மனைவியின் நடத்தையில் சந்தேகம் – அடித்தே கொன்றார் கணவன்?


தலையில் ரத்த காயம் மற்றும் பாதி எரிந்த நிலையில் டெய்லர் மனைவி வீட்டில் பிணமாக கிடந்தார்.

 

நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓடிய கணவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் சரவணன் (40), டெய்லர். இவரது மனைவி அஞ்சலை (36). பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. ஸ்ரீகாந்த் (5), நிவேஷ் (3) என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுடன் சரவணனின் தாய் ரஞ்சிதமும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

 

சரவணன் ஒழுங்காக வேலைக்கு செல்ல மாட்டார். இதனால் வீட்டுக்கு சரிவர பணமும் கொடுப்பதில்லை. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டதால் வேறு வழியின்றி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று குடும்பம் நடத்தி வந்தார். சில நாட்களில் அஞ்சலை காலதாமதமாக வீடு திரும்பியுள்ளார்.

 

அப்போது, எங்கு சென்று, யாருடன் சுற்றி வருகிறாய் என சரவணன் அஞ்சலையிடம் கேட்டு தகராறு செய்வாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். அப்போது தாய் ரஞ்சிதம் மகனை கண்டித்துள்ளார். அவர் தாயை திட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரஞ்சிதம் தனது பேரன்களை அழைத்துக் கொண்டு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

நேற்று முன்தினம் மாலை சரவணன் திடீரென தனது வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து மனைவி அஞ்சலை உடலில் தீவைத்து கொளுத்தி கொண்டதாக சத்தம் போட்டுள்ளார். இதை கண்ட அப்பகுதியினர் ஓடிவந்து பார்த்தபோது அஞ்சலை வீட்டினுள் உடல் லேசாக கருகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்து சரவணன் நைசாக தப்பி சென்றுவிட்டார்.

 

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சரவணனை நேற்று முன்தினம் இரவே பிடித்தனர்.

 

விசாரணையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது தீவைத்து தற்கொலை செய்து கொள்வதாக அஞ்சலை மிரட்டினார். அதனால் ஆத்திரத்தில் அவரை தாக்கினேன். அவர் மயங்கி விழுந்ததும் கதவை வெளிப்பக்கம் மூடி விட்டு, இரவு அம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டேன். மறுநாள் காலை குடித்துவிட்டு நண்பர்களுடன் சுற்றிவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி எரிந்த நிலையில் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டபடி பயந்து ஓடியதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.

 

போலீசார் கொலை நடந்த வீட்டில் சோதனையிட்ட போது அஞ்சலை இறந்து கிடந்த இடத்தின் அருகே தலையணை கிடந்துள்ளது. மேலும் தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்திருந்தது. அதனால் அடிபட்டு பல மணி நேரம் ஆகியிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, சனிக்கிழமை இரவே மனைவியை அடித்து தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு, அது தெரியாமல் இருக்க உடல் மீது தீவைத்திருக்கலாம். பாதி எரிந்த நிலையில் பயந்துபோய் அணைத்து விட்டு அங்கிருந்து அவர் தப்பியோடி இருக்கலாம்.

 

பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து மனைவி தற்கொலை செய்து கொண்டதாக பொதுமக்களையும் போலீசாரையும் நம்ப வைக்க அவர் நாடகமாடியிருக்கலாமா? என போலீ சார் விசாரிக்கின்றனர். வீட்டின் அருகிலேயே முத்துமாரி அம்மன் கோயில் திருவிழா நடப்பதால் அந்த ரேடியோ சத்தத்தில் சரவணன்,அஞ்சலை இடையே நடந்த சண்டை மற்றும் அலறல் சத்தம் ஆகியவை எதுவும் அக்கம்பக்கத்தினருக்கு கேட்காமல் போயிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

 

சரவணன் சைக்கோவா?

 

போலீசாரிடம் பிடிபட்ட சரவணன் ஒவ்வொரு முறையும் விசாரணையின் போது மாறி மாறி எந்தவித தொடர்பும் இல்லாமல் கூறியுள்ளார். மேலும் அவரது பேச்சுக்கள், நடவடிக்கை எல்லாமே சைக்கோ போன்று இருந்துள்ளன. தான் ஒரு மன நோயாளி என்றும் அதற்காக சிகிச்சை பெற்றதாகவும் போலீசாரிடம் சரவணன் தெரிவித்துள்ளான்.

விபத்துக்குள்ளான ஒருவரை பிழைக்க வைக்கும் வழிகள்!…


நம் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல.

 

பிறப்பு என்பது பெரும் மகிழ்வையும், மரணம் என்பது பெருந்துயரையும் அளிப்பது. மரணத்தை தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு கொடூர விபத்தால் நடக்கும் மரணத்தை நாம் தடுக்க முடியும். விபத்து நடந்த நிமிடத்தில் இருந்து மிக அருகில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்லப்படும் நேரம் மிகவும் முக்கியமானது.

 

இதை மருத்துவர்கள் “பொன்னான நேரம்” என்று தான் சொல்கிறார்கள். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சுவாசக்குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் இறந்து விடுகிறார்கள். அதனால், விபத்தால் பாதிக்கப்பட்டவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் மிகவும் அவசியம்.

 

108-க்கு தொலைபேசித் தகவல் சொல்லியாகிவிட்டது என்று கடமை உணர்வோடு காத்திருத்தல் போதுமானது அல்ல. பொன்னான நேரம் என்று சொல்லக்கூடிய அந்த முதல் ஒரு மணி நேர சிகிச்சையை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் செய்யலாம் என்ற விதி இருக்கிறது. அதுவும் இலவசமாக செய்ய வேண்டும்.

 

பிறகு, அரசு மருத்துவமனைக்கோ அல்லது பல்வேறு வசதிகள் கொண்ட பெரிய தனியார் மருத்துவமனைக்கோ நோயாளியை அழைத்து செல்லலாம். காப்பீடு கோரிக்கைக்கு இதனால் எந்த சிக்கலும் பிற்காலத்தில் நேராது. முதலில் விபத்து அடைந்த நபரின் நிலைமை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதில் மூன்று நிலைகள் இருக்கின்றன.

 

மூச்சு விடமுடியாத நிலை அல்லது இதயத்துடிப்பு இன்மை, பெருமளவு ரத்தம் வெளியாகுதல், நினைவிழந்த மயக்க நிலைமை. இந்த மூன்று நிலையில் உள்ள காயம்பட்டோருக்கு, திறமையாக முதலுதவி செய்தால் அவர்களின் மேலான உயிரை நிச்சயம் காப்பாற்ற முடியும்.

 

காயம்பட்டவர் நினை விழந்த நிலையில் இருந்தால் விபத்தால் அவரது காற்றுப் பாதை, அதாவது மூச்சுக் குழல் அடைப்பட்டு இருக்கும் வாய்ப்பு 90 சதம் வாய்ப்பு இருக்கிறது. அப்போது அவர் மிகவும் சத்தமாகவும், மிகுந்த சிரமத்துடனும் மூச்சு விடுவார்.

 

இது பல கார ணங்களால் நிகழ்கிறது. விபத்தின்போது, அவரது தலை முன்னோக்கி சாய்ந்து, அதனால் அவரது மூச்சுப் பாதை குறுகி இருக்கலாம். தொண்டை தசை அதன் கட்டுப்பாட்டை இழந்து, அதனால் அவரது நாக்கு உள்ளே தள்ளப்பட்டு, காற்றுப் பாதை அடைக்கப்பட்டு இருக் கலாம்.

 

அல்லது, உமிழ் நீர், வாந்தி போன்றவை தொண்டையின் பின்பகுதியில் அடைத் துக்கொண்டு காற்றை தடுத்துக்கொண்டு இருக்க லாம். இதுபோன்ற எந்த சூழ்நிலையும், காயம் பட்டவரின் மரணத்திற்கு காரணமாகி விடும். அதனால், முதலுதவி செய்வோர் உடனடியாக, காயம்பட்டவர் மூச்சு விட ஏதுவாக அவரது மூச்சுக் காற்றுப்பாதையை திறக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 

அவர் எந்நிலையில் விழுந்து கிடந்தாலும் அவரது தலை மேல் நோக்கி, அதாவது, அவர் தலை சற்று மேல் நோக்கி சாய்ந்து, அவரது முகவாய்க்கட்டை மேல் நோக்கிய நிலையில் இருக்கும்படி தூக்கி வைக்க வேண்டும். இதனால் நாக்கு தூக்கப்பட்டு, தொண்டையின் உள்ளிருந்து காற்றுப்பாதை தெளிவடைகிறது.

 

காற்றுப்பாதை ஒரு தடவை திறந்து விடப்பட்டால் விபத்துக்குள்ளானவர் தானாகவே மூச்சு விட ஆரம்பித்து விடுவார். ஆனால், இந்த முதலுதவி செய்யப்பட்டும், அவரால் மூச்சுவிட முடியாவிட்டால், உடனடியாக செயற்கை மூச்சு விடும் முறையை ஆரம்பிக்க வேண்டும். காயம்பட்டவரின் அருகில் முட்டிப்போட்டு உட்காருங்கள்.

 

கழுத்து, மார்பு மற்றும் இடுப்பு இவற்றை சுற்றியுள்ள ஆடைகளை தளர்த்துங்கள். காயம்பட்டோரின் முகவாய் கட்டையை முன்னோக்கித் தூக்குங்கள். அடையாள விரல் மற்றும் நடு விரல்களால் அவரது நெற்றியைப் பின்புறமாக அழுத்துங்கள். இதனால், அவரது தாடை தூக்கப்பட்டு நாக்கு முன்னேறி காற்றுப்பாதை தெளிவாக்கப்படும்.

 

காற்றுப் பாதையை நீங்கள் திறந்து விட்டு இருந்தாலும் கூட, வாந்தி அல்லது உடைந்த பற்கள் அல்லது உணவு போன்றவை காற்றுப் பாதையை அடைத்துக் கொண்டு இருக்கக்கூடும். சாத்தியமானால், எந்தப் பொருள் உங்கள் கண்ணுக்கு தென்பட்டாலும், அவற்றை உடனடியாக நீக்கிவிட வேண்டும்.

 

காயம்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்புங்கள். உங்கள் முதல் இரண்டு விரல்களையும் வாயினுள் விட்டு துழாவுங்கள். ஆனால், ஒளிந்திருக்கும் பொருள்களை தேட முயலவேண்டாம். எந்த பொருளையும் தொண்டைக்கு கீழே தள்ளி விடாமல் கவனமாக இருங்கள். பிறகு, மறுபடியும் அவர் மூச்சு விடுதலை பரிசோதியுங்கள்.

 

இதிலும் அவர் மூச்சு விட சிரமப்படுகிறார் என்றால், அவர் மூச்சுவிடுதலை மீண்டும் உருவாக்க ஒரு உத்தி உள்ளது. அதன் பெயர் செயற்கை மூச்சுமுறை. உங்களது சொந்த நுரையீரல் காற்றைக் காயம்பட்டவரின் நுரையீரலுக்குள் உங்கள் வாய் மூலம் அவரது வாய்க்குள் ஊதுவது தான். அகலமாக உங்கள் வாயை திறங்கள்.

 

ஆழமான மூச்சு எடுங்கள். உங்கள் விரல்களால் காயம்பட்டவரின் மூக்கு துவாரங்களை கிள்ளுவது போல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது வாயை உங்கள் உதடுகளால் மூடிவிடுங்கள். இருமுறை மூச்சு ஊதியபின்பு, கழுத்து நாடியை பரிசோதியுங்கள். இதயத் துடிப்பு இருக்கிறதா? என்பதை பரிசோதியுங்கள்.

 

இதயம் துடித்தால், நாடி உணரப்பட்டால் மூச்சு ஊது தலை ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 16 தடவை தொடர்ந்து செய்யவேண்டும். அவர் இயற்கையான மூச்சு விடும்வரை இப்படி நீங்கள் தொடர்ந்து உதவலாம். அவரது இதயம் துடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இதற்கு வெளிப்புற மார்பு அழுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 

இதயம் வேலை செய்யாததை கீழ்க்கண்ட குறிகளின் மூலம் நம்மால் எளிதில் அறிய முடியும். அவரது முகம், கண் இமைகளின் உட்புறம், விரல் நகம் ஆகியவை வெளிறி நீல நிறமாக இருக்கும். கண்மணிகள் விரிந்திருக்கும். கழுத்தில் நாடித் துடிப்பு இருக்காது.

 

இதற்கு முதலுதவி மேற் கொள்ள, காயம்பட்டவரை அவர் முதுகு சமமாக இருக்கும் வகையில், தரையிலோ, பலகையிலோ படுக்க வைக்கலாம். உங்கள் கையால் ஒரு நல்ல தட்டு ஒன்றை கீழ் மற்றும் இடது கோரை “ஸ்டெர்ணம்” என்னும் பகுதியில், அதாவது, அவரது இடது மார்பின் மேல் பகுதியில் கொடுக்க வேண்டும்.

 

பொதுவாக இது இதயம் மீண்டும் துடிக்கச் செய்ய உதவும். ஒரு வேளை இதற்கும் இதயம் மசியவில்லை என்றால், தொடர்ந்து 10-15 நொடிகள் முயற்சி செய்யலாம். ஒரு நொடிக்கு ஒரு தட்டு என்ற வகையில் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். இது செயற்கை மூச்சு விடும் முறையோடு சேர்ந்து செய்யப் படவேண்டும்.

 

இவ்வாறு சில முயற்சிகளை நாம் செய்வதன் மூலம், அவரது உடல் விபத்தால் கடுமையான இழப்பை சந்தித்த போதிலும் விழிப்புடன் இருக்கும். பிறகு, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, கை தேர்ந்த மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கும்.

 

இந்த செய்முறைகளை படிக்கும்போது நம்மால் இதை எல்லாம் செய்ய முடியுமா என்ற மலைப்பு ஏற்படுவது உண்மையே. ஆனால், சில நாள் பயிற்சிகளின் மூலம் இந்த முதலுதவி நுணுக்கங்களை நாம் கற்றுக் கொண்டால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு அது நிச்சயம் கை கொடுக்கும்.

நண்பர்களுடன் தனது பிறந்தநானை கொண்டாடிய ஒபாமா!


அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு 52 வயதாகிறது.

 

இவரது பிறந்த தினம் வார விடுமுறை நாளான ஞாயிறன்று வந்தது. கடந்த வாரம் முதலே அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. அவரது மனைவி மிஷல் ஒபாமா, ”அன்பே, உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று டுவிட்டரில் கூறியிருந்தார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியேற்ற சட்ட சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் குறித்து ஒபாமா தலைமையில் விவாதம் நடைபெற்றது.

 

விவாதத்தின் முடிவில் சிறுபான்மை துறை தலைவர் நான்சி பெல்லோசி ஒரு பரிசை வழங்கினார். அதில், பிளாக் பாரஸ்ட் கேக்கில் ஒபாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என எழுதப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற இடத்தில் ஜனாதிபதிகள் ஓய்வெடுக்கும் டேவிட் கேம்ப் என்ற சொகுசு விடுதியில் தனது நண்பர்களுடன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் ஒபாமா.

 

எக்ஸ்ட்ரா தகவல்

 

புரூனே சுல்தான் ஹசனல் போல்கியா 1996ல் 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக அவர் ரூ.165.92 கோடி ரூபாயை செலவழித்தார். உலகிலேயே பெரும் செலவிலான பிறந்தநாள் விழா இது.

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்


காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் எல்லை பகுதியில் ரோந்தில் இருந்த இந்திய ராணுவ வீரரை கடத்தி சென்று அவரது தலையை துண்டித்து உடலை மட்டும் இந்திய எல்லை பகுதியில் வீசியது பாகிஸ்தான் ராணுவம்.

அப்பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் அறிக்கை மட்டுமே விட்டது இந்திய அரசு, தற்பொழுது மீண்டும் அத்துமீறியுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.

எமது கோரிக்கைக்கு அமையவே வெலிவேரிய சென்றனர் படையினர்; பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கூறுகிறார்


news

எமது கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்புப் படையினர் வெலிவேரிய போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலபொடத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.

சுத்தமான குடிதண்ணீரைக் கோரி வெலிவேரிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதனை அவதானித்த நான், அது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்தேன் என்று அவர் கூறினார்.
போராட்டம் கலகமாக வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தினால் நான் அவ்வாறு படையினருக்கு அறிவித்தேன். பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு படையினரிடம் கோரியிருந்தேன் என்று அவர் தெரிவித்தார்.
குடிதண்ணீர்ப் பிரச்சினை அடிப்படையானது. அதற்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு படையினரிடம் கோரியிருந்தேன். எனினும், இடம்பெற்ற துர்ப்பாக்கிய நிலைமை வருத்தமளிக்கின்றது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

ஆட்சி மாற்றத்துக்கான ஆரம்பமே இந்த மாகாண சபைத் தேர்தல்கள்; வாக்குகளை இம்முறை சரியாக பயன்படுத்தக் கோருகிறார் ரணில்


news

மஹிந்த ராஜபக்ஷ அரசு, வசதிபடைத்தவர்களுக்கே சகல உதவிகளையும் வழங்கி வருகின்றது. சாதாரண மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களின் மூலம் ஆட்சியை மாற்ற முடியாதாயினும் கூட அதற்கான ஓர் ஆரம்பமாக இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை, நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ஆர்.யோகராஜன், மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான சுப்பையா சதாசிவம், எல்.நேருஜி, எல்.பாரதிதாசன், எம்.ரவீந்திரன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,
இன்று நாடு பூராகவும் நல்ல மழை பெய்கின்றது. ஆனால் மின்சாரக் கட்டணம் மாத்திரம் குறையவில்லை. உலகிலேயே அதிக மின்சாரக் கட்டணத்தைச் அறவிடும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான். அன்று மக்கள் இருட்டைக் கண்டு பயந்தார்கள். இன்று மக்கள் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுகின்றார்கள்.
அம்பாந்தோட்டையில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்தார்கள். அங்கு கிரிக்கெட் விளையாடுவது எமது வீரர்கள் அல்லாது காட்டு யானைகளே. துறைமுகம் இருக்கின்றது. ஆனால் கப்பல் இல்லை.
இந்தத் தேர்தலில் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டாவிட்டால் மீண்டும் விலை வாசி உயரும். இதனை யாராலும் தடுக்க முடியாது.
கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடைந்தமைக்குக் காரணம் எமது ஆதரவாளர்கள் தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்காததே. எனவே இந்த தேர்தலில் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.
உலகிலேயே அதிக மின்சார கட்டணத்தைச் செலுத்தும் ஒரே நாடு இலங்கை மட்டும்தான். அன்று மக்கள் இருட்டைக் கண்டு பயந்தார்கள். இன்று மக்கள் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுகின்றார்கள்.

– See more at: http://onlineuthayan.com/News_More.php?id=186132220206646276#sthash.1fQgq4gS.dpuf