் வந்துவிடுகிறார்.

தமிழகத்தில் சித்தர்கள் என சிலரை சொல்லுவதுண்டு. தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு சென்று சித்தர் பற்றி பேசினால், சித்தார் எனும் இசைகருவியை தான் காண்பிப்பார்கள். காரணம் சித்தர் எனும் பெயர்வழக்கு தமிழில் மட்டுமே உண்டு. யோகிகள் என்பவர்களை தான் நாம் சித்தர்கள் என தமிழ் “படுத்தி” இருக்கிறோம். இது போதாது என்று அவர்கள் பதினெட்டு எண்ணிக்கையில் தான் இருக்கவேண்டும் என கட்டயாம் வேறு படுத்துகிறோம். உண்மையில் சித்தர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்ல. தங்களை உடலாலும், உயிராலும் மேன்மை அடைய ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எனலாம்.

நாம் எப்படி காவி காட்டிய அனைவரையும் சாமியார் என்கிறோமோ அது போல வட நாட்டில் அவர்களை “பாபா” என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை அல்லது உயிர் கொடுத்தவர் என அர்த்தம்.

அங்கு அனைவரும் பாபா தான். மேல்தட்டு மக்கள் மஹராஜ் என அழைப்பார்கள். ரிஷிகள் அவர்களுக்கு அரசனை போன்றவர்கள்.[இந்த சொல்லாடலை மனதில்வைத்துக்கொள்ளுங்கள் பின்னால் இதை பற்றி பேசுவோம்.]

அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். தமிழில் வடமொழி சொற்கள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவனை பார்த்து “கேவலமானவன் நீ” என சொன்னால் அவர் என்ன நினைப்பார்?
வடமொழியில் “கேவல” எனும் சொல் தனித்துவமான – மேல்நிலையான என பொருள்படும். [உ.ம். கேவல சைதன்யம்- உண்னதமான துய்மை நிலை]. இப்பொழுது எதற்கு இந்த சமஸ்கிருத வகுப்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

தினசரிகளில் கொடூரமான விபத்தை பற்றி எழுதும் பொழுது “கோரமான விபத்து” என எழுதுவார்கள் அல்லவா? கோரம் என்றால் “பார்க்க முடியாத அளவுக்கு”,“மனம் பாதிப்படையும் தன்மை உள்ள” என பொருள் கொள்ளலாம். இதற்கு எதிர்பதம் தான் அ-கோரம்.

ரம்மியமான, பார்த்தால் ரசிக்க தக்க நிலையில் இருப்பவர்களே அகோரர்கள். அகோரமான முகம் என தமிழில் இந்த சொல்லையும் தவறாகவே பயன்படுத்துகிறோம்.

அகோரமான நிலையில் இருப்பவர்கள் தான் அகோரிகள். வடநாட்டில் அனைவராலும் அகோரிகள் என அழைக்கப்படுபவர்கள் யோகிகளே. நாக சன்யாசிகள் அல்லது நாகா பாபா என அழைக்கப்படுபவர்களும் இவர்கள் தான். ஹிந்தியில் நங்கா என்றால் நிர்வாணம் என அர்த்தம். நங்கா பாபா எனும் சொல் வழக்கு பின்னாளில் நாகா பாபா என மாற்றமடைந்தது.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும் மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.இனிவரும் பகுதியில் இவர்களை யோகிகள் என அழைப்போம். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.

யோகிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் யோகிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல்,உடல் சீரான நிலையில் இருக்கும். ரிஷிகேசத்தில் இருந்த ஒரு யோகியின் புகைப்படம். இந்த படம் எடுக்கும் பொழுது அவருக்கு 85 வயது…!

தத்வவாலே பாபா

ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் , பின்னாலும் இருக்கும் யோகிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.

நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்ப மேளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள்.

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டுவருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உற்கார்ந்து தியானம் செய்வார்கள்.

இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.

உண்மைகள் – பகுதி இரண்டு

அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.

ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவேஇருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ஆன்மீக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனையை கொண்டு அவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என நாம் முடிவு செய்வது கடினம்.

ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். உண்மையை அவர்களின் உள்நிலை உயர்வை நாம் உணரும் நிலையில் இல்லை.

காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என சொல்லிவிட முடியாது, அது போலவே உடைகள் இல்லாமல் இருக்கும் யோகிகள் ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் சொல்ல முடியாது அல்லவா?

அஹோரி எனும் இத்தகைய யோகிகள் பிரம்மாண்டமானவர்கள் என சொன்னால் மிகையில்லை. தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள். யோகிகள் இரு நிலையில் வகைப்படுத்தலாம்.அதாவது தன்முனைப்பு கொண்டவர்கள், சமூக முனைப்பு கொண்டவர்கள்.

தன்முனைப்பு கொண்ட யோகிகள் தங்களுக்கு என ஆன்மீக பயிற்சிகள் அமைத்து கொண்டு செயல்படுபவர்கள். சமூக முனைப்பு கொண்டவர்கள் சமூகத்தை அறவழியில் கொண்ட செல்ல செயல்படுபவர்கள்.

யோகிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என சொன்னேன், சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பார்கள். தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் வரும் எத்தனையோ ஆன்மீகவாதிகளில் இவர்கள் உண்டு. நமக்கு அவர்களை அடையாளம்காண்பது அரிது.

இமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

யோகிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என நான் குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். யோகிகளில் ஒரு பிரிவினர் ராணுவத்தை போல செயல்படுகிறார்கள். ராணுவ யோகிகள் சிலர் கையில் பெரிய ஆயுதங்களை வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். பாரதத்தில் சுதந்திர போராட்டத்தில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.

உபநிஷத்தின் வார்த்தையான “சத்ய மேவ ஜெயதே” ஏன் இந்திய அரசின் தேசிய வார்த்தையாக இருக்கிறது? சுந்திர போராட்டத்தில் ஏன் காந்தி முன்னிருத்தப்பட்டார் ?

தமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஏன் அடிக்கடி ரிஷிகேசம் சென்றார்கள் ? என பல காரணங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.

நான் கும்பமேளாவில் நாக சன்யாசிகளின் கூடாரத்திற்கு அருகில் தங்க நேர்ந்தது. இருபது மணி நேரத்திற்கு மேலாக ஒரு நூல் கூட அசையாமல் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாள் சரியாக நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். எனது கூடாரத்தின் வெளியே அமர்ந்திருந்தேன். குளிருக்காக பெரிய மரம் என் முன்னே எரிந்து கொண்டிருந்தது( தூஹ்ணி). யோகிகள் மொத்தம் பத்து முதல் இருபது பேர் இருப்பர்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரும் எந்த ஒரு சப்தமும் வராமல் எழுந்து நின்றார்கள்.

வரிசையாக நடந்து சென்று கங்கையாற்றில் இறங்கினார்கள். எழுந்து வந்து அருகில் இருக்கும் மயானத்தின் சாம்பல் கொட்டும் பகுதியில் புரண்டு விட்டு மீண்டும் வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். இத்தனையும் நடக்கும் பொழுது தங்களுக்குள் அவர்கள்பேசவில்லை. சைகைகாட்டவில்லை. அனைவரும் ஒரே உடலின் உறுப்பு போல கச்சிதமாக செயல்பட்டார்கள். அப்பொழுது தட்பவெப்பம் சுமாராக 4 டிகிரிக்கும்குறைவாக இருக்கும்.

கும்பமேளாவில் பங்கெடுக்கும் ஆரம்ப நிலை யோகிகளை கொண்ட வீடியோ காட்சி.

கும்ப மேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க , இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது? ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவுபொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி?

தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். யோகிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்…! இவர்களை பொருத்தவரை ரிடையர்மெண்ட் என்பது நேரடியாக செட்டில்மெண்ட் தான்.

மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.

சென்ற பதிவில் இருந்த யோகியின் உருவத்தையும் , இவரின் உருவத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சில உண்மைகள் புரியும். பரமஹம்ஸ யோகானந்தர் எனும் யோகி, தனது வாழ்வில் மஹாஅவதார் பாபாஜியை கண்டார். அதை மனதில் வைத்து வரைந்த உருவம் தான் இது.யோகிகள் பார்ப்பதற்கும் செயல்படுவதிலும் ஒன்று போலவே இருப்பர்கள். இவரை போன்ற அனேக யோகிகள் அருவமாக வாழ்வதுண்டு. யோகிகள் தங்கள் உடலை சில காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை, சூட்சம நிலையில் மாற்றிவிடுகிறர்கள்.

இறந்து போனவரை உயிர்த்தெழுக வைப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
யோகிகள் உயிர் அற்ற உடலை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ள பிரிடீஷ் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு ஒன்றே சாட்சி.

அந்த வழக்கு…

உண்மைகள் பகுதி மூன்று

“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”

விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்…

வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில தவறான பழக்கங்களால் இள வயதில் நோய் கண்டான். அரசு மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவம் செய்தும் அரசன் உடல் நலம் மிகவும் நலிவுற்றது. 25 ஆம் வயதில் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தான் அந்த அரசன். மலைவாழ்ஸ்தலங்களில் இருந்தால் சிறிது காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அரசன் தனது ராணி, மூன்று வயது மகன் மற்றும் பரிவாரங்களுடன் டார்ஜலிங் சென்றான்.

டார்ஜலிங் அப்பொழுது பிரிடீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பிரிடீஷ்காரர்களுக்கு கப்பம் கட்டும் மன்னனாக இருந்ததால் அவர்களும் அரசனை வரவேற்றார்கள். அரசன் காலரா, பிளேக் போன்ற கொடுடிய நோய் கொண்டவனாக இருந்து அது பிறருக்கு பரவுமோ என ஐயம் கொண்ட பிரிடீஷ்காரகள் தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை கொண்டு மன்னனை பரிசோதித்தார்கள். அவருக்கு தொற்றகூடிய நோய் இல்லை என தெரிந்ததும் அனுமதித்து தங்கள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதித்தனர்.

சில மாதங்களில் மன்னன் நோய் முற்றி இறந்தான். பிரிடீஷ் ஆதிக்க இடத்தில் இறந்ததால், அவர்களின் மருத்துவர் மன்னன் உடலை பரிசோதித்து இறப்பு சான்றிதழ் வழங்கினான். அரசனின் அரண்மனை வைத்தியரும் பரிசோதித்து மன்னன் இறந்ததை உறுதி செய்தார். மன்னனின் இறுதி சடங்கு கங்கை ஆற்றங்கரையோரம் டார்ஜலிங் அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடந்தது.

உடலுக்கு மூன்று வயது மகன் நெருப்பு மூடிய சில நிமிடத்தில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டு உடல் ஆற்றில் அடித்து சென்றது. உடல் தகனம் செய்ய வந்தவர்கள் ஆற்றுவெள்ளத்தில் மிதந்து மீண்டார்கள்.

கணவன் இறந்த துக்கத்தில் அரண்மனை வந்த ராணி தனது மகனுக்கு முடிசூட்ட தயாரானாள். ஆனால் ராணியின் தம்பி ஆட்சியை கைபற்றினான். இருவரையும்துன்புறுத்தினான். மக்களை கொடுங்கோலனாக ஆட்சி செய்தான்.

இதே சமயத்தில் காட்டின் ஒரு பகுதியில்..

கங்கை கரையின் ஓரத்தில் அந்த யோகிகள் கூட்டம் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் ஆற்றில் ஒரு பிணம் மிதந்து வருவதை பார்த்த தலைமை யோகி சைகை செய்தார். பிற யோகிகள் அந்த உடலை ஆற்றில் இறங்கி கரை சேர்த்தார்கள். மார்பில் சில பகுதிகள் மட்டும் தீக்காயத்துடன் இருந்த உடலின் கபாலத்தை திறந்து சில மூலிகைகளை சேத்து மீண்டும் மூடினார்கள். தினமும் இரு யோகிகள் அந்த உடலுக்கு காவல் இருந்தார்கள். உடல் முழுவதும் சவரம் செய்யப்பட்டு தினமும் சில “ரகசியமான செயல்கள்” மூலம் அந்த உடல் புத்துயிர் ஊட்டப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு உடலில் சில அசைவுகள் வரத்துவங்கின. மெல்ல நடக்கவும், உணவு உற்கொள்ளவும் அந்த உடலுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த உடல் , தான் யார் என்ற எந்த உணர்வும் அற்ற நிலையில், இருபத்திஐந்து வயது குழந்தையாகவே வலம்வந்தது.

பன்னிரெண்டு வருடங்கள் யோகிகளுக்கு உண்டான பயிற்சி அளிக்கபட்ட அந்த உடல் ஒரு கும்பமேளா நேரத்தில் யோகிகள் குழுவுடன் காட்டிலிருந்து நடக்க துவங்கியது. ஒர் இடத்தில் திடிரென டேரா அமைத்தார்கள். வட்டமாக பல மணி நேரம் யோகிகள் உட்கார்ந்து இருப்பது டேரா என அழைக்கிறார்கள். நெடுநாள் விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவதை சொல்லுவோம் அல்லவா அதே வார்தை தான். யோகிகளின் குழு தலைவர் அந்த உடலை அழைத்து, சில யோக முறைகளை செய்து அவ்வுடலின் பழைய சம்பந்தத்தை மீண்டும் கொண்டுவந்தார்.

உடல் மீண்டும் மன்னன் ஆகியது. மன்னன் செய்ய வேண்டிய வேலையை கூறி டேராவிலிருந்து அனுப்பி வைத்தார்.மன்னன் மீண்டும் தனது நாட்டிற்கு வந்து தனது ஆட்சியை கேட்க, மன்னனின் மைத்துனன் ஏதோ மந்திரவாதி மன்னன் உருவில் வ்ந்திருப்பதாக சொல்லி விரட்டினான். சிலரின் துணையோடு பிரிடீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் மன்னன். நீதிபதி விசாரணையை துவக்கி, மன்னன் இறந்ததையும் – மீண்டும் உயிருடன் வந்ததையும் உறுதி செய்தார். மன்னனுக்கு எப்படி உயிர் வந்தது என நீதிபதி கேட்க மன்னன் விளக்கியது தான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

மன்னன் உடலாக இருக்கும் பொழுது யோகிகளுக்கு உதவியாக தானும் பிற உடலுக்கு காவலாக இருந்ததையும் கூறினான். வழக்கு மேல்முறையீட்டுக்காக லண்டனில் இருந்த உச்ச நீதி மன்றதிற்கு மாற்றபட்டது. அங்கும் மன்னன் உயிர் பெற்றான் என்றும், யோகிகள் உயிர் அளித்தார்கள் என்றும் நிரூபிக்கபட்டது.

பிரிடீஷ்காரகள் மீண்டும் ஆட்சியை மன்னனிடம் கொடுத்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு வளர்ந்த மகனுக்கு முடிசூட்டி மீண்டும் யோகிகளுடன் சென்று இணைந்தான் மன்னன். மன்னிக்கவும் யோகி.

மேற்கண்ட சம்பவத்தை நான் ஒரு யோகியிடம் இருந்து கேட்டு கதைவடிவில் தந்திருக்கிறேன். தகவல் உண்மையா என காண இங்கே இருக்கு சுட்டி இங்கே. சுட்டியில் உள்ள சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை தன்மையில் விவரிக்கபட்டுள்ளது..

என்ன செய்ய…? சாட்சி கொடுத்தால் தானே நம் மக்கள் இங்கே அனைத்தையும் நம்புகிறார்கள்.

இது போல எத்தனையோ சம்பவங்கள், நீதி மன்றத்தில் இது போன்ற விசித்திர வழக்குகள்.[திரு. ஷண்முகப்ரியன் கூறியது போல விமலானந்தா எனும் அகோரியின் வாழ்க்கைசம்பவம் கூட நீதிமன்றவழக்கு தான்]

இப்படி பட்ட அசாத்திய ஆற்றல் கொண்ட அகோரிகளுக்கு ஒரு பழக்கம். தங்களை பிறர் கவனிக்கிறார்கள் என தெரிந்தால் அவர்கள் அருவெருக்க தக்க செயல்களை செய்வார்கள். அதன் பின் அவர்களை பார்த்து ஓடிவிட செய்வார்கள். தங்களை பிறர் பின் பற்றவேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். உதாரணமாக அவர்கள் பூஜை செய்வதை கவனிக்க ஆரம்பித்தால் மலம் மற்றும் சிறுநீரில் பூஜை செய்ய துவங்குவார்கள். ..!

உங்கள் வைராகியத்தை நிரூபணம் செய்தால் அவர்களுடன் இணைத்து கொள்வார்கள். சிலர் இவர்கள் முன், தங்கள் உடல் உணர்வு இல்லாமல் வைராகியம்கொண்டிருக்கிறோம் என காட்ட பலர் தங்கள் பிறப்புறுப்பை கட்டையாலும், கம்பிகளாலும் பிணைத்து கொள்வார்கள். அப்படி பட்டவர்களை பார்க்கும்வெளிநாட்டுகாரர்களும் , நம் நாட்டுகாரர்களும் யோகிகளே அவ்வாறு இருப்பதாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் யோகிகளின் காலேஜுக்கு அட்மீஷன்கேட்பவர்கள் தான் யோகிகள் அல்ல.

நாக சன்யாசிகளுக்கு முன் தனது வைராக்யத்தை காண்பிக்கும் ஒருவர்.
[ காலேஜ் அட்மீஷன் காட்சியை பார்த்தவுடன் கால்ககளை சேர்த்து உற்கார தோன்றுகிறதா?]

காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. [என்னடா இது… காசியை பற்றி கூட தனி பதிவு போடலாம் போல இருக்கே..! ]

சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் யோகிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.

ஒரு பதிவர்கூட அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என பதிவிட்டுருந்தார். அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வீடியோவிலோ அல்லது இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன்.

யோகிகளின் லட்சணங்கள் :

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.

கும்ப மேளாவில் ஆரம்ப நிலை யோகிகளின் அணி வகுப்பு

கடந்த சில பதிவுகளாக யோகிகளை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். எனக்கும் அவர்களுக்கும் நடந்த பல சுவையான சம்வங்கள், தமிழகத்தில் இவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

அமானுஷ தன்மையை கூறியும், யோகிகள் உயர்ந்தவர்கள் என கூறியும் இவர்களை பின்பற்ற சொல்லுவதற்காக நான் இந்த பதிவு இடவில்லை. இவர்களை பின்பற்ற சொல்லுவது கூட இவர்களுக்கு பிடிக்காது என்பதே உண்மை. இவர்களை வணங்க தேவையில்லை குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமல் இருக்க முயற்சிப்போம்.

சத்யமேவ ஜெயதே..!

உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..!


நம் பாரத தேசம் பல நூற்றாண்டுகளாக செழிப்பான ஒரு நாடு. இங்கே விளையும் வாசனை பொருட்களுக்காகவும், ஆபரணங்களுக்காகவும் பல நாட்டினர் படையெடுத்தனர் என்பது வரலாறு. ஒரு நாட்டை அடிமையாக்கும் மனோபாவத்தில் படைஎடுத்தல் என்பதை தாண்டி ஒரு நாட்டின் வளத்திற்காக படை எடுப்பது என்பது முன்காலத்தில் இந்தியாவில் மட்டுமே புதிய விஷயமாக இருந்தது. தற்காலத்தில் எண்ணெய் கிணறு என்னும் வளத்திற்காக சில நாடுகளை அடிமைப்படுத்த வல்லரசு நாடுகள் விரும்புகிறதே அது போல பாரதம் பிறருக்கு ஒரு வளமான பூமியாக தெரிந்தது.

தட்பவெப்பம், பயிர்வகைகள், கலாச்சாரம், மெய்ஞான அறிவு மற்றும் பொருளாதாரம் என பல விஷயங்கள் பாரதம் முன்னிலையில் இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கமுடியாது. உலக படத்தில் பூமத்திய ரேகை சார்ந்து அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் கலாச்சரத்தில் பிற பகுதிகளை காட்டிலும் முன்னேறி இருந்தது. உலகவரைபடத்தில் இடமிருந்து வலமாக எடுத்துக்கொண்டால் மெக்சிக்கோ, எகிப்து, அரேபியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை கலாச்சார முன்னேற்றம் கொண்ட பிரதேசமாக இருந்தது. 

கலாச்சார முன்னேற்றம் என்றவுடன் நவநாகரீக உடை அணிதலையோ , சமைக்கபட்ட பல்வகை உணவுகள் உண்பதையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. மெய்யறிவுடன் தங்கள் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தன்மையும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவு என்பதையே கலாச்சார முன்னேற்றம் என்கிறேன். வேளாண்மை மூலம் தானிய உற்பத்தி, உலோக பயன்பாடு மற்றும் கட்டிடக்கலை ஆகியவை தான் கலாச்சாரத்தின் உண்மையான குறியீடுகள். 

பூமத்திய ரேகை சார்ந்த நிலப்பரப்புகளில் கலாச்சார முன்னேற்றம் இருந்தாலும் அதில் மிக முன்னேறிய கலாச்சாரம் என்பது பாரதத்தில் மட்டுமே இருந்தது. வேளாண்மையில் புதிய நுட்பங்களை கண்டறிந்து பல்வேறு உணவு முறைகளை கண்டறிவது, உலோகப் பயன்பாட்டில் மிகவும் அறிவியல் அறிவுடன் செயல்படுவது என பாரத தேசத்தினர் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தனர்.

உணவு முறையில் சமச்சீர் உணவு முறையும் , பல்வேறு உடல் நிலைக்கு ஏற்ப உணவு அமைப்பையும் நம் மக்கள் பின்பற்றிவந்தனர். அதை வேறு ஒரு நாள் விளக்கமாக பார்ப்போம். உலோகத்தில் அனைத்து வகையான உலோகமும் நம் மண்ணில் கிடைத்தவண்ணம் இருந்தது. ஒரு உலோகம் நம் உடலில் எத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.

நம் உடலில் இருக்கும் நாடியின் செயலையும் நவக்கிரகங்களின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு உலோகத்தை பயன்படுத்துவது என்பதை கண்டறிந்தார்கள். தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை மட்டுமே ஆபரணமாக பயன்படுத்தக் கூடிய உலோகம் என்பது அவர்களின் கருத்து.

அறிவியல் ரீதியாக மூலக்கூறு அட்டவணையில் அதிக புள்ளிகள் கொண்டது தங்கம் மற்றும் வெள்ளி என்பது அறிந்ததே. தங்கமும் வெள்ளியும் அதிவேக கடத்திகள். ஆற்றலை கடத்தும் திறனில் இவற்றுக்கு தான் முன்னுரிமை. அதற்காக அறிவியல் சார்ந்து பாரதத்தில் பயன்படுத்தினார்கள் என கூறி பாரத கலாச்சாரத்தின் தரத்தை நான் குறைக்க விரும்பவில்லை. பாரத மக்கள் பயன்படுத்தியது அறிவியலையும் தாண்டிய மெய்யறிவு. 

நம் கலாச்சாரத்தின் படி எப்படி உலோகங்களை பயன்படுத்தவேண்டும் என பார்ப்போம். உடலில் தங்கத்தை இடுப்புவரை மட்டுமே அணிய வேண்டும். வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். விரல்களில் வெள்ளி அணியக்கூடாது.

வெள்ளி என்ற உலோகம் சுக்கிரன் என்ற கிரகத்தை குறிக்கிறது. உண்மையில் சுக்கிரன் கிரகத்தில் வெள்ளித் தாதுக்கள் அதிகம். சுக்கிரன் கிரகத்தையே தமிழில் வெள்ளி என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? சுக்கிரன் காம இச்சைகளை கொடுக்கும் கிரகம். அதனால் வெள்ளி உலோகம் இடுப்பு அரைஞாண் மற்றும் கொலுசு ஆகியவற்றிக்கு பயன்படுத்தினார்கள். இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு.

தங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்கம் மிகமுக்கியமானது.

உலோகத்தில் தங்கத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள். சுரங்கங்களில் தங்கம் அதிகமாக கிடைத்ததும் ஒரு காரணம். மூளை திறன் அதிகரிக்க நம் அரசர்கள் தங்கத்தை தலையில் கிரீடமாக அணிந்தனர். வேறு கலாச்சார நாடுகளில் தங்கத்தை கிரீடமாக அணிவது வழக்கத்தில் இல்லை என்பதை அறிக. செம்பு ஆபரண தங்கத்துடன் கலக்கப்பயன்பட்டதால் செம்பும் அதிகமாக பயன்பட்டது என கூறலாம்.

ஒரு மனித உடலில் தங்கம் முதன் முதலில் தொடர்பு கொள்ளும் நாள் மிக முக்கியமானது. மனித உடலில் இயற்கையாகவே தங்க தாது உண்டு. அத்துடன் தங்க ஆபரணம் இணைந்து உடலின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தங்கம் அணிவித்தல் என்பது விழாவாகவே கொண்டாடினார்கள். நாம் இப்பொழுதும் காது குத்தும் வைபவமாக எளிய நிலையில் கொண்டாடுகிறோம்.

நம் உடலில் இடா நாடி மற்றும் பிங்கள நாடிகள் இடவலமாக இருப்பது முன்பு பார்த்தோம். ஆபரணம் அணிவதில் இந்த நாடிகளை சமநிலை ஆக்குவதற்குத்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நாடிகள் ஆன்மீக சக்தியை கடத்தும் புள்ளிகள் என்பதால் நாடிகள் இணையும் இடத்தில் ஆபரணம் அணிய வேண்டும். 

மனித உடல் என்பது ஒருவித கட்டமைப்பால் உண்டானது. நாடிகளின் சலனத்தை அவைகள் ஏற்படுத்துகிறது. நம் உடலில் இடப்பக்கம் உள்ள நாடிகள் வலப்பக்க செயலையும், வலபக்க நாடிகள் இடபக்க செயலையும் செய்யும். அதனால் உடலில் நாடிகளின் சமநிலை தவறாமல் இருக்க சம எடை கொண்ட ஆபரணங்களை இருபக்கமும் அணிந்தார்கள். இரண்டாக இருக்கும் உடல் பகுதிகளில் ஒன்றில் மட்டும் ஆபரணம் போடுவதால் நாடி சமநிலை தவறும். உதாரணமாக காது, மூக்கு, கைகள் மற்றும் கால் பகுதியில் ஆபரணம் அணியும் பொழுது இரு உறுப்புகளிலும் அணிய வேண்டும். இரு உறுப்பில் அணியும் ஆபரணம் சமமான எடையுடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். 

ஆபரணத்தின் இத்தகைய முக்கியத்துவம் உணராமலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆபரண வடிவமைப்பவர்கள் கூட தங்களின் பாரம்பரிய வடிவமைப்பால் கொலுசு, வளையல் போன்றவற்ற ஒரே எடை மற்றும் வடிவில் தயாரிப்பார்கள். வடிவம் (டிஸைன்) மாறினால் எடையில் வித்தியாசம் ஏற்படும் என்பது ஒரு முக்கிய காரணம்.

நாடிகளின் சலனம் ஏற்படாமல் சமநிலையில் இருக்கவும், அலங்காரத்திற்காகவும் ஆபரணம் பயன்படுத்தபட்டது.

சினிமா பாடல்களில் ஆன்மீக அத்துமீறல்


சென்ற வாரம் வாடகைக் காரில் ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். டிரைவர் ஒரு இசை தட்டை ஓடவிட்டார். அதில் இருக்கும் பாடலை கேட்டவுடன் என் நிலை எப்படி இருந்தது என இந்த கட்டுரையின் கடைசி வரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

தற்சமயம் சினிமா உலகில் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் ஆன்மீக அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள். சிலர் ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமல் அசிங்கபடுத்துகிறார்கள்.

இசை என்பது இறைவனின் வடிவம். நாதமே கடவுளின் சத்சொரூபம் என்கிறது அனைத்து புனித நூல்களும். நாதத்தில் லயம் ஆகும்பொழுது இறைவனின் நிலையை சில ஷணங்கள் உணர முடியும் என்பது உணர்ந்தவர்களுக்கு தெரியும். முக்கியமாக திரை இசை இந்த வரம்புகளை மீறி செயல்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

வேட்டைக்காரன் என்ற திரைப்படம் நடிகர் விஜய் என்பவர் நடித்து வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இசையை விஜய் ஆண்டனி என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் ‘நக்கமுக்க’ என்ற தெய்வீக இசையை உலகுக்கு அளித்தவர். படத்தின் நாயகன் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த திரைப்படத்தில் புலி உறுமுது என்று ஒரு பாடல் இருக்கிறது. தன் அரசியல் பிரவேசத்திற்காவும், இலங்கை தமிழருக்காவும் கருத்தில் ஏற்படுத்தபட்ட பாடல் என நினைக்கிறேன். இப்பாடலில் வேத மந்திரங்கள் அத்துமீறி உபயோகப்படுத்தபட்டுள்ளது. எத்தனையோ விஷயங்கள் திரையிசையில் பயன்படுத்த இருக்க இவர்களுக்கு ஒரு தனிமனித துதிபாடலுக்கு வேதமந்திரம் தான் கிடைத்ததா?

அஷத்தோமா சத்க்ரமய
தமசோமா ஜோதிர்கமய
மிர்த்யோமா அமிர்தம் கமய

என்ற வேதமந்திரத்தின் ஆழமும் அர்த்தமும் அந்த இருவருக்கும் தெரியுமா?
இதை கூட கல்நெஞ்சுடன் பொருத்துக்கொள்ளலாம்..பாடலின் ஆரம்பத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளை கத்திவிட்டு ஓம் ஷாந்தி ஓம்ஷாந்தி என கூறி இவர்களின் உளரலையும் வேத மந்திரமாக்க முயற்சி செய்வது கண்டனத்திற்கு உரியது.

திரை இசையில் தமிழ் மொழியை கொன்று குழிதோண்டி மூடியவர்களுக்கு கிடைத்த அடுத்த பலி வேதமந்திரம் என நினைக்கிறேன்.

சில திரைப்படத்தில் மந்திரம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். அந்நியன் என்ற படத்தில் கருட புராணத்தின் வரிகளையும், உன்னை போல் ஒருவன் படத்தில் பகவத் கீதையின் வரிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். (இந்த கட்டுரைக்கு தகவல் திரட்டும் பொழுது தெரிந்து கொண்டேன். மேற்கண்ட கண்றாவியை பார்க்கவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்..)

பகவத் கீதை ஒரு சமயம் சார்ந்த மத நூல். உங்களுக்கு நான் கூறுவது ஆதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். அதுதான் உண்மை. கிருஸ்துவத்தில் பைபிள், இஸ்லாமில் குரான் போல பகவத்கீதை ‘இந்து இஸம்’ உருவாக்கியவர்களால் பயன்படுத்தபடும் நூல்.

வேதசாஸ்திரத்தின் மெய்ஞான கருத்துக்கள் அதில் இருப்பதால் பகவத் கீதையை நாம் வணங்கலாம். அனைத்து மதங்களிலும் வேத சாஸ்திரம் பொதிந்திருக்கிறது.

நான்கு வேதமும், உபநிஷத்களும் ஒரு மதம் சார்ந்தது அல்ல. இதை உருவாக்கியவர்கள் கிடையாது. அவை சக்தியின் குறியீடுகள், இறைவனின் அருள் ஆற்றல்கள் அதை திரையிசையில் பயன்படுத்துவது மிக கொடூரமான செயல்.

இந்த படத்தின் நாயகனும் இசையமைப்பாளரும் தெரியாமல் பயன்படுத்தினார்கள் என கூறமுடியாது. காரணம் இருவரும் ஒரு யோக கழகத்தில் யோகம் பயின்றவர்கள். அந்த பயிற்சில் கண்டிப்பாக இந்த வேத மந்திரத்தை கூறி இருப்பார்கள்.

வேத சாஸ்திரம் கூட வேண்டம் கிருஸ்துவமோ,இஸ்லாமோ சார்ந்த மத வாசகங்களை இவர்களின் குத்து பாடலில் சேர்த்தால் இவர்கள் நிலை என்ன?

வேத சாஸ்திரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்கும் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்துவார்கள் போல இருக்கிறது. நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது. வேதசாஸ்திரமும் தன்னை மனிதன் காப்பான் என காத்திருப்பதில்லை. சுருங்கச்சொன்னால் வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்.

இந்த பாடலை கேட்டவுடன் எப்படி இருந்தது என கேட்கிறீர்களா? அந்த திரைப்படத்தின் அடுத்த பாடல் வரியை போல இருந்தது…

என் உச்சி மண்டையில சுர்ர்ங்குது…………..

பாலியல் குற்றத்திற்கு மரணதண்டனை


மத்தியபிரதேச மாநிலத்தில் 2010 நவம்பர் ஏழாம் தேதி அன்று விதவை பெண் ஒருவர் கணேஷ் லோதி மற்றும் ராம்ஜி லோதி என்ற இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு பின் கொல்லப்பட்டார்.

அவ்விருவருக்கும் இன்று மரண தண்டனை விதிக்கபட்டது, இத்தீர்பை பிஜுவா நகரில் உள்ள நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி வழங்கினார்.

லண்டனில் சாதனை படைத்த 9 வயது ஈழத்துச் சிறுவன்!


ஈழத்துச் சிறுவனான அபிநாவ் சந்திரமோன் (9 வயது) லண்டனில் இடம்பெற்ற கணிதப் போட்டியில் “ஏ” தரத்தில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த அபிநாவின் குடும்பம் ஜேர்மனியில் இருந்து 2006ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்றுள்ளனர்.

 

லண்டன் லூடொன் மாநிலத்தில் வசிக்கும் அபிநாவ், தனது 7வயதில் GCSE பாடத்தில் உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து அபிநாவின் அம்மா வாணி சந்திரமோகன் கருத்து வெளியிடுகையில்,

 

நான் நிலவில் இருப்பது போல் உள்ளது. மகன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான் எனக்கு கணிதப் பரீட்சையில் “ஏ” தரம் கிடைக்குமென்று. மிகவும் நம்பிக்கையாக இருந்தான்.
விளையாட்டைப் போலவே இந்தப் பரீட்சையையும் விரும்பினான்.

 

உண்மையில் பரீட்சையை அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது மகன் கணிதத்தை நேசிக்கின்றார். குறித்த பரீட்சைத் தாள் ஒரு மணித்தியாலத்தைக் கொண்டது. ஆனால் 45 நிமிடத்தில் எழுதி முடித்துவிட்டதாக தெரிவித்தார்.

 

கணனி விளையாட்டைப் போல் இப்பரீட்சை இருந்ததாகக் மகன் குறிப்பிட்டார்.

 

நாங்கள் அவரிடம் எதனையும் திணிக்கவில்லை. அவர் எங்களுக்கு கிடைத்தது ஒரு பரிசாகவே கருதுகிறேன். ஏனெனில் முதலாம் வகுப்பில் படிக்கும் போதே அவரது ஆசிரியர், இவர் மிகவும் திறமையானவர் என்று தெரிவித்திருந்தார். விரைவில் புரிந்து கொள்ளக் கூடிய திறமை உண்டு எனக் குறிப்பிட்டார்.