தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட ஏரியூர் அருகேயுள்ள சிகரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் வயது-29. இவர், ஆந்திரத்தில் சொந்தமாக “சிப்ஸ்” கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மாதுசெட்டி என்பவரது மகளுக்கும் திருமணம் செய்து வைப்பதாக சிறு வயதிலேயே பெரியவர்கள் பேசி முடிவு செய்யப்பட்டிருந்ததாம். இருவரும் திருமண வயதுக்கு வந்த பிறகு திருமணத்துக்கு மாதுசெட்டி சம்மதிக்கவில்லை எனத்தெரிகிறது.
இருப்பினும், கண்ணன் தனக்கு பெண் தருமாறு மாதுசெட்டியிடம் அடிக்கடி கேட்டு வந்ததாகக் கூறப் படுகிறது. கடந்த 15-ஆம் தேதி ஆந்திரத்திலிருந்து வீட்டுக்கு வந்த கண்ணன், மாதுசெட்டியிடம் சென்று மீண்டும் தனக்கு பெண் கேட்டு வாக்குவாதம் செய்தாராம்.
இந்த நிலையில், ஊரில் தங்கியிருந்த கண்ணனை திடீரென காணவில்லை. இதுதொடர்பாக, அவரது பெற்றோர் ஏரியூர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காணமால் போன கண்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மேற்கு ஏமனூரைச் சேர்ந்த விவசாயி கருப்பண்ணன் வயது-37 என்பவர் நாகமரை கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பனிடம் சரணடைந்தார்.
பின்னர், அவர் ஏரியூர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். பென்னாகரம் டிஎஸ்பி நடராஜன், காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோரடங்கிய தனிப்படை போலீஸார் கருப்பண்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கண்ணன் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்த விபரம் வருமாறு, மாதுசெட்டி தான் செலவுக்கு ரூ.ஒரு லட்சம் பணம் தருவதாகக் கூறி, கண்ணனைக் கொலை செய்ய கருப்பண்ணனை தூண்டினாராம். இதையடுத்து, மாதுசெட்டியின் நண்பர் பவுனேசன், கருப்பண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து கண்ணனிடம் பேசிப் பழகி அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 19-ஆம் தேதி மான் கறி சாப்பிடலாம் எனக் கூறி, கண்ணனை பவுனேசனும், கருப்பண்ணனும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர்.
பண்ணவாடியான் காடு என்ற வனப் பகுதியில் மூவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கருப்பண்ணன், கண்ணன் ஆகிய இருவரும் காட்டுக்குள் அழைத்துச்சென்றனர்.
காட்டில் மான் பிடிக்க காத்திருக்குமாறு கூறிவிட்டு, வனப் பகுதியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்ணனை கருப்பண்ணன் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர், கண்ணனது சடலத்தை எடுத்துச் சென்று விறகுகளை அடுக்கி எரித்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்ததாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கண்ணனின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் கண்ணன் உடலின் ஒரு சில பாகங்கள் மட்டுமே போலீஸாருக்கு கிடைத்தன. திங்கள்கிழமை இந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாள்ர ஆஸ்ரா கர்க் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.