பெண் தற்கொலை முயற்சி : ஓய்வு இன்ஜினியர் கைது


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் மொட்டையக்கவுண்டர் காட்டை சேர்ந்தவர் தனபாலன், வயது-59. இவர், நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவரது வீட்டில் சேலம் சிவதாபுரத்தை சேர்ந்த சுதா, வயது-4, என்ற பெண் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

பத்து மாதங்களாக வேலை செய்து வந்த சுதாவை, தனபாலன் திடீரென வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். அதில் மனமுடைந்த சுதா, நேற்று முன்தினம், ஐம்பதடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

அப்போது, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இராசிபுரம் தீயணைப்பு துறையினர் சுதாவை உயிருடன் மீட்டனர். அவருக்கு கால்முறிவு ஏற்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனபாலன், தன்னை மானபங்கம் செய்ததாக வெண்ணந்தூர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதையடுத்து தனபாலனை, போலீஸார் கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கட்டண அதிகரிப்பு ஒரு நியாயமான செயற்பாடல்ல; விமல் வீரவன்ச


news

மின் கட்டண அதிகரிப்பானது ஒரு நியாயமான செயற்பாடெனத் தெரியவில்லை என ஆளும் கட்சி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்டது சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையோ என்பது தேவையில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பானது ஒரு நியாயமான செயலாகத் தென்படவில்லை.

இதனைத் திருத்தியமைக்க உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் மின்சார சபையில் தலைவிரித்தாடுகின்ற மாபியாக்களை உடனடியாக இனம்கண்டு விரட்டியடிக்க வேண்டும்,

குறிப்பாக டீசல் திருடும் கும்பல்கள் மற்றும் தமது அடியாட்களை மின்சார சபையில் வேலைக்கமர்த்தும் கும்பல்கள் ஆகியவற்றை முதலில் இனம்காண வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த பிரச்சினை கடந்த 1977 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் உருவான நிலைமையாகும். அதன் பின்னர் தான் அரச உடைமையாகவிருந்த மின்சார சபையானது தனியார் மயமாக்கப்பட்டது இதிலிருந்தே இப் பிரச்சினை ஆரம்பமாகியது.

இப் பிரச்சினையானது எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தாலும் இது நீண்டு கொண்டே செல்லும். இது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் பிரச்சினையே கிடையாது.

இப் பிரச்சினையை அரசினால் தீரக்க முடியாத அதேவேளை, மின்சார துறை முழுமையாக அரசின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் குழு யாழ். விஜயம்


 உத்தியோக பூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர்  இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர்.

இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை உதயன் விருந்தினர் விடுதியில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொண்டதுடன் உதயன் அலுவலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு தாக்குதல் குறித்து நேரில் பார்வையிட்டுள்ளனர்.

யாழில் தங்கியிருக்கும் இவர்கள் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

மாணவர்களின் பணத்தில் கல்வியற் கல்லூரி பீடாதிபதிக்கு கார் பரிசளிப்பு


யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி ஓய்வு பெற்றுச் செல்வதனையடுத்து கல்லூரி  நிர்வாகம் பெரும் எடுப்பில் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகின்றது.

அவரின் ஓய்விற்கு நினைவுப் பரிசாக கார் ஒன்றினை வழங்கவதற்கான ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக மாணவர்களிடம் தலா 1000 ரூபா வீதம் பணம் பெறப்பட்டு வருகின்றது.

அத்துடன் வெளிமாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருக்கும் மாணவர்களிடமும் கட்டாயப்படுத்தி பணம் பெறப்படுகின்றது.

அதுபோல கல்வியை முடித்து வெளியேறியவர்களிடமும் 3000 தொடக்கம் 5000 ஆயிரம் ரூபா வரையில் பெறப்பட்டு வருகின்றது. பணம் பெற்றுக் கொண்டு பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

இது குறித்து கல்வியலாளர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இனியும் பயந்து ஒதுங்காமல் தொடர்ச்சியாகப் போராடுவோம்; வலி.வடக்கு மக்களை அழைக்கிறார் சிறீதரன்


news

“இனியும் பயந்து ஒதுங்கி ஒதுங்கிப் போவதில் பிரயோசனமில்லை. நாங்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்த வேண்டும். எங்கள் நிலத்தை விடுவிப்பதன் மூலமே தமிழர்கள் என்ற எமது இருப்பை உறுதிப்படுத்த முடியும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை அரசு பௌத்தசிங்கள மேலாதிக்க சிந்தனையோடு தமிழ் மக்களைச் சொந்த நிலங்களிலிருந்து எப்படி வெளியேற்றலாமோ அதனைச் செய்து வருகின்றது. இலங்கையில் தமிழர்கள் என்ற இனமே இருக்கக்கூடாது என்பதற்காக அதனை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மொழி ரீதியாக, கலை பண்பாட்டு ரீதியாக இனத்தை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு வடிவமாகத்தான் காணிகளைப் பறிக்கின்றது. எமது இருப்பைத் தீரிமானிப்பதில் நிலம் முக்கியமானது. நிலமில்லாமல் நாங்கள் போராடவும் முடியாது. பேசவும் முடியாது.
நிலங்களைப் பறிப்பதும் அகதிகளாக்குவதும் இன சுத்திகரிப்பின் ஓர் அங்கமே. இந்த நிலப்பரப்பு வெறுமனே அரசியலுக்காகக் கதைக்கும் விடயமல்ல. மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.
இலங்கை அரசு போர் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தது, தமிழ் மக்களின் நிலங்களைப் பறித்து அந்த நிலங்களில் தமிழர்களை அந்நியப்படுத்தி, அந்தப் பகுதிகளில் ராணுவக் குடியேற்றங்களை நிறுவி தமிழர்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைத்து முழுமையான இனச் சுத்திகரிப்பு மேற்கொள்வதற்காகவே.
என்னுடைய வீட்டுக்குப் பிரச்சினையில்லை என்று மற்றவர்கள் நினைக்கக்கூடாது. இது தனியே வலி.வடக்கு மக்களின் பிரச்சினையன்று. நாளைக்கே மல்லாகத்தில், சுன்னாகத்தில் இராணுவத்தினர் காணிகளைப் பறிக்கலாம்.
எனவே யாழ்ப்பாணத்திலுள்ள புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர், சமய நிறுவனங்கள், வர்த்தகர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்திலும் நீதியில்லை. சிங்கள இனவாத அரசு தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கப் போவதில்லை.
எனவே இலங்கை என்ற நாட்டில் எங்களையும் தமது நாட்டின் பிரஜைகளாகக் கருதி எங்களது இடங்களுக்கு இலங்கை அரசு விட வேண்டும். இல்லையேல் நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.